’சாமி சாமி’ பாடலின் தெலுங்கு வெர்ஷன்தான் எனக்கு பிடித்திருந்தது - பாடகி ராஜலட்சுமி பேட்டி

’சாமி சாமி’ பாடலின் தெலுங்கு வெர்ஷன்தான் எனக்கு பிடித்திருந்தது - பாடகி ராஜலட்சுமி பேட்டி
’சாமி சாமி’ பாடலின் தெலுங்கு வெர்ஷன்தான் எனக்கு பிடித்திருந்தது - பாடகி ராஜலட்சுமி பேட்டி
Published on

நாளை ரிலீஸாகும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள 'சாமி சாமி' பாடல் ஏ டூ செட் கால கிட்ஸ்களிடமும் ஹிட் அடித்து ’சாமி’ ஆடவைத்துக் கொண்டிருக்கிறது. 4 மொழிகளில் வெளியான இப்பாடலை தமிழில் செம்ம்ம்ம குதூகலத்துடன் பாடியிருக்கிறார் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி செந்தில் கணேஷ். தெலுங்கு ‘சாமி’ பாடலுக்குப்பிறகு யூடியூபில் அதிக பார்வைகளைக் கடந்தது அதகளப்படுத்திக் கொண்டிருப்பது தமிழ் ‘சாமி’பாடல்தான். உற்சாகத்தில் மிதந்துகொண்டிருக்கும் ராஜலட்சுமி செந்தில்கணேஷிடம் பேசினோம்,

’சாமி.. சாமி’ பாடிய அனுபவம் குறித்து?

”கடந்த அக்டோபர் மாதம் ஒரு நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் சென்றிருந்தபோது, தேவிஸ்ரீ பிரசாத் சாரின் மேனேஜர் போன் செய்து, ‘டிஎஸ்பி சார் ஆபிஸில் இருந்து பேசுறோம். ஒரு பாட்டு இருக்கு. நேரில் வரவேண்டும்’ என்றார். படம் குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லமுறையில் பாடவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை வருவதற்கு இரண்டு நாட்களாகும் என்று டைம் கேட்டேன். அதுவரை காத்திருந்தார்கள். நான் நேரில் சென்றபோது தெலுங்கு வெர்ஷன் மட்டும் முடித்திருந்தார்கள்.

‘இதுதாம்மா ட்யூன். இதை அப்படியே தமிழ்ல பாடப்போறீங்க’ன்னு சொல்லி போட்டுக் காட்டினார்கள். நான் பாடிக்காட்டியதும் ’ரொம்ப சூப்பரா இருக்கு ராஜலட்சுமி. உங்கக் குரலுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு. நீங்களே பாடிடுங்க’ என்று என்கரேஜ் செய்தார்கள். மதியம் 12 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிவரை பாடினேன். ’முதலில் பல்லவியை பாடிவிட்டு, அதனை இரண்டு மூன்று விதமாக பாடி, அதில் எது சிறப்பாக வருகிறதோ அதனை எடுத்துக்கொள்ளலாம்’ என்றார் தேவிஸ்ரீ பிரசாத் சார். பாடலை பல மாடுலேஷன்களில் பாடியதால் அதிக நேரம் எடுத்தது. ஒவ்வொரு மாடுலேஷனையும் ஃபுல்லா பாடிக் காட்டினேன். அதில், க்ளிக்கான ஒன்றுதான் இந்த சாமி பாடல். இதுவரை ’விஸ்வாசம்’, ‘அசூரன்’, ’சார்லி சாப்ளின்’ படங்களில் பாடல்களை டூயட்டாகத்தான் பாடியிருக்கிறேன். தனியாக பாடியது இதுதான் முதல்முறை. அதனால், இது எனக்கு எப்போதும் ஸ்பெஷல்தான். தேவிஸ்ரீ பிரசாத் சார் கொடுத்த தைரியமும் சாமி பாடல் எனக்கும் பிடித்திருந்ததாலும் பாடல் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்தது”.

’சாமி’ பாடலின் எந்த மொழி வெர்ஷன் உங்களுக்குப் பிடித்திருந்தது?

