ஓடிடி திரைப் பார்வை 11: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்- அழுத்தமான நம் சமூகத்து சினிமா

ஓடிடி திரைப் பார்வை 11: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்- அழுத்தமான நம் சமூகத்து சினிமா
ஓடிடி திரைப் பார்வை 11: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்- அழுத்தமான நம் சமூகத்து சினிமா
Published on

பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறையினை, அடக்குமுறைகளை மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று வெவ்வேறு வாழ்வியலைக் கொண்ட பெண்களை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டிருக்கும் ஆந்தாலஜி சினிமாவே இந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'.

இயக்குநர் வசந்த் சாய் இயக்கிய இந்த சினிமா Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரது சிறுகதைகளை மையமாக வைத்து, இந்த ஆந்தாலஜி வகை சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது. பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லஷ்மி பிரியா, கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த சினிமாவிற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவி சங்கரன். இளையராஜா இந்த சினிமாவிற்கு இசையமைத்திருக்கிறார்.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் விடுதலை குறித்து பலகாலமாக பலரும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதனால், பொது சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று வினவினால், பெரிதாக ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்கிற இந்த சினிமாவும் அதையே சொல்ல வருகிறது. அதாவது, காலங்கள் பல மாறினாலும் பெண்கள் மீதான அடக்குமுறையின் வடிவம் மற்றும் அதிகார அணுகுமுறை மட்டுமே தொடர்ந்து மாறிவருகிறது; மாறாக பெண்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது என்று பதிவு செய்கிறது இப்படம்.

'சரஸ்வதி' என பெயரிடப்பட்டிருக்கும் முதல் பகுதியில் கருணாகரனின் மனைவியாக 1980 காலகட்டத்தில் நமக்கு அறிமுகமாகிறார் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன். கணவன் எப்போது எப்படி கோவப்படுவாரோ என்ற பதற்றத்துடன் வறுமையை கந்தல் சேலையில் முடிந்துகொண்டு திரை முழுக்க பதற்றத்துடன் நடக்கிறார். எப்போதும் தன்னை குறை சொல்லிக் கொண்டும், அடித்து துன்புறுத்திக் கொண்டும் இருக்கும் கணவர் கருணாகரனை ஒரு புள்ளியில் எதிர்த்து நிற்கிறார் காளீஸ்வரி... பிறகு, அவரது வாழ்வில் நடந்த திருப்புமுனையே மீதிக் கதை.

1990-களுக்குள் அழைக்கிறது பார்வதி நடித்திருக்கும் 'தேவகி' எனும் கதை. இந்த 90களே கூட்டுக் குடும்ப அமைப்பின் கடைசி அத்தியாயத்தை கொண்ட தசாப்தம் என்று கூறலாம். மத்திய அரசு ஊழியரான பார்வதி தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் பலருக்கும் பர்சனல் டைரி எழுதும் வழக்கம் இருந்தது. பார்வதிக்கும் அந்தப் பழக்கம் இருக்கிறது. இந்த சின்ன விசயம் கூட குடும்பத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, பார்வதியின் சுயத்தை எப்படி தொட்டுப் பார்க்கிறது என்பதைச் சொல்கிறது திரைக்கதை. பிறகு, அவர் எதிர்வினையாக என்ன முடிவெடுத்தார் என்பதே தேவகியின் முழுக் கதை.

மேலே சொன்ன இரு கதைகளின் முடிவிலும் ஒரு தேநீர் குவளை வருகிறது. இவ்விரு பெண்களும் தேநீர் அருந்தும் தருணம் முக்கியமானது. இப்போதும் கூட ஆண்களைப் போல பெண்கள் தேநீர் கடைகளில் சர்வசாதாரணமாக நின்று தேநீர் குடிப்பதை அதிகம் பார்க்க முடிவதில்லை. அது ஆண்களின் இடமாகவே இன்றும் உள்ளது. இவ்விரு கதைகளின் நாயகிகள் ஒரு மிடறு தேநீர் அருந்திவிட்டு கண்களை சுழற்றும்போது விடுதலையும் ஆஸ்வாசமும் தெரிகிறது. A lot can happen over Tea என்றும் சொல்லலாம்.

