கடந்த ஆண்டே கடுமையான வெப்ப அலையால் பயிர்கள் கருகி நாசமானதுடன் மின்வெட்டு பிரச்னைகளையும் பெரிதளவில் சந்திக்க நேர்ந்தது. அதேபோல் இந்த ஆண்டும் வரும் மாதங்களில் இந்தியாவில் வெப்பநிலை இன்னும் அதிகமாகும் என்ற செய்தி கவலையை அளிக்கிறது. இந்திய வானிலை மையத்தின் விஞ்ஞானி எஸ்.சி பான் கூறுகையில், அடுத்த மூன்று மாதங்களில் மே மாதம் 31ஆம் தேதி முடிவடைவதற்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்.
வெப்பகாலம் தொடங்கிய ஆரம்பத்திலேயே மின் தட்டுப்பாட்டால் கோதுமை பயிர்களின் நிலையை கண்காணிக்க விவசாய அமைச்சகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மின் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூறாண்டுகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் வெப்பநிலை உச்சத்தை தொட்டது. இது தானிய அறுவடையை நாசமாக்கி, அரசாங்கத்தை சிக்கலுக்கு தள்ளியது. 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரியில் நாடு முழுவதும் மாதாந்திர சராசரி வெப்பநிலை உச்சபட்சமாக இருந்தது என்கிறது வானிலை மையம்.
ஏற்கனவே பாதிப்படையும் நிலையில் உள்ள கோதுமை பயிரின் நிலையானது மார்ச் மாத வெப்பநிலையால் மேலும் மோசமடையலாம். தீபகற்பப் பகுதியைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும். நீண்ட வெப்ப அலையானது இந்த ஆண்டும் கோதுமை உற்பத்தியை பெருமளவில் பாதிக்கும். இது உள்ளூரிலேயே உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்கும். சீனாவுக்கு அடுத்து கோதுமை உற்பத்தி இந்தியாவில்தான் அதிகமாக நடைபெறுகிறது. வெப்பத்தால் உலக சந்தைகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படலாம்.
காலநிலை மாற்றத்தால் பாதிப்பு
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையக்கூடிய நாடுகளில் ஒன்று இந்தியா. அதீத காலநிலை சீற்றங்களான வெப்ப அலை, வெள்ளம் போன்றவற்றால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் காலநிலை மாற்றமானது விவசாயத்தை சீரழிப்பதுடன், பொருளாதார பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக மின் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. வெப்ப அதிகரிப்பால் ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களின் பயன்பாடும் அதிகரிப்பதால் மிந்தட்டுப்பாடு அதிகளவில் இருக்கும். ஏற்கனவே நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது வெப்ப அலையானது இருமடங்கு அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைகளை உறுதி செய்க! - ராஜேஷ் பூஷண் கடிதம்
இந்நிலையில் நாடு முழுவதும் வெப்பம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மதிய சுகாதாரத்துறையின் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நாட்டில் ஏற்கனவே சில இடங்களில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் இயல்பான வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் பதிவாகலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளத்தில் உள்ள வெப்பம் தொடர்பான நோய்களுக்கான செயல் திட்டங்களை மாநில அரசுகள் தயார் செய்யவும், மாவட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த கண்காணிப்பை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், வெப்பம் காரணமாக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பட்டியலாக மாநில அரசுகள் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மருந்துகள், நரம்பு வழியில் செலுத்தப்படும் திரவங்கள், ஐஸ் கட்டிகள், ஓ.ஆர்.எஸ் பவுடர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் போதுமான அளவு ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இவை தவிர அனைத்து மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் போதுமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் சாதனங்கள் செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கோடைகாலங்களில் தடையில்லா மின்சாரம் மருத்துவமனைக்கும், சுகாதார நிலையங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய சோலார் பேனல்கள் மருத்துவமனைகளில் நிறுவ வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.