தங்களின் தனித்திறமையால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்து, கண் மூடித் திறக்கும் இடைவெளியில் நிரந்தரமாய் மறைந்துபோனாலும், கலைஞர்கள்,ரசிகர்களின் மனதில் மறைந்துபோவதில்லை.
மிகவும் தனித்துவமான தன் வசீகரிக்கும் குரலால், இசை ரசிகர்களை கட்டிப் போட்ட பெருமைகொண்ட மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று (29-04-1973).
நீதிக்கு தண்டனை திரைப்படத்திற்காக, சின்னஞ்சிறு கிளியே என்னும் பாடலை ஜேசுதாஸுடன் பாடும்போது ஸ்வர்ணலதாவின் வயது 14.
கேட்கும் அனைவரையும் கொண்டாட வைத்த மாணிக்க குரல் கொண்ட ஸ்வர்ணலதா, எம்.எஸ் விஸ்வநாதனின் ஹார்மோனிய இசையில் அறிமுகமானவர். பின்பு இளையராஜாவும் ரஹ்மானும் இவரது குரலை மிகக் கவனமாக வரித்துக் கொண்டார்கள். பாடகிகளில் எஸ்.ஜானகிக்குப் பிறகு எந்த மொழியில் பாடினாலும் உச்சரிப்புப்பிழையின்றி அம்மொழியின் தன்மையை உணர்ந்து பாடியவர் ஸ்வர்ணலதா என்பதை தமிழிசைத்துறையே கொண்டாடியது.
குரு சிஷ்யன் திரைப்படத்தில், போதையை வெளிப்படுத்தும் பாடலான “உத்தம புத்திரி நானு” முதல், தாயன்பை வெளிப்படுத்தும் ”சின்னஞ்சிறு கிளியே”,மெல்லிசைப் பாடலான “மாலையில் யாரோ”, துள்ளலிசைப் பாடலான “ஆட்டமா தேரோட்டமா” என பல்வேறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்பாடல்களை, அதன் தன்மை மாறாமல், அசாதாரணமான பாணியில், தனது தனித்துவமான, மரகதக் குரலால் ரசிகர்களின் மனதில் பதியவைத்தவர் ஸ்வர்ணலதா.
சின்னத்தம்பி படத்தில், ’போவோமா ஊர்கோலம்’, ’நீ எங்கே என் அன்பே’, அலைபாயுதே படத்தில், ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’, கருத்தம்மாவில்’போறாளே பொன்னுத்தாயி’ உட்பட ஏராளமான பாடல்களால் நம்மை வசப்படுத்திய ஸ்வர்ணலதா, மிக விரைவாக வானை விட்டு நீங்கிய நட்சத்திரம்.
Idiopathic Pulmonary Fibrosis என்னும் அரிதான, விநோதமான நோயால், நுரையீரலுக்குச் செல்லும் காற்றைத் தடுத்து சுவாசிப்பதைச் சிரமப்படுத்தும்நோயால் அவதிப்பட்ட அவர், 2010, செப்டம்பர் 12-ஆம் தேதி விடை பெற்றுக்கொண்டார். ஸ்வர்ணலதா, பின்னணி பாடகராக நினைக்கும் ஒவ்வொருகலைஞருக்கும் ஓர் ஆதர்சம்.