“எனக்கு தெலுங்கு வெர்ஷன் தான் பிடித்திருந்தது. குரலை எப்படி ஏற்ற இறக்கத்தோட பாடணும்னு தெலுங்கு வெர்ஷனைப் போட்டுக்காட்டித்தான் பாட வைத்தார்கள். அதனால்தான், என்னவோ தமிழைவிட எனக்கு தெலுங்கு வெர்ஷனை பிடித்துவிட்டது. இதுவரை 50 தடவைக்குமேல் கேட்டுட்டேன்”.

முழுக்கவே ஹை-பிட்ச்ல பாடியது கடினமாக இருந்ததா?

”‘சாமி சாமி’ன்னு வருதேன்னு நினைச்சி பக்திகரமாக பாடிவிடலாம்தான். ஆனால், இது உற்சாகமாக... காதலனை வம்பிழுத்து கிண்டல் செய்யும் குத்துப்பாட்டு மாதிரியான பாடல். அதனால், இந்த சாமி நார்மல் சாமியாக இல்லாமல் சாமியேய் என்று வரும்படி நான் கொஞ்சம் மாற்றிக்கிட்டேன். எல்லா மொழியிலும் அந்தந்த மொழிக்குரிய அழகோடு வந்திருக்கிறது. நாட்டுப்புற இசையில் சவுண்டாக பாடுவது, துள்ளலுடன் பாடுவது போன்றவை புதிதல்ல. காலங்காலமாக இருக்கிறது. அதனால், இது ரொம்ப புதிது அல்ல. உடனே பிக்கப் பண்ணக்கூடியதாகத்தான் இருந்தது. ஆனாலும், ஹைபிட்ச்சில் பாடியது தொண்டை கட்டிக்கொண்டது”.

’சாமி’ பாடலின் ராஷ்மிகா உடை போலவே பாடலின் மேக்கிங் வீடியோவில் நீங்களும் அணிந்திருக்கிறீர்களே? இது தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா?

“இதெல்லாம் தானா நடந்தது. ’புஷ்பா’ பெரிய படம் என்பதாலும் ட்யூன்கள் வெளியில் சென்று விடக்கூடாது என்றும் நேரடியாக வரவைத்து பாடவைத்தார்கள். இல்லையென்றால், ஏற்கனவே ரஃப் ட்ராப் அனுப்பி வைத்திருப்பார்கள். அதனால், திரும்பவும் சொல்கிறேன். படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. உடை தானாகவே அமைந்துவிட்டது. ’சாமி’ பாடலை பாடி முடித்ததும், அதற்கடுத்தவாரம் போன் செய்து ’பாடலின் மேக்கிங் வீடியோ இருக்கிறது. அதற்கேற்றவாறு வந்துவிடுங்கள்’ என்றார்கள். இது ஒரு நாட்டுப்புற பாடலாக இருந்தால் பட்டுப்புடவையோ கண்டாங்கி சேலையோ கட்டிச் சென்றிருப்பேன். ஆனால், இது ஒரு பெப்பி பாடல் என்பதால் ஜிலு ஜிலு என்றிருக்கும் ஒர்க் சேரியை கட்டிச் என்றேன். அதுக்கூட, என் நாத்தனார் பிரியா சந்திரனின் புடவை. எனக்கு ரொம்பப் பிடித்ததால், அவங்கக்கிட்டருந்து சுட்டுட்டேன். மேக்கிங் வீடியோவுக்கு போகும்போது ’ஒரே ஜிகு ஜிகுன்னு வந்திருக்காங்க’ன்னு கலாய்ச்சாங்க. பாடி முடிச்சதும் ’நடிச்ச மாதிரியே மேக்கிங் வீடியோவுல பாடிருக்கீங்க’ன்னும் எல்லோருமே பாராட்டினாங்க.

அப்போ, உங்களுக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கு?

” நல்ல ரோல் வந்தால் நடிப்பேன். உறுதுணை கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பா நடிப்பேன். அதுக்கான ஆசையும் இருக்கு”.

உங்கள் பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகிருக்கு. ஆனால், இசையமைப்பாளர்கள் உங்கள் குரலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறீர்களா?

”இல்லவே இல்லை. நல்லாவே அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். எல்லா இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் எப்போதும் அவங்கக் கதைக்கு அவங்கப் பாடலுக்கு யாரோட குரல் செட்டாகும்னுதான் பார்ப்பாங்க: யோசிப்பாங்க. அப்படி யோசிக்கும்போது நாம் பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக வாய்ப்புக் கொடுப்பார்கள். இப்போதே, எனக்கு நல்ல அங்கீராம்தான் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு தாய்வீடு மக்களிசை. திரைப்பட பாடல்கள் கிடைப்பது எக்ஸ்டா போனஸ் கிடைப்பது மாதிரி. எப்போதும் எங்கள் பயணம் மக்களிசை நோக்கித்தான் இருக்கும். கடவுள் இப்போ, சாமி பாட்டு பாடும்போது இன்னும் பத்து மேடைகளில் பாடக்கூப்பிடுவார்கள். அங்கு மக்களிசைப் பாடல்களும் பாடமுடியும். திரை இசைப் பாடல்கள்தான், அதற்கு உறுதுணையாக இருக்கின்றன”.

’சாமி’ பாடல் காதலனை போற்றிப்பாடும் பாடல்... நீங்களும் காதல் திருமணம்தான். உங்கள் கணவரை என்ன சொல்லி அழைப்பீர்கள்?

“சாமி சாமி பாடல் நிஜத்திலும் பாடுவதற்கு தகுதியானவர் என் கணவர். காதலிக்கும்போதும் சரி... இப்போதும் நான் அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன். அவரும் இப்போவரை என்னை செல்லம், தங்கம்னுதான் கூப்பிடுவார். எனக்கு பாடல் பாட வாய்ப்பு வந்தாலே எப்படி பாடப்போறோம்ங்கிற பயம் இருக்கும். ’நீ பயப்பட்டக்கூடாது. உனக்குன்னு தனித்துவமான குரல் இருக்கு. எது வருதோ அதைப் பாடு’ன்னு சொல்லி ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பார். ’புஷ்பா’ பாடல் ரெக்கார்டிங்கின் போது அவரும் கூடவே இருந்தார். எனக்கு எப்படி சொன்னால் புரியும் என்று எடுத்து புரிய வைப்பார். பெரிய தைரியமே அவர்தான்”.

அதேசமயம், காதலனை சாமி சாமி என்று பாடும்போது பெண்ணடிமைத்தனம் என்று தோன்றவில்லையா?

“எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. இந்தப் பாட்டில் ஹீரோயின் ரொம்ப வெட்கப்பட்டு தலைகுனிந்து பாடவில்லை. அவங்களே சாமியைக் கூப்டு ரெண்டு அடி அடிக்கிற மாதிரிதான் பாடுறாங்க. ஒரு கெத்தா, போல்டா கூப்பிடுறாங்க. வாயா சாமி என்பது ’யோவ் வாயா’ என்றுதான் அர்த்தம். ஆணுக்கு நிகராகத்தான் அது இருக்கும். காதலில் பெண்ணடிமைத்தனம் எல்லாம் இல்லை. அதை காதலன் காதலிதான் முடிவு செய்யவேண்டும். வெளியில் இருப்பவர்கள் சொல்லக்கூடாது. ’எனக்கு அப்படி கூப்பிடுறதுதான் பிடிக்கும்’னு அவங்க நினைச்சிட்டா அது பெண்ணடிமைத்தனம் கிடையாது. இரண்டுப் பேருக்கும் ஒரு புரிதலான காதல்.

மறக்க முடியாத பாராட்டு?

”இது டப்பிங் படம். பாடிவிட்டு யாரிடமும் நான் பெரிதாக சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், பாடல் வெளியாகி 1 வாரம் கழிச்சி அம்மா கிரியேஷன் சிவா சார் போன் செய்து ’சாமி பாட்டு சூப்பரா இருக்கு’ என்று பாராட்டியது மறக்க முடியாதது. ஒரு அப்பாவின் ஆசிர்வாதமாகவே பார்க்கிறேன்.‘சின்ன மச்சான்’ பாடலுக்குப்பிறகு அதிக பாராட்டுக் கிடைத்தது சாமி பாடலுக்குத்தான். எங்கு சென்றாலும் ‘சாமி வேற லெவல்’ என்கிறார்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பாடல் பாடியப்பிறகு மக்களிடம் ரீச் ஆகுமா? பிடிக்குமா என்றெல்லாம் தோன்றியது. ஆனால், இன்ஸ்டா ரீல்ஸில் எல்லாம் போட்டு தமிழில் பெரிய ரீச் ஆகிவிட்டது”.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com