அசாம் தேர்தலில் சிறிய கட்சிகளின் பெரிய 'ரோல்'! - ஒரு பார்வை

அசாம் தேர்தலில் சிறிய கட்சிகளின் பெரிய 'ரோல்'! - ஒரு பார்வை

அசாம் தேர்தலில் சிறிய கட்சிகளின் பெரிய 'ரோல்'! - ஒரு பார்வை
Published on

அசாமில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலக் கட்சிகளின் செல்வாக்குகளுடன் கூட்டணி அம்சங்களும் வெற்றி வாய்ப்புக்கு அச்சாணியாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.

போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்), யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்), அசோம் ஜதியா பரிஷத் (ஏஜேபி), ரைஜோர் தால் (ஆர்.டி) மற்றும் அஞ்சலிக் கானா மோர்ச்சா (ஏஜிஎம்)... இந்த கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் ஏஜேபி-ஆர்.டி.-யின் மூன்றாவது அணியுடன் இணைந்து அசாம் தேர்தலை சந்திக்க உள்ளன. இது முக்கோணப் போட்டியாகக் கருதப்படுகிறது.

யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்)

போடோலாண்ட் பிராந்திய கவுன்சிலில் (பி.டி.சி) என்ற மாநிலக் கட்சி, கடந்த ஆண்டு பாஜகவுடன் கைகோத்தது. அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ப்ரோமோட் போரோ இந்தக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார். மத்திய அரசுடன் பல்வேறு போடோ குழுக்களுடன் அமைதி மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவர். யுபிபிஎல் கட்சியானது பாஜகவுடன் கூட்டணியில் எட்டு இடங்களில் போட்டியிடவுள்ளது.

போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்)

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஹக்ரமா மொஹிலாரி தலைமையிலான போடோலாண்ட் கட்சியானது செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சிகளும் ஒன்று. இது மாநிலத்தில் 3 அமைச்சர்களையும், சட்டப்பேரவையில் 12 எம்.எல்.ஏக்களையும் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்தக் கட்சியானது காங்கிரஸுடன் கைகோத்திருக்கிறது. அதன்படி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது.

பிபிஎப்பின் ஒரு முக்கிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிஸ்வாஜித் டைமரி, கட்சியிலிருந்து விலகி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலிக் கானா மோர்ச்சா (ஏஜிஎம்)

மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அஜித் குமார் பூயான் உருவாக்கிய புதிய கட்சி இது. வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது.

அசோம் ஜதியா பரிஷத் (ஏ.ஜே.பி) மற்றும் ரைஜோர் தளம் (ஆர்.டி) (மூன்றாவது அணி)

கடந்தாண்டு சிஏஏ எதிர்ப்பு அசாமில் கடுமையாக இருந்தது. இதன் எதிரொலியாக 2020-ம் ஆண்டு இறுதியில் இரண்டு புதிய கட்சிகள் தோன்றின. அசாம் ஜாதியா பரிஷத் (AJP) மற்றும் ரைஜோர் தளம் (RD) ஆகிய இரண்டு கட்சிகளும் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன.

அசாமின் மிகவும் செல்வாக்குமிக்க இரண்டு இளைஞர் அமைப்புகளான ஆல் அசாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யூ) மற்றும் அசோம் ஜாதியதாபாதி யூபா சத்ரா பரிஷத் (ஏஜேவிசிபி) ஆகியவற்றின் ஆதரவை ஏஜேபி கொண்டுள்ளது. AASU-இன் முன்னாள் பொதுச் செயலாளராக இருக்கும் லுரின்ஜோதி கோகோய் தான் இந்தக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார்.

இவை அனைத்தும் சிறிய கட்சிகளாக இருந்தாலும், அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போகும் அணிக்கு மிக முக்கியப் பங்களிப்பை ஆற்றும் என்பது நிச்சயம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com