தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு முழுநேர இயக்குனர் நியமித்து, களவுபோன பொக்கிஷங்களை மீட்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், சோழர் காலத்திலிருந்து படிப்பகமாக செயல்பட்டு வந்தது. கி.பி 1700ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் பல்வேறு ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களை கொண்ட நூலகமாக மாறிய சரஸ்வதி மஹால் ஆசியாவின் பழைமையான நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரியவகை ஒலைசுவடிகளாக மருத்துவம், இலக்கியம், கலை, வரலாறு என 49000 ஓலைச்சுவடிகளும், தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் வடமொழிகள் என 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காகித சுவடிகளும் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் ஜீவக்குமார் “ ஆங்கிலேயர் காலம் வரை சிறப்பாக செயல்பட்டு வந்த இந்நூலகம் சுதந்திரத்திற்கு பிறகு தனி இயக்குனரை கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கென்று தனி இயக்குனர் நியமிக்கப்படாததால் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டின் உள்ளது. இதற்கென்று தனி இயக்குனர் இல்லாததால் சரஸ்வதி மஹாலில் பல பொக்கிசங்கள் தொடர்ந்து திருடுபோகிறது, மேலும் அரிய மருத்துவ நூல்கள் மற்றும் வேத நூல்கள் அங்கு பணியாற்றக்கூடிய பணியாட்களால் திருடப்படுகிறது. உதாரணமாக பதினேழாம் நூற்றாண்டில் வேதகாம நூல் எனும் இந்தியாவில் முதலில் அச்சடிக்கப்பட்ட நூல், இந்நூல் பத்தாண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது இதுவரை கிடைக்கவில்லை, அந்த நூல் பலகோடி ரூபாய்க்கு ஜெர்மன் மியூசியத்துக்கு இங்குள்ள பணியாளர்கள் சிலரால் விற்பனை செய்யப்பட்டது எனவும் மேலும் அங்கு உள்ள பட்டியலில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கிறது. நீக்கப்பட்ட நூல்கள் திருடுபோயிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அரிய வகை ஓவியங்கள், புகைப்படங்கள், சிலைகள் ஆகியவையும் நிர்வாகத்திலுள்ள சிலரின் துணையுடன் திருடுப்போயிருக்கிறது. எனவே இதுதொடர்பாக சிறப்பு அதிகாரியை நியமித்து களவாடப்பட்ட பொக்கிஷங்களை மீட்க வேண்டும்” எனக்கூறுகிறார்
தமிழ்த்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பழ.ராசேந்திரன் பேசும்போது “ பல கோடி மதிப்புள்ள நவீன இயந்திரங்கள் வாங்கியும் உரிய பணியாட்கள் இல்லாததால் அவை அனைத்தும் வீணாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு பணிகள் மின் மயமாக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இது முழுமையாக நடந்தால் பல அரிய வகை நூல்களை பலரும் அறிந்துகொள்ள முடியும். 46 பணியாட்கள் இருந்த இந்த இடத்தில் இப்போது வெறும் 16 நபர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். எனவே தேவையான பணியிடங்களுக்கு உடனடியாக தகுதி உள்ளவர்களை கொண்டு அரசு நிரப்ப வேண்டும். இங்கிருந்து என்ன களவு போனது எப்போது களவு போனது என்ற ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. ஆனால் அதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை மாவட்ட ஆட்சியரும் நூலகமும் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை” என்றும் கூறுகிறார்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அவர்களிடம் பேசியபோது “ 2005ஆம் ஆண்டு ஒரு அரிய புத்தகம் தொலைந்து உள்ளது. அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக பணியாற்றியவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான குற்றச் சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து கண்காணித்து வருகிறோம். அங்கு என்னென்ன புத்தகங்கள் தொலைந்து உள்ளது என்பது குறித்த பட்டியல் தயார் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது குறித்து உரிய விசாரணை செய்து நடத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.