மூன்றாவது அத்தியாயமான 'சிவரஞ்சனி'யில் லஷ்மி பிரியா நடித்திருக்கிறார். 2000களில் நடக்கும் இந்தக் கதையில் லஷ்மி பிரியா ஒரு விளையாட்டு வீராங்கனை. கல்லூரி படிக்கும் காலத்திலேயே தனது தனித்துவ விளையாட்டுகளால் விருதுகளைப் பெறுகிறார். ஆனால், அவர் தனது படிப்பை முடிக்கும் முன்னமே திருமணம், குழந்தை என வாழ்க்கை வேறு திசையில் நகர்த்திக் கொண்டுபோகிறது. இந்த அத்தியாயத்தின் இறுதிக் காட்சியில் பள்ளி செல்லும் மகள் டிபன் பாக்ஸை மறந்துவிட்டுப் போகிறார். அதனை வேகமாக ஓடிப் போய் கொடுத்துவிட்டுத் திரும்புகிறார் லஷ்மி. அவரது விளையாட்டுத் திறமை இப்படித்தான் பயன்படுகிறது என பதிவாகிறது.

மேலே உள்ள கதைகள் காட்சிகள், கதாபாத்திரங்கள் எல்லாமே ஒரே நிலையில்தான் இயங்குகின்றன. ஆனால், அணுகுமுறைகள் வெவ்வேறு. கருணாகரன் தனது மனைவியை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு வன்முறை செய்கிறார். 'தேவகி' அத்தியாயத்தில் அவள் என்னதான் படித்த மத்திய அரசு பதவியில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு சொந்தமாக டைரி கூட எழுத அனுமதியில்லை. இது கை நீட்டி ஒருவரை அடிப்பதைவிடவும் மோசமான வன்முறை. அடுத்ததாக விளையாட்டு வீராங்கனையின் கதை. இதில் அவளது தோள் மேல் அன்பாக கைபோட்டு அவளது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. குடும்பத்தைக் காட்டி அவள் அடிமையாக்கப்படுகிறாள். இதுவும்கூட மேலே சொன்ன வன்முறைகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல.

இந்தக் கதைகளின் நாயகிகள் மிக அமைதியாக அலட்டிக் கொள்ளாமல், அதேநேரம் கதையின் ஆழம் மற்றும் அடர்த்தியை புரிந்து நடித்திருக்கின்றனர். டிபன்பாக்ஸை ஓடிப் போய் கொடுத்துவிட்டு திரும்பும்போது புன்னகைக்கும் லஷ்மியின் முகபாவம் ரசிக்கவைக்கிறது. இருட்டில் அமர்ந்திருக்கும் போது காளீஸ்வரி ஸ்ரீனிவாசனின் முகமும், டீக்கடையில் நின்றி டீ குடிக்கும்போது பார்வதியின் முகமும் அழுத்தமாக நமது மனதில் பதிகிறது.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களை ஒளிப்பதிவாளர்கள் என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவி சங்கரன் ஆகியோர் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். மூன்று விதமான ஒளி அமைப்புகள் நம்மை அந்தந்த தசாப்தங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. இளையராஜா, சுதா ரகுநாதன் இசையும் மூன்று வெவ்வேறு தசாப்தங்களுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

சின்ன பட்ஜெட்டில் நல்ல சினிமாக்களை எடுப்பது எப்படி என வசந்த் சாய் போன்ற மூத்த இயக்குநர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு காட்சி: ட்ராஃபிக்கில் சில ஸ்கூட்டர்கள் ரயில்வே கிராஸிங்கில் ரயில் கடந்து செல்வதற்காக காத்திருக்கிறார்கள். பெரும் ஒலியுடன் ரயில் செல்கிறது; பிறகு கேட் திறக்கப்பட்டதும் ட்ராஃபிக் சரியாகிறது. இந்தக் காட்சியில் ரயிலும் காட்டப்படவில்லை, ரயில்வே கேட்டுக் காட்டப்படவில்லை. ஆனால், ஒரு ரயில்வே கிராஸிங் காட்சி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் சினிமா நுட்பம். இப்படியாக படம் முழுக்க குறிப்பிட்டுச் சொல்ல நிறைய உண்டு. 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' ஒருமுறைக்கு சில முறை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com