ஒரு எழுத்தாளர் எப்படியிருக்க வேண்டும்? வழிகாட்டும் ‘சங்கப்பலகை’ மூத்த எழுத்தாளர்கள்!

ஒரு எழுத்தாளர் பின்பற்ற வேண்டியவை என்னென்ன? எழுத்தாளர் எப்படியிருக்க வேண்டும்? சொல்கிறார்கள் மூத்த எழுத்தாளர்கள்!
சங்கப்பலகை
சங்கப்பலகைPT
Published on

முகநூலில் சங்கப்பலகை என்றொரு குழு இயங்கி வருகிறது. இதன் நிறுவனர்களாக எழுத்தாளர்கள் ஜி.ஏ.பிரபா, சுரேஷ் சந்த், கணேஷ் பாலா மற்றும் ரிஷபன் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.

இக்குழுவின் முக்கிய நோக்கம் ‘புதிதாக எழுதவரும் எழுத்தாளார்களை பட்டைத்தீட்டி ஊக்குவிப்பது. மற்றும் அவர்களுக்கான ஒரு அங்கீரத்தை ஏற்படுத்தி தருவது’ என்பதாம். இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்குள் கதை, கவிதைப்போட்டி என்று நடத்துவதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி அவர்கள் எழுதிய கதை மற்றும் கவிதையை புத்தகவடிவிலும், குரல் வடிவிலும் வெளியிடுகிறார்கள். இக்குழுவில் எழுத்துலக ஜாம்பவான்கள் பலர் இருப்பதுடன் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த குழு ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவூட்டும் விதமாக நேற்று இதன் விழாவானது கோவையில் நடைபெற்றது.

ஜி.ஏ.பிரபா
ஜி.ஏ.பிரபா

இதன் சிறப்பு விருந்தினர்களாக எழுத்துலக வேந்தர் இந்திரா சௌந்தரராஜன், ‘இனிமைக்கு இலக்கணம்’ லா.ச.ரா.சப்தரிஷி , ‘உங்கள் ரசிகன்’ ரவிப்பிரகாஷ், சென்னை சில்க்கின் உரிமையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் ரவி பிரகாஷ் (ஜூ.வி முன்னாள் ஆசிரியர்) ஒரு எழுத்தாளர் பின்பற்ற வேண்டியவை என்னென்ன என்று கூறியதை ஒரு பட்டியலாக இங்கே பார்கலாம்:

1. எழுத்தில் எளிமை

2. எழுத்தில் பொறுப்புணர்வு

3. எழுத்தில் தெளிவு. சிறப்பாக வாக்கியம் அமைத்தல்.

ரவிப்பிரகாஷ்
ரவிப்பிரகாஷ்

4. எழுதியதின் உண்மைத்தன்மையை 'கிராஸ் செக்' செய்தல்.

5. எழுத்தில் துல்லியம்.

6. எழுத்தில் இங்கிதம்.

7. சொற்களை பண்புடன் உபயோகிக்கும் முறை.

ஆகியவை.

இவருக்கு அடுத்ததாக இந்திரா செளந்திரராஜன் பேசிய பொழுது, வளர்ந்து வரும் எழுத்தாளாருக்காக சில டிப்ஸ்களை தந்தார். அவை:

“1. கதையின் திறனறிந்து கதாபாத்திரங்களின் வசனங்களை அமைக்க வேண்டும்

2. எழுத்தாளனுக்கு அடிப்படை தேவை முயற்சியும் உழைப்பும்

3. எழுத்தாளன் என்பவன், தன்னை சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்

இந்திரா செளந்திரராஜன்
இந்திரா செளந்திரராஜன்

4. எழுத்தாளனின் வளர்ச்சி அவனது தனித்தன்மையால்தான் சாத்தியம்

5. தன்னிடம் உள்ள திறமையொன்று மற்றவனிடம் இல்லையென உணர்பவனே எழுத்தாளன்

6. எழுத்தாளனுக்குள் அவன் தவிப்பதே தவம்

7. எழுதுவது ஒரு தவம் / தியானம் போன்றது

8. சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் அதில் (எழுத்தில்) மூழ்கிவிடுங்கள்

9. எழுத்தாளர்களுக்கு தங்களின் தவறை திருத்திக்கொள்ளும் மனப்பாங்கு தேவை”

இவர்களைத் தொடர்ந்து பேசிய சப்தரிஷி ல.சா.ரா. எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசினார். அவர் கூறுகையில்,

“1. விஞ்ஞான கதைகளைத் தவிர மற்றவையில் கதை சுற்றுவதற்கு ஒரு அளவுகோல் வேண்டும்

2. புத்தகத்தின் வாசனை/சுவை உணரப்பட வேண்டும்

3. சுண்டக்காய்ச்சிய பால் போல எழுத்தை சுருக்கி பொருள் வர எழுத வேண்டும்.

சப்தரிஷி ல. சா. ரா.
சப்தரிஷி ல. சா. ரா.

4. உட்கார்ந்த இடத்திலிருந்தே 2000 கி.மீ. தொலைவில் உள்ளவனின் இதயத்தை தொட எழுத்தாளனால்தான் முடியும்.

5. எழுத்தாளனின் அருமையும் பெருமையும் அவன் வீட்டில் உள்ளவர்களுக்கும் அவனை கூடி சார்ந்திருப்பவர்களுக்கும் தெரியாது / புரியாது

6. எழுத்தாளனுக்கு எக்ஸ்ரே போன்ற கண்கள் இருக்க வேண்டும்”

என்றார்.

இவரைத்தொடர்ந்து எழுத்தாளரும் சமூக சேவகருமான கார்த்திகா ராஜ்குமார் பேசினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக கணேஷ் பாலா, சுதா கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் சந்த் மற்றும் ரிஷபன் ஸ்ரீநிவாஸன் ஆகியோர் விழாவை சிறப்பாக முன்னெடுத்து நடத்தி வெற்றி பெற்ற எழுத்தாளாருக்கு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com