வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்டால் இந்த எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்தே கிட்டத்தட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் ‘work from home' என்று சொல்லக்கூடிய வீட்டிலிருந்தே வேலைசெய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்தே வேலைசெய்வது கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்றாலும், வீட்டிற்குள்ளேயே அமர்ந்திருப்பது பல மன மற்றும் உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக 8 - 10 மணிநேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது உடல் வசதியான நிலையில் இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலானோருக்கு அலுவலகம் போன்று சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட டேபிள் மற்றும் நாற்காலி வசதி இருக்காது. நிறைய பேர் வீட்டிலுள்ள சாதாரண பிளாஸ்டிக் சேர், கட்டில் மற்றும் தரையில் அமர்ந்து லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலைசெய்கின்றனர். இதனால் கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மூட்டுவலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். எனவே வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் இதுபோன்ற தசை பிடிப்பு மற்றும் வலிகளை தவிர்க்க தினந்தோறும் சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சிகளை படுக்கையின்மீதும் செய்யலாம்.
முழங்காலை மார்புவரை உயர்த்துதல்
இந்த பயிற்சி முதுகுவலியைக் குறைக்கும். நேராகப் படுத்துக்கொண்டு வலது முழங்காலை மேல்நோக்கி மடக்கி மார்புவரை கொண்டுசென்று 5 நொடிகள் அப்படியே இருக்கவேண்டும். அதேபோல் இடதுபக்கமும் செய்யவேண்டும். பிறகு இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து மடக்கி மார்புவரை கொண்டுசென்று 5 நொடிகள் வைத்து மீண்டும் பழைய நிலையை அடையவேண்டும்.
இடுப்பை திருப்புதல்
நேராக கை, கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு உடலின் மேற்பகுதியை அசைக்காமல் கீழ்ப்பகுதியை மட்டும் இடது புறமும் வலதுபுறமும் மாறி மாறி மெதுவாகக் கொண்டு செல்லவேண்டும். இது கால்கள் மற்றும் இடுப்பு வலியிலிருந்து விடுபட உதவும். ஒருநாளைக்கு குறைந்தது 15- 20 முறை செய்யவேண்டும்.
முழங்கால் பயிற்சி
நேராகப் படுத்துக்கொண்டு வலது பாதத்தை இடது முழங்கால்மீது 5 நொடிகள் வைக்கவேண்டும். பிறகு இடது பாதத்தை வலது முழங்கால்மீது 5 நொடிகள் வைக்கவேண்டும்.
இந்த மூன்று எளியப் பயிற்சிகளும் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஆங்காங்கே ஏற்படும் வலியைக் குறைத்து உற்சாகமாக இயங்க உதவும். இந்தப் பயிற்சிகளை குறிப்பிட்ட நேரத்தில்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. நீண்ட அமர்ந்து வேலை செய்துவிட்டு சிறிது இடைவெளி எடுக்கும்போது இந்தப் பயிற்சியை செய்யலாம். மேலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த எளியப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் உடலின் வளைவுத் தன்மைக்குமேல் உடலை சிரமப்படுத்தி திருப்பக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.