'கொங்குநாடு' என பாஜக வந்தால், இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்கச் சொல்வேன்: சீமான் நேர்காணல்

'கொங்குநாடு' என பாஜக வந்தால், இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்கச் சொல்வேன்: சீமான் நேர்காணல்
'கொங்குநாடு' என பாஜக வந்தால், இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்கச் சொல்வேன்: சீமான் நேர்காணல்
Published on

” ’கொங்கு நாடு’ என்று எங்களைப் பிரிக்க நீங்கள் யார்? முதலில் இந்தியா உங்கள் நாடா? நீங்கள் வந்தவர்கள். நாங்கள் இங்கேயே பிறந்து வாழ்ந்தவர்கள். உங்கள் பரம்பரையின் வேர் என்ன? சும்மா அதிகாரம் இருக்குன்னு எதையாவது செய்துகொண்டிருப்பதா? காஷ்மீரை அதிகாரத் திமிரில் உடைத்தீர்கள். அதற்கு காரணமாக, போர், தீவிரவாதம் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டோம். ஆனால், தமிழ்நாட்டை பிரிப்போம் என்றால் எங்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிடுவோம்” என்று கொதித்தெழுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘கொங்கு நாடு’ குறித்த சர்ச்சை வெடித்துக்கொண்டிருக்கும் சூழலில் சீமானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்,

கொங்கு நாடு கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

“கச்சத்தீவை எங்கள் மண்ணோடு இணையுங்கள். காவிரி நதி நீரை பெற்றுத்தாருங்கள். முல்லைப் பெரியாறு உரிமையைப் நிலைநாட்டுங்கள். மேகதாதுவில் அணைக்கட்டுவதை நிறுத்துங்கள். இந்தியைத் திணிக்காமல் என் தாய்மொழியை படிக்க வாய்ப்புக் கொடுங்கள். ஜிஎஸ்டி நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை சொல்லுங்கள். இப்படி நாங்கள் மத்திய அரசிடம் பலவற்றைக் கேட்கிறோம். ஆனால், நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்காமல் கேட்காத ஒன்றைத் தருகிறேன் என்றால் எப்படி அனுமதிக்க முடியும்? தமிழகத்திற்கு எத்தனையோ நிர்வாகப் பிரச்சனைகள் உள்ளன. முதலில் அதனை சரி செய்யுங்கள். ஏற்கனவே, நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களை இரண்டாக பிரித்துவிட்டார்கள். இதுவரை எங்கள் மாநிலத்தை இரண்டாகப் பிரியுங்கள் என்று நாங்கள் யாராவது கேட்டோமா? மொழி, இனம், நிலம் வாரியாகத்தான் இதுவரை மாநிலங்களைப் பிரித்திருக்கிறார்கள். ஆனால், சாதி ரீதியாக கொங்கு நாடு என்று பிரிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சரி... இவர்கள் கூற்றுப்படியே தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிக்கட்டும் . அப்படி பிரித்தால் இந்தியாவை 39 நாடாக பிரிக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. நான் வழிகாட்டுகிறேன். பிரிப்பார்களா? தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு பதிலாக சேலம், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி என நான்கு தலைநகரங்களை உருவாக்குங்கள். அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்தால் நகரங்கள் பிதுங்கி வழியும். அதனால்தான், தலைநகரங்களை பிரித்து வைக்கவேண்டும் என்கிறோம். ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி எல்லாம் நான் சொன்னதைத்தான் சொல்கிறார்கள்.

பாஜக , நியாயமான அரசாக இருந்தால் இந்தியாவைத்தான் இரண்டாக பிரிக்கவேண்டும். தமிழ் நாட்டை அல்ல. வட கொரியா, தென் கொரியா, கிழக்கு தைமூர், மேற்கு தைமூர் மாதிரி, இந்தியாவை வட இந்தியா, தென்னிந்தியா என்று இரண்டாகப் பிரியுங்கள். இரண்டு பாராளுமன்றத்தை உருவாக்குங்கள். கொங்கு நாடு என்று தனியாகப் பிரித்துவிட்டால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று நினைக்கிறது. கொங்கு மண்டலத்தை ஐந்து அல்ல. ஆறாகப் பிரித்தால்கூட பாஜக ஆட்சிக்கு வர முடியாது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. கொங்கு நாடு என்று பாஜக ஆரம்பித்தால் நான் இந்தியாவை இரண்டாக பிரியுங்கள் என்று ஆரம்பித்துவிடுவேன். உங்களைவிட வலுவாக போராட ஆரம்பித்துவிடுவேன். என் கருத்தில் நிறையபேர் உடன்பட்டுக்கொண்டு கொங்குநாடு பிரச்சனைக்கு யாருடா மணிக்கட்டுவார்கள் என்று தெரியாமல் உட்காந்திருக்கிறார்கள். நான் ஆரம்பித்து விட்டால் குவிந்து கொந்தளித்துவிடுவார்கள். ஆரம்பிக்கவா?

கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு வருமானமில்லை. வீட்டிற்குள் அடைந்துக்கிடக்கிறார்கள். சாப்பட்டுக்கே வழியில்லை. ஆனால், ஆன்லைன் கல்வியில் முழு கல்வி கட்டணம் கட்டச் சொல்கிறார்கள். இதையெல்லாம் கவனிப்பதில்லை. இந்த நேரத்தில் பெட்ரோல் விலையை ஏற்றுக்கிறார்கள். முதலில் நாட்டு மக்களின் பிரச்சனையைப் பாருங்கள். இதைப் பிரிப்பது அதைப்பிரிப்பதெல்லாம் உங்கள் வேலை இல்லை. ’காஷ்மீர் பிரிவினைவாதி, ஈழப்பிரிவினைவாதி’ என்று எங்களைச் சொல்கிறீர்கள். உண்மையிலேயே நீங்கள்தான் பிரிவினைவாதிகள். நாங்கள் பிரிக்கச்சொல்லவே இல்லை. கச்சத்தீவை எங்களோடு இணையுங்கள் என்கிறோம்.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடையதா? சீனாவுடையதா? என்பது குறித்து பிரதமரையும் பாஜகவினரையும் பேசச்சொல்லுங்கள். ஏன் வானதி சீனிவாசனிடம் கேளுங்கள். இவர்களை அருணாச்சலப் பிரதேசம் நடுவில் நின்று ஒரேயொரு முறை பேசிவிட்டு வரச்சொல்லுங்கள். வாக்கு சேகரிக்கப் போகும்போதே, அந்த மாநிலத்தின் ஓரத்தில் பேசிவிட்டு வந்துவிடுகிறார்களே ஏன்? இதையெல்லாம் செய்துவிட்டு பிறகு தமிழ்நாட்டைப் பிரிக்கலாம். நான் எதோ கண்டுக்காம போய்டுவேன்னு நினைச்சிட்டு பாஜகவினர் கொங்கு நாடுன்னு பேசிட்டு இருக்காங்க. நான் தெருவில் இறங்கி விளையாடினால் தெரியும்.

சும்மா திசைத்திருப்ப இந்தியாவை இரண்டாகப் பிரிக்கிறோம். மூன்றாகப் பிரிக்கிறோம் என்கிறார்கள். முதலில் இந்தியாவை இரண்டாகப் பிரியுங்கள். என்னுடன் அதற்காக தர்க்கம் பண்ண வாருங்கள் என்கிறேன். தலைநகரத்தை டெல்லியில் அமைத்து இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டு, எல்லா அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுகிறார்கள். என் மாநிலம் சரியாகத்தான் இருக்கிறது. முதலில் நாட்டை இரண்டாகப் பிரியுங்கள் என்றால், இவர்களுக்கு எல்லாம் சரியாகிவிடும். இப்படித்தான், ‘ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்கவேண்டும்’ என்றார்கள். தாரளமாக அறிவிக்கலாம். ஆனால், அதற்கு முன்பு ’ராமர் எதற்காக இங்க வந்தார்? இந்தப் பாலத்தை எதற்காக கட்டினார். இராவணன் யார்? அவர் தமிழ் பெரும் மன்னன். அவர் ஆண்ட இலங்கை தமிழ் தேசம்தானே? இதை இந்திய தேசியச் சின்னம் என்று அறிவிப்பதற்குப் பதில் இலங்கையை தமிழர் தேசம் என்று அறிவியுங்கள்’ என்றேன். அமைதியாகிவிட்டார்கள். இப்போது அதுதான் நடக்கும்”.

அண்ணாமலை பாஜக தலைவர் ஆகியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

“அதுக்காகத்தானே அவரைக் கொண்டு வந்திருக்காங்க. நியாயமாகப் பார்த்தால் எங்க மாமா நயினார் நாகேந்திரனுக்குத்தான் பாஜக தலைவர் பதவிக் கொடுத்திருக்கவேண்டும். நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர். அமைச்சராக இருந்திருக்கிறார். ஒரு பெரிய இயக்கத்திலிருந்து விலகி வந்து பாஜகவில் இணைந்திருக்கிறார். தற்போது பாஜக சட்டமன்றக் கூட்டுக்குழு தலைவர் ஆகியிருக்கிறார். அவருக்குத்தான் அரசியல் அனுபவம் இருக்கிறது. நியாயமாக அவரைத்தான் தலைவராக நியமித்திருக்கவேண்டும். ஆனால், அதிகாரமிருப்பவர்கள் எப்படியோ வந்துவிட்டார்கள். அண்ணாமலைக்கு கொடுத்தால் மட்டும் என்ன பாஜக வளர்ந்துவிடப்போகிறதா?

’தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பாஜகவின் சித்தாந்தங்களை கொண்டுபோய் சேர்ப்பேன்’ என்றிருக்கிறாரே அண்ணாமலை?

”பாஜகவின் சித்தாந்தங்கள் ஒவ்வொரு வீட்டிலும் போய் சேர முடியாது. வேண்டுமென்றால், பாஜகவைத் திட்டுவதற்கு தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஆள் இருக்கு. அண்ணாமலை ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறார். நான் ஒரு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். இரண்டுப் பேரையும் ஒரே விவாதத்தில் உட்கார வையுங்கள். ஒரேயொரு திட்டத்திலாவது பாஜக நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறதா? என்பதைக் காட்டச் சொல்லுங்கள். ஒரேயொருத் திட்டம்தான் கேட்கிறேன். அப்படிக் காட்டினால் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். நல்லத்திட்டங்கள் என்பது இந்த ஏழரை ஆண்டுகளில் அதானிக்கும் அம்பானிக்கும்தான் நடந்திருக்கிறது. இந்திய நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் வாசித்தபோது நாட்டிலேயே ஒரேயொருவர்தான் பாராட்டினார். அது, யார் என்றால் அதானி. அந்த நிதிநிலை அறிக்கை யாருக்குப் போடப்பட்டது என்று இதிலேயே தெரிகிறது”.

பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆகியிருