‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ ? - இளைஞர்களிடம் ட்ரெண்டிங்காகும் புதிய ஆபத்து..!

‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ ? - இளைஞர்களிடம் ட்ரெண்டிங்காகும் புதிய ஆபத்து..!
‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ ? - இளைஞர்களிடம் ட்ரெண்டிங்காகும் புதிய ஆபத்து..!
Published on

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ஹைட் செல்ஃபி சேலஞ்ச், வாட்டர் பாட்டில் கேப் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், டிக்டாக் ‘பஸ் சேலஞ்ச்’ என இந்த வரிசையில் ‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ எனும் ஆபத்து இளைஞர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. மன ரீதியிலும், உடல் ரீதியிலும் பெரும் தாக்கங்களை இந்த சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. நல்லவை, தீயவை எனும் கலவையாக இருக்கும் சமூக வலைத்தளங்களை இளைஞர்கள் சரியாக கையாளாவிட்டால் விபரீதம் தான் மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ட்ரெண்டிங்காகும் சில சேலஞ்ச்-கள் உயிருக்கே ஆபத்தாகக்கூட மாறிவிடுகின்றன.

சில சேலஞ்ச்கள் பேராபத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்கும். அந்த வகையில் வந்தது தான் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் மற்றும் வாட்டர் பாட்டில் கேப் சேலஞ்ச் ஆகியவை. ஒரு பக்கெட் நிறைய குளிர்ந்த நீரை திடீரென தலை மீது ஊற்றிக்கொள்வது தான் ஐஸ் பக்கெட் சேலஞ்ச். இந்த சேலஞ்ச் மூலம் சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்னைகளும், தண்ணீரை ஊற்றிக்கொள்ளும் நேரத்தில் உடம்பில் ஏற்படும் குளிரும் சிரமமாக இருக்கும். ஆனாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இது கொடூரம் இல்லை என்பதால், சில பிரபலங்கள் கூட இதை செய்தனர்.

இதேபோன்று வாட்டர் பாட்டில் கேப் சேலஞ்ச் இருந்தது. ஒரு தண்ணீர் பாட்டிலின் மூடியை கால் விரலால் தட்டி திறக்க வேண்டும். ஆனால் தண்ணீர் பாட்டிலோ அல்லது பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீரோ கீழே சிந்தக்கூடாது. இந்த சேலஞ்சையும் பலர் செய்து மகிழ்ந்து ட்ரெண்டாக்கினர். இதுபோன்ற சேலஞ்ச்கள் பரவிய அதே நேரத்தில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சில சேலஞ்ச்களும் பரவின.

ஹைட் செல்ஃபி சேலஞ்ச் என்பது சிலரின் உயிர்களை பறித்தது. உயரமான இடத்தில் இருந்து செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது தான் இந்த சேலஞ்ச். சிலர் உயரமான கட்டடங்கள், மலைகள் மீது ஏறி நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்து பகிர்ந்தனர். இதுபோன்ற முயற்சியில் தவறி விழுந்து சிலர் உயிரையும் இழந்தனர்.

இதேபோன்று படுகாயங்களை பலருக்கு ஏற்படுத்தியது கிகி சேலஞ்ச். ஓடும் காரில் இறந்து இறங்கி, கதவை மூடாமல் நடனமாடிக்கொண்டே மீண்டும் காருக்குள் ஏறுவது தான் இந்த சேலஞ்ச். இதனை பலரும் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதே நேரத்தில் பலர் சேலஞ்ச் செய்வதாக விபத்தில் சிக்கிய வீடியோக்களும், கீழே விழுந்த வீடியோக்களும் வெளியாகியிருந்தன.

இதைத்தொடர்ந்து டிக் டாக் எனும் வீடியோ செயலி மூலம் பரவியது ஓடும் பேருந்தை நிறுத்தும் பஸ் சேலஞ்ச். ஓடிக்கொண்டிருக்கும் பேருந்து அல்லது வேறு ஏதேனும் வாகனத்தை நிறுத்தி நடனமாடுவது தான் இந்த சேலஞ்ச். இதையும் பெரும்பாலும் இளைஞர்களே செய்தனர். தமிழகம், கேரளாவில் இந்த சேலஞ்ச் வேகமாக பரவியும் இருந்தது. பல இடங்களில் இதனால் சண்டைகளும் ஏற்பட்டிருந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாறாக இந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பது ‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’. தமிழில் கூற வேண்டுமென்றால் மண்டை ஓட்டை உடைக்கும் சேலஞ்ச். இருவர் சேர்ந்து மற்றொருவரின் பின் மண்டையை தரையில் அடிக்கச் செய்வது தான் இந்த சேலஞ்ச். முதலில் இரண்டு நபர்கள் இரண்டு கால்களையும் தூக்கி தாவிக்குதிப்பார்கள். பின்னர் அவர்களுக்கு இடையே நிற்கும் நபர் தாவிக்குதிக்க வேண்டும்.

அப்போது அவரது காலை பின்புறத்திலிருந்து மற்ற இருவரும் சேர்ந்து தட்டி விடுவார்கள். உடனே அந்த நபரின் பின் பக்க தலை தரையில் அடிக்கும். இந்த கொடூரமான சேலஞ்சால் பின் மண்டையில் அடிப்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற சேலச்ஞ்கள் இளைஞரிடம் பரவுவது பேராபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com