Overthinking - அதீத சிந்தனை அதிக ஆபத்து! விடுபட சில எளிய வழிகள்!
Overthinking kills your happiness! Overthiking is a worst enemy!
இரவு நாம் தூங்கப்போகும்போது நாளை என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துவைப்போம். நாள் முழுவதும் என்னென்ன நடந்தது என்பதை யோசிப்போம். நடந்ததெல்லாம் நன்மைக்கே... நடப்பதும் நல்லதாகவே அமையட்டும் என்பதைவிட இப்படி நடந்துவிட்டதே என்றுதான் பலரும் வருத்தப்படுவோம். அந்த வருத்தமே பயமாக மாறி, பயத்தின் விளைவாக இப்படி நடந்துவிடுமோ அல்லது அப்படி நடந்து இருந்தால் என்ன ஆவது? என்று யோசிப்பதைத்தான் அதீத சிந்தனை என்கிறோம். ஆங்கிலத்தில் Overthinking என்று சொல்லக்கூடிய வார்த்தையை நேர்மறையாகவும் பயன்படுத்தலாம் அல்லது எதிர்மறையாகவும் பயன்படுத்தலாம்.
ஆனால் யாரும் இதை நேர்மறையான எண்ணங்களுக்குப் பயன்படுத்துவதில்லை. ஒருவித அழுத்தம் மற்றும் மன பதற்றத்தின்போது நடக்காத ஒன்றை யோசித்து வருத்தப்படும் நிலைதான் இந்த overthinking. பெரும்பாலும் தன் வாழ்க்கையில் முன்பு நடந்த, கேள்விப்பட்ட ஒரு விபத்து அல்லது பிரச்னை ஆழ்மனதை ஆட்கொண்டு, அதைப்பற்றிய சிந்தனையே மனதை நிறைக்கும்போது ஒருவித பயம் அல்லது கிளர்ச்சி மனதில் உருவாகும். இதனால் அந்த செயலின்மீது பயம், வெறுப்பு அல்லது கோபம்கூட உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசிக்கும்போது அதுவே மன பதற்றம், எரிச்சல் மற்றும் ஒருவித அதிர்ச்சிக்குள் நம்மை தள்ளிவிடும். இது மனதளவில் மட்டுமல்லாமல் பல உடல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும். மன அழுத்தத்தை அதிகரித்து, சிந்திக்கும் திறனைக் குறைக்கிறது. மேலும் எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாத நிலையையும் உருவாக்கிவிடும்.
எனவே இந்த அதீத சிந்தனையிலிருந்து வெளிவர முதலில் உங்களை அதிக சோர்வு அல்லது அதிக பதற்றத்திற்கு உட்படுத்துகிற விஷயத்தைக் கண்டறிந்து அதிலிருந்து வெளிவர வேண்டும். பலருக்கும் நாம் ஏன் அதிகமாக சிந்திக்கிறோம் என்ற கேள்வி எழும். ஆனால அதற்கான பதிலை தேடமாட்டார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்தான் overthinkingக்கு நாம் வைக்கும் முதல் முற்றுப்புள்ளி.
சில எளிய வழிகள் overthinking-லிருந்து வெளிவர உதவும்.
எண்ணச்சிதறல் எங்கு உருவாகிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை களையவேண்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு சமையல் வேலையில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும் என்றால் புதிய ரெசிப்பிக்களை, கிச்சன் வேலைகளைக் கண்டறியுங்கள். அதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லுங்கள். புதிய திட்டங்களை உருவாக்குங்கள். இது சமையல் வேலைக்கு மட்டுமல்ல; மற்ற அனைத்திற்கும் இதுபோன்று அடுத்தது என்ன என்ற எண்ணத்தை வளர்த்தாலே உங்களை சோர்வுக்கு உட்படுத்துகிற, வருத்தத்தில் ஆழ்த்துகிற சிந்தனைகளுக்கு இடம் இருக்காது.
நன்றாக இழுத்து மூச்சுவிடுங்கள். அதிக கோபம் வரும்பொது கண்களைமூடி, நன்றாக மூச்சை இழுத்துவிடுங்கள் என சொல்வார்கள். காரணம் எவ்வளவு மோசமான உணர்ச்சியாக இருந்தாலும், நன்றாக மூச்சை இழுத்துவிடும்போது அந்த உணர்ச்சி கட்டுக்குள் வரும்.
வசதியான ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு கழுத்து மற்றும் தோள்ப்பட்டையை ரிலாக்ஸ் செய்யவேண்டும். ஒரு கையை மார்பிலும், மற்றொரு கையை வயிற்றிலும் வைத்துக்கொண்டு, கவனத்தை ஒருநிலைப்படுத்தி, நன்றாக மூச்சை இழுத்துவிடுங்கள். இந்த பயிற்சியை ஒரு நாளில் 5 நிமிடங்கள் 3 முறை செய்தால், மன ஓட்டம் குறைந்து அதீத சிந்தனை பிரச்னையும் கட்டுக்குள் வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் தியானம் செய்வது அனைத்துவிதமான மனம் சார்ந்த பிரச்னைகளிலிருந்தும் மீண்டுவர உதவும் என்கின்றனர் அவர்கள்.
மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஒருவருக்கு செய்யும் உதவியானது மற்ற அனைத்து விஷயங்களையும் வேறு கோணத்தில், அதாவது நேர்மறையாக அணுக உதவும். எப்போதாவது உடல்நிலை சரியில்லாத பக்கத்து வீட்டுக்காரருக்கு காய்கறிகள் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா? சாலையில் குழந்தையுடன் செல்லும் பெண்ணுக்கு உதவியிருக்கிறீர்களா? இதுபோன்ற சிறுசிறு உதவிகள்கூட நாள்முழுதும் மனதுக்கு ஒருவித மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் உருவாவதைத் தவிர்க்க உதவும்.
எங்கு உங்கள் சந்தோஷம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதன்மீது கவனத்தை திசை திருப்புங்கள். மகிழ்ச்சியே நேர்மறையான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தியானம், நடனம், உடற்பயிற்சி, இசையை கற்றல், ஓவியம் வரைதல் போன்றவற்றில் கவனத்தைத் திருப்பலாம்.
அனைத்தும் கச்சிதமாக நடக்கவேண்டும் என்று நினைக்கவேண்டாம். அனைத்தும் எப்போதுமே நினைத்ததுபோல் நடக்காது. நம்மால் முடிந்த சிறந்ததை கொடுத்து இருக்கிறோம் என்ற எண்ணத்தை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
பயத்தின்மீதான அணுகுமுறையை மாற்றுங்கள். கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் ஏற்படும் பயம் அல்லது புதிதாக ஒரு விஷயத்தில் காலடி வைக்க ஏற்படும் பயம், தோல்வி குறித்த பயம் ஆகியவற்றை கலையவேண்டும். எப்போதுமே வெற்றிகிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே எதையும் தொடங்கக்கூடாது.
உங்களுக்கான சிறந்ததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நான் சிறந்தவனாக விளங்கவில்லை என்ற எண்ணமே அதீத சிந்தனைக்கு தூண்டிவிடும். கடின உழைப்பை மட்டுமே கருத்தில்கொண்டால் தேவையில்லாத சிந்தனைகள் மனதில் இடம்பெறாது.