"சேதுசமுத்திரத் திட்டத்தை ஆதம் பாலத்தை சேதப்படுத்தாமல் நிறைவேற்றுவதற்குப் புதிய வழித்தடம் கண்டறியப்படும்" என உச்சநீதிமன்றத்தில் நேற்று (16.03.2018) மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள SLP (Civil) Nos 20758 of 2005 & Batch என்ற வழக்கில் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தில் இயக்குனராகப் பணியாற்றும் ஆனந்த் கிஷோர் சரண் என்பவர் தாக்கல் செய்திருக்கும் ஒரே ஒரு பக்கம் கொண்ட பிரமாண பத்திரத்தில் “6 ஆம் எண் கொண்ட வழித்தடத்தின் சமூக, பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அந்தத் தடத்தில் அந்தத் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு விரும்பவில்லை. நாட்டின் நலன் கருதி ஆதம் பாலம் / ராம் சேதுவுக்கு சேதம் ஏற்படாமல் அதற்கான மாற்று வழித் தடத்தைக் கண்டறிய அரசு எண்ணியுள்ளது”எனக் கூறப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து வரும் கப்பல்கள் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா முதலான துறைமுகங்களை அடைய வேண்டுமென்றால் இலங்கையைச் சுற்றிக்கொண்டுதான் வரவேண்டும். ஏனென்றால் ராமேஸ்வரத்தின் தென்கிழக்கில் பாம்பனிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில் இருக்கும் மணல் திட்டுகள் கடல்வழிப்போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அந்தப் பகுதியை ஆழப்படுத்தி கால்வாய் ஒன்றை ஏற்படுத்தினால் அதன் மூலம் கப்பல் போக்குவரத்தை நடத்தலாம். பயண நேரம் குறைவதோடு கடல் வாணிபமும் பெருகும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்டதுதான் சேதுக் கால்வாய் திட்டம்.
‘தமிழர்களின் கனவு’ என இப்போது வர்ணிக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம் பற்றி முதன் முதலில் கனவு கண்டவர் ஒரு வெள்ளைக்காரர்தான். அந்தத் திட்டம் 1860ஆம் ஆண்டு கமாண்டர் டெய்லர் என்ற வெள்ளையரால் முன்வைக்கப்பட்டதாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1860க்கும் 1922க்கும் இடையில் ஒன்பது திட்டங்கள் அதற்காகத் தயாரிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. கடல்வழி வாணிபம் செழித்திருந்த அந்தக் காலத்தில் இந்தத் திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போதெல்லாம் பாம்பனுக்குக் கிழக்கே கால்வாய் தோண்டுவது பற்றிதான் பேசப்பட்டது. செலவு மற்றும் பொருளாதார சாத்தியம் ஆகிய காரணங்களால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. துறைமுகப் பொறியாளராக இருந்த சர் ராபர்ட் பிரிஸ்டோ என்பவர் 1922ஆம் ஆண்டில் முன்வைத்த திட்டமும் நிதிச்சுமை காரணமாகவே கைவிடப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு ராமசாமி முதலியார் கமிட்டி (1956) நாகேந்திரசிங் கமிட்டி (1967) வெங்கடேஸ்வரன் கமிட்டி (1966) லட்சுமி நாராயண் கமிட்டி (1981) பல்லவன் டிரான்ஸ்போர்ட் கன்சல்டன்சி சர்வீஸ் அறிக்கை (1996) ‘நீரி’ அறிக்கை (1998) என ஆறுவிதமான திட்டங்கள் இதற்காகத் தயாரிக்கப்பட்டன. மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு அதில் தமிழகக் கட்சிகளுக்கு முக்கிய இடம் கிடைத்ததற்குப் பிறகுதான் சேதுக்கால்வாய் திட்டம் நடைமுறைக்கு வரக்கூடிய சூழல் உண்டானது. 2004 பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தி.மு.க. முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது.
சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த விட்டுவிட்டால் அது திமுகவுக்கு அரசியல் லாபத்தை அளித்துவிடும் எனவே அதை செயல்படுத்தவிடக்கூடாது என அதிமுக களம் இறங்கியது. இன்று பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி பேசுவதைவிடவும் தீவிரமான தொனியில் இந்துத்துவ வாதங்களை அன்று செல்வி ஜெயலலிதா முன்வைத்தார். ‘ ராம் சேது பாலத்தை வானரங்கள் கட்டியதாகக் கூறப்பட்டாலும் அது காட்டில் வசித்த தென்னிந்தியர்களையே குறிக்கும். அந்தப் பாலம் தென்னிந்தியர்களின் பொறியியல் திறமைக்கு சான்றாக இருக்கிறது “ எனக் குறிப்பிட்ட அவர், “ இந்துக்களின் பொருமையை ஒப்புதலாக அரசு கருதிவிடக்கூடாது” என எச்சரித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான அன்றைய மத்திய அரசும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. முன்னுக்குப் பின் முரணாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தது. அதனால் 2009 ஆம் ஆண்டு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
திமுகவும் மதச்சார்பற்ற கட்சிகளும் நடத்திய பல்வேறு கட்டப் போராட்டங்களின் காரணமாக மன்மோகன் சிங் அரசால் அமைக்கப்பட்ட விஞ்ஞானி பச்சோரி கமிட்டி தனது அறிக்கையை 2012ல் அரசிடம் அளித்தது. ‘6 ஆம் எண் பாதை மட்டுமல்ல 4 ஏ எண் கொண்ட பாதையும் கூட பொருளாதார ரீதியிலும் சூழலியல் ரீதியிலும் உகந்ததல்ல’ என அந்த அறிக்கை கூறியது. அதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தது. பச்சோரி கமிட்டி அறிக்கையின்படி சேதுக் கால்வாய் திட்டத்தைக் கைவிடவேண்டும் என செல்வி ஜெயலலிதா வலியுறுத்தத் தொடங்கினார். ஆனால், திமுகவின் அழுத்தம் காரணமாக பச்சோரி கமிட்டி அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவோம் என உச்சநீதிமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு தெரிவித்தது.
காங்கிரஸ் அரசு மாறி 2014 ல் பாஜக ஆட்சி ஏற்பட்டதும் சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்த மத்திய அரசின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ராம் சேதுவைப் புனிதச் சின்னமாக பிரச்சாரம் செய்த பாஜக அதற்கு சேதம் இல்லாமல் புதிய வழியில் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவோம் எனக் கூறினாலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
‘ராமர்சேது’ என்று குறிப்பிடப்படும் மணல் திட்டுகள் எப்படி அங்கே உருவாயின என்பதற்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் கூறப்படுகின்றன. ‘இயற்கையாகவே அங்கு மணல் படிவு உருவாகிறது. ஆண்டுக்கு ஒரு சென்டி மீட்டர் என்ற விகிதத்தில் அந்த மணல்மேடு உயர்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாக் நீரிணையில் காணப்படும் நீரோட்டம் காரணமாக மட்டுமின்றி இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து கடலில் கலக்கும் ஆறுகளின் விளைவாகவும் இந்த மணல் படிவு ஏற்படுகிறது. பிறபகுதிகளில் காணப்படுவதைவிட பாக் நீரிணைப் பகுதியில் சுமார் எழுபத்தைந்து மடங்கு கூடுதலாக இந்த மணல் படிவு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது’ என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
‘ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா’ என்ற அரசு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜி.ஜி.வாஸ், ஹரிபிரசாத் பி.ஆர்.ராவ், சுப்பாராவ் ஆகிய நால்வரும் ஆதம் பாலம் பகுதியில் ஆய்வு செய்து தனுஷ்கோடிக்கு அருகில் கடலில் 1948 ஆம் ஆண்டுவாக்கில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அங்கே புவிப்பரப்பில் ஐந்து மீட்டர் ஆழத்துக்கு உடைப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அப்போது எழுந்த பெரிய அலைகளால் தனுஷ்கோடி நகரின் தென்பகுதி மூழ்கடிக்கப்பட்டதும் இப்போது புலனாகியுள்ளது. கடல் அரிப்பால் ஏற்பட்டதென நம்பப்பட்டு வந்த அந்த அழிவுக்குப் பின்னால் மிகப்பெரும் ஆபத்து ஒளிந்திருப்பதை இப்போது விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். சேதுக்கால்வாயின் தெற்குப்பகுதிக்கு அருகில் தான் இந்த உடைப்பு உள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆதம் பாலம் பகுதியில் நிலவும் அசாதாரணமான நிலைக்கு அதுவே முக்கிய காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதனிடையில், சில மாதங்களுக்குமுன் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான செய்தியொன்று ‘ஆதம் பாலம் இயற்கையாக உருவானதல்ல. அது மனிதர்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும்’ என்று கூறியது.
மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரம் 6 ஆம் எண் வழித் தடத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட 4 ஏ என்ற எண் கொண்ட வழித்தடத்திலும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது, புதிதாக ஒரு வழித்தடம் கண்டறியப்படும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆனால் விஞ்ஞானி பச்சோரி ஏற்கனவே குறிப்பிட்டதுபோல ‘அப்படியொரு வழித்தடம் ஒருபோதும் கண்டறியப்படப் போவதில்லை’ என்பதே உண்மை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறும்போதெல்லாம் சேதுக் கால்வாய் குறித்த நிலைபாடுகளும் மாறுவது வழக்கமாகிவிட்டது. அறிவியல் அணுகுமுறை என்பதைக் கைவிட்டு எல்லாவற்றையும் மதத்தோடு முடிச்சுப்போட்டுப் பார்த்து அதில் அரசியல் லாபம் அடைய நினைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை சேதுக் கால்வாய்த் திட்டம் ‘தமிழரின் கனவாக’ மட்டுமே இருக்கும், நனவாகாது.