காரசாரமான உணவு என்றாலே அதில் உப்பும் காரமும் சரியாக இருக்கவேண்டும் என்பதுதான். காரம் அதிகமாக இருந்தால்கூட சாப்பிட்டு விடலாம். ஆனால் ஒரு உணவில் உப்பு சுவை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ உணவின் சுவையே மாறிவிடும். சிலருக்கு உப்புசுவை சற்று அதிகமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவர். அப்படி உப்பு சுவையை விரும்பி சுவைப்போருக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் வரும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். சோடியம் என்பது உணவில் கலந்தபின் அவற்றை கணக்கிட முடியாது என்பதால் உணவில் எவ்வளவு சேர்த்திருக்கிறோம் மற்றும் எவ்வளவு சேர்க்கவேண்டும் என்று அளவிட முடியவில்லை என்கிறது International Journal of Epidemiology.
உடல் சீராக இயங்குவதற்கு உப்பு அத்தியாவசியமான ஒன்று. இது நமது உடல் இயக்கங்களுக்கு தேவையான சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பும் எலக்ட்ரோலைட்டுகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மேலும் இது அட்ரீனல் சுரப்பிகளை தூண்டி, பக்கவாதம் ஏற்படுவதை குறைக்கிறது. மேலும் ரத்த ஓட்டத்திற்கு தேவையான தாதுக்களுக்கும் உதவுகிறது. ஆனால் உடலில் இதுபோன்ற இயக்கங்களுக்கு சிறிதளவு உப்பை எடுத்துக்கொள்வதே போதுமானது. அதிகளவு உப்பு எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் பிரச்னைகளை தெரிந்துவைத்திருப்பது அவசியம்.
நீர் தேக்கம்: அதிகளவு உப்பு உணவை எடுத்துக்கொள்வது உடலில் நீர் கோர்க்க வழிவகுக்கிறது. இதனால் சிலருக்கு உடல் வீங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சோடியம் அதிகமான உணவை குறுகிய காலத்திற்கு மட்டுமே எடுத்துக்கொண்டு பின்னர் அதை குறைத்தாலும் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி சிறுநீரகங்களை பாதிக்கும்.
சிறுநீரக செயலிழப்பு: அதிக அளவு உப்பு எடுத்துக்கொண்டால், உடலில் சேரும் அதிகளவு சோடியம் சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் ரத்த சுத்திகரிப்பு சீராக நடைபெறுவதில் தடை ஏற்படுகிறது.
பக்கவாதம்: அதிகளவு உப்பை சுத்திகரித்து வெளியே தள்ள முடியாதபோது சிறுநீரகம் தனது செயல்பாட்டை இழக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகி பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கிறது.
எலும்பு புரை (osteoporosis): நீண்ட நாட்கள் உப்பு அதிகமுள்ள உணவை எடுத்துக்கொள்வது உடலின் திசுக்கள் மற்றும் செல்களில் திரவத்தை சேர்த்துவிடும். இது உடலிலிருந்து கால்சியத்தை வெளியே தள்ளும். இதனால் எலும்பு தேய்மானம் அடைந்து எலும்பு புரை பிரச்னையை ஏற்படுத்தும்.
ஒற்றை தலைவலி: அதீத உப்பை சேர்ப்பது தலைவலியை தூண்டும். இது மைக்ரேன் என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். இந்த தலைவலி நீரிழப்பை தூண்டுகிறது. எனவே உடலில் உப்பு சேர்வதை தடுக்க போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம்.
பருவமடைதல்: அதிகளவு உப்பு கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது இளம்பருவத்தினர் பருவமடைதலை தாமதப்படுத்துகிறது. இது நடத்தை பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தை தூண்டுகிறது.