பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என பல்வேறு கல்விக் கூடங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கான உதவித்தொகை குறித்த தகவல்களை வழங்கி வருகிறது Buddy4Study என்ற கைபேசி செயலி. இந்த செயலி குறித்து 'ஆப்' இன்றி அமையா உலகின் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
Buddy4Study
“கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா? சரியா?
ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!
முறையா?
ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!” என ரெட் படத்தில் பாடல் ஒன்றுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய வைர வரிகள் இவை. அந்த வரிகள் உணர்த்திய வலிகள் இன்றும் அப்படியே நிற்கிறது. அதுவும் கொரோனா சூழலில் பலர் தங்களது உயர்கல்வியை தொடர முடியாமல் போனதே அதற்கு சான்று.
இந்தியாவில் 300 மில்லியன் மாணவர்கள் பள்ளி கல்வி, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வு என பல்வேறு நிலைகளில் கல்வி பயின்று வருகின்றனர். இருந்தாலும் உயர் கல்வி நிலையில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றல் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஒரே காரணமாக இருப்பது நிதிச் சூழல் என்றே தெரிகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் தொழில்நுட்பத்தின் ஊடாக மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறு உதவித் தொகை குறித்த தகவல்களை அள்ளி வழங்கி வருகிறது Buddy4Study. கடந்த 2011 முதல் இந்த பணியை கல்வியின் உற்ற நண்பனான Buddy4Study செய்து வருகிறது. முதலில் வலைதளத்தின் மூலம் தனது பணியை தொடங்கியது. தற்போது செயலி மூலமும் உதவித்தொகை குறித்த தகவல்களை வழங்கி வருகிறது.
இந்த செயலி மூலம் என்னென்ன தகவல்களை தெரிந்து கொள்ளலாம்?
>ஒன்றாம் வகுப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரையிலான அனைத்து நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைகள் குறித்த விவரங்கள் இதில் கிடைக்கிறது.
>உதவித்தொகையை வழங்கும் நிறுவனம்... எவ்வளவு தொகை மாணவர்களுக்கு கிடைக்கும்? அதை பெறுவதற்கான தகுதி? விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என அனைத்து விவரங்களையும் இதில் அறிந்து கொள்ளலாம்.
>உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கும் உதவித்தொகை குறித்த விவரங்கள் இதில் உள்ளன. முக்கியமாக அனைத்து தகவல்களும் நம்பகத்தன்மை வாய்ந்தது.
>மேலும் அடுத்ததாக வரவுள்ள உதவித்தொகை குறித்த தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
>மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கணிதம், கலை என அனைத்து உயர்கல்வி பிரிவுகளிலும் இந்த செயலி உதவித்தொகை குறித்து விவரங்களை வழங்கி வருகிறது.
>இந்த செயலியை ஆண்ட்ராய்டு இயங்குதளம் பெற்ற போன்களை கொண்டுள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இ-மெயில் தொடங்குவதைபோல இதில் எளிதில் புரொஃபைல் தொடங்கலாம். ஒவ்வொரு புரொஃபைலுக்கும் பொருந்தும் வகையிலான கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களை ஃபில்டர் செய்தும் கொடுக்கிறது இந்த செயலி.
சென்ற அத்தியாயம்: 'ஆப்' இன்றி அமையா உலகு 25: தமிழ் பாடல் வரிகளை தரும் மொபைல் செயலி