“எல்லோருக்கும் போராடினோம்; ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” ஒரு தாயின் கதறல்

“எல்லோருக்கும் போராடினோம்; ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” ஒரு தாயின் கதறல்
“எல்லோருக்கும் போராடினோம்; ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” ஒரு தாயின் கதறல்
Published on

“எப்பவுமே லேட்டாதான் எழுவா அன்னைக்கு நான் சீக்கிரமே எழுப்பினேன். காலையில 5.30 மணிக்கே எழுந்தோம். போராட்டத்துல எங்க கூடவேதான் வரணும்னு சொல்லி கூட்டிட்டு போனோம். ஆனா அவ எல்லோருக்கும் முன்னாடி போனா. அவள நினைச்சு பெருமையா இருந்துச்சு. ஆனா கடைசியில இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல” தூத்துக்குடி போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்நோலின் தாய் தனது மகள் குறித்து பகிர்ந்து கொண்ட வலி நிறைந்த வார்த்தைகள் இவை.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்நோலினின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஸ்நோலின் செவிலியர் படிப்பு படிக்கும் மாணவி. அவருக்கு ஒரு அழகிய கனவு இருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். தான் ஒரு வழக்கறிஞராக ஆக வேண்டும் என்ற கனவோடு அதற்கான பயணத்திலும் இருந்துள்ளார். 12ஆம் வகுப்பை தனித்தேர்வு மூலம் எழுதி 846 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில்தான் தன் மண்ணுக்கும் மக்களின் நலனுக்காகவும் போராட்ட களம் கண்டுள்ளார் ஸ்நோலின். வீறுநடை போட்டு முன் வரிசையில் சென்றவர் இறுதியில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி விட்டார்.

ஸ்நோலினின் மாமா ஜூடு பேசுகையில், “ஸ்டெர்லைட்டிற்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட ஏராளமான போராட்டத்தில் அவள் பங்கெடுத்தாள். புற்றுநோயின் காரணமாக நண்பர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் கண்முன்னே இறந்ததை பார்த்தாள். இதையெல்லாம் பார்த்து வீட்டிற்கு வந்து கண்ணீர் விடுவாள். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீவிரமாக இருந்தாள். நம்மில் ஒருவருக்கு இப்படி ஏதாவது ஆனால் நாம் சும்மா இருப்போமா? என்பாள். எல்லோருடைய குழந்தைக்காவும் போராடினோம். ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” என்றார் ஸ்நோலினின் மாமா.

“ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சுமார் 10கிமீ  பேரணியாக சென்றோம். அப்போது திடீரென ஒரு காளைமாடு எங்கிருந்தோ ஓடி வந்தது. நாங்கள் பயத்தில் சிதறி ஓடினோம், கூட்டத்தில் எல்லோரும் பிரிந்து விட்டோம். அப்போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நாங்கள் எல்லோருக்குமாக போராடினோம். ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம். அவளுக்கு 17 வயதுதான். அவளது மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். புற்றுநோயால் நாங்க செத்துகிட்டு இருக்கோம்; நாங்க போராடாம யாருங்க எங்களுக்காக போராடுவாங்க?. இந்தத் துப்பாக்கிச்சூட்டுல காயமானவங்களை கூடிக்கிட்டு போக ஆம்புலன்ஸ் கூட இல்ல. ஸ்கூட்டர்லதான் மருத்துவமனைக்கு அழைச்சுட்டு போனோம்” என்கிறார் ஸ்நோலின் அத்தை ஜெயா.

“இது எங்கள் வாழ்க்கைக்கு, வாழ்வாதாரத்திற்குமான போராட்டம். நீரும் ,உணவு இல்லாமல் எப்படி உயிர்வாழ முடியும்? இங்க எல்லாரும் புற்றுநோயால் இறந்து போறாங்க. எங்க தண்ணிய மீன் கூட குடிக்கிறது இல்லைங்க. அதனாலதான் மீன் பிடிக்க எங்க மீனவங்க இலங்கை பக்கம் போறாங்க.  அங்கேயும் குண்டு அடிப்பட்டு சாகுறோம். நாள் முழுக்க இந்தப் பகுதியில் இருக்கிற கடல்ல சுத்துனாலும் இங்க ஒன்னும் கிடைக்காது. எங்களுக்கு கம்பெனி எல்லாம் பிரச்னை இல்ல. எங்க பிரச்னை காற்றையும் குடிநீரையும் மாசுபடுத்துறதுதான். ஸ்நோலின் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தாள். ஆனால் அவளை இப்ப நாங்க இழந்துட்டோம்” என்கிறார் அவரது உறவினரான புரூட்டஸ்.

நாடு ஒரு வழக்கறிஞரை இழந்துவிட்டது. அவரது வீடு பெற்ற பிள்ளையை இழந்துவிட்டது. 

நன்றி: The NEWS Minute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com