மிஸ் யூ வாட்டோ... மறக்க முடியாத சென்னையின் ஆதர்ச நாயகன் வாட்சன்..!

மிஸ் யூ வாட்டோ... மறக்க முடியாத சென்னையின் ஆதர்ச நாயகன் வாட்சன்..!
மிஸ் யூ வாட்டோ... மறக்க முடியாத சென்னையின் ஆதர்ச நாயகன் வாட்சன்..!
Published on

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பட்டியலை எடுத்தால் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் பெயர் நிச்சயம் இருக்கும். அவரை அந்நிய நாட்டுக்காரர் என்றே மனம் ஒத்துகொள்ள முடியாத அளவுக்கு வாட்சன் இந்தியாவோடு ஒன்றிணைந்து விட்டார். காரணம் ஐபிஎல் தான். குறிப்பாக வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு. சென்னை அணியோடு ஒன்றியவர் வாட்சன்.

வாட்சனின் ஐபிஎல் பயணம் 2008ல் ஆரம்பித்திருந்தது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது ராஜஸ்தான் ராயல்ஸ்
அணிக்காக விளையாடிய வாட்சன், முதல் தொடரில் ரன்களை வாரிக்குவித்தது மட்டுமின்றி, அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற
பெருமையையும் பெற்றிருந்தார். வாட்சனின் வலிமையால் அந்த முறை ஐபிஎல் சாம்பியன்ஸ் பட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிருந்தது. 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை காயம் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கான போட்டிகள் ஆகிய காரணங்களால் வாட்சன் பெரிதும் ஆடவில்லை.

பின்னர் 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆடத்தொடங்கினார். 2013ஆம் ஆண்டுப் பின்னர் ஐபிஎல் தொடருக்காக முழு வீச்சில்
ஆடத்தொடங்கினார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த வாட்சன் 61 பந்துகளில் 101 ரன்களை விளாசியிருந்தார். 2014ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற வாட்சன், தனது பாணியிலான கேப்டன்ஷிப்பை
வெளிப்படுத்தினார்.

14 லீக் போட்டிகளில் 7 போட்டிகளை வென்ற ராஜஸ்தான் அணி, அந்தத் தொடரில் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. பின்னர் 2015ஆம் ஆண்டில் மீண்டும் ஐபிஎல் தொடரில் ரன்களை குவிக்கத் தொடங்கிய வாட்சன், மீண்டு காயத்தினால் அவதிப்பட்டார். இதற்கிடையே அவர் கொல்காத்தாவிற்கு எதிராக ஒரு சதத்தை அடித்திருந்தார்.

2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சூதாட்டத்தின் காரணமாக தடை விதிக்கப்பட்டதால், அந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அணிக்காக வாட்சன் 9.5 கோடியில் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் வாட்சனின் திறமையை சரியாக பயன்படுத்தாத பெங்களூரு அணி
அவரை மிடில் ஆர்டரில் களமிறக்கி வீணடித்தது.

இருப்பினும் அந்த தொடரில் வாட்சன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பவுலிங் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து வாட்சனை அணியிலிருந்து பெங்களூரு விடுவிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க மறுத்துவிட்டது.அந்தக்காலம் வாட்சனின் கிரிக்கெட் வரலாற்றில் கசப்பான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது வாட்சன் மீது நம்பிக்கை வைத்து அவரை ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2018ஆம் ஆண்டு சென்னைக்காக வாட்சன் தனது ஆட்டத்தை தொடங்க, அவரை முழுவதுமாக நம்பி தொடக்க வீரராக களமிறக்கினார் தோனி. மற்ற அணிகள் ஒதுக்கியபோது தன் மீது தோனி வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசத்தை காட்ட வேண்டும் என அதிரடியை வெளிப்படுத்திய வாட்சன் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 555 ரன்களை விளாசியிருந்தார். இதுவே ஐபிஎல் தொடரில் வாட்சனின் அதிகபட்ச ரன் குவிப்பாகும். அத்துடன் அந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 117 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சென்னைக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் வாட்சன் சிறப்பாக ஆடாத போதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஓப்பனிங்
பேட்ஸ்மேனாக தோனி களமிறக்கியிருந்தார். அதற்கெல்லாம் சேர்த்து இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக காலில் ரத்தம் வடிய பேட்டிங் செய்த
வாட்சன், 59 பந்துகளில் 80 ரன்களை சிதறடித்திருந்தார். தன்மீது தோனி வைத்த நம்பிக்கைக்காக சென்னையில் சேர்ந்தபோது ரன்களை அடிக்க
ஆரம்பித்த வாட்சன் இந்த ஐபிஎல் வரை அதனை தொடர்ந்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீசாத வாட்சன் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார். இந்த நிலையில் தான் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார் வாட்சன். சென்னை அணிக்காகவும், ஐபிஎல்க்காகவும் நிறையவே செய்துவிட்ட வாட்சனை மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் வழி அனுப்பி வைத்துள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள். சென்னை ரசிகர்கள் சொல்வதெல்லாம் இதுதான்... வி மிஸ் யூ வாட்சன்.. வி லவ் யூ வாட்சன்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com