சில நேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற கதைகளுள் ஒன்று. இதே தலைப்பில் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகும் சினிமா ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை.
நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அபி ஹாசன், ரித்விகா, ரியா, பிரவீன் பாலா, அஞ்சு சூரியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சினிமாவை இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட். மணிகண்டன் வசனம் எழுதியிருக்கும் இந்த சினிமா ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெவ்வேறு வாழ்வியல் சூழல்களைக் கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்க முயல்கிறது.
அசோக் செல்வனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்பான அப்பா நாசர் மீது எப்போதும் கோவத்தை கக்கும் அசோக் செல்வனுக்கு வாழ்க்கை மிகப்பெரிய இழப்பைத் தருகிறது. நடு இரவில் நடந்த ஒரு விபத்துடன் மணிகண்டன், அபிஹாசன், ரித்திவிகா தம்பதிகள் என பலரும் இணைக்கப்படுகிறார்கள். பிறகு அவரவர் மனதில் குறிப்பிட்ட அந்த விபத்து ஏற்படுத்தும் மாற்றங்களே திரைக்கதை.
கதையாக சில நேரங்களில் சில மனிதர்கள் நன்றாக உள்ளது. ஆனால் திரைக்கதை கொஞ்சம் சொதப்பல் தான். முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒன்றோடொன்று ரசிகர்களே காட்சிகளை இணைத்து புரிந்து கொள்ள முற்பட வேண்டியிருக்கிறது. தெளிவற்ற திரைக்கதையினால் ஒரு நல்ல கதை கொஞ்சம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் இரண்டாம் பாதி ரசிகர்களை இருக்கையில் ஹோல்ட் செய்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் மனித மனங்கள் சின்னச் சின்ன மன்னிப்புக்கோரலால் விடுதலை பெறும் காட்சிகள் இதம். உணர்வுப்பூர்வமான முழுமையான சினிமாவாக வந்திருக்கிறது சில நேரங்களில் சில மனிதர்கள்.
சகமனிதர்கள் மீது, முக்கியமாக நமது குடும்ப உறுப்பினர்களின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வேண்டிய விதம் குறித்து நமக்கு புரிய வைக்கிறது இந்த சில நேரங்களில் சில மனிதர்கள்.
பல இடங்களில் படம் நாடகத்தன்மையுடன் இருப்பதை உணர முடிகிறது. மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு ஓகே ரகம். இன்னுமே லைட்டிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் கோர்வையாக வருவதற்கு இயக்குநரை மட்டும் காரணமாச் சொல்ல முடியாது. ஒளிப்பதிவாளரின் பங்கும் முக்கியமானது., என்றாலும் ஒரு இயல்பான சினிமாவாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ரிதனின் பின்னனி இசைக்கு பாராட்டுகள்.
நடிப்பை பொறுத்தவரை மணிகண்டன் இந்த சினிமாவிலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திப் போயிருக்கிறார். அசோக் செல்வனின் நடிப்பில் நல்ல பக்குவம் தெரிகிறது. அசோக் செல்வனுக்கு ஜோடியாக வரும் பெண் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற உணர்வைத் தருகிறார். ரசிகர்களின் மனதில் பளிச்சென நெருக்கமாகும் சாயல் அவருடையது. நடிப்பும் பாராட்டத்தக்கது.
ஒரு தத்துவார்த்த சினிமாவை எந்த அளவிற்கு ரசிகர்களிடன் கொண்டு சேர்க்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்களை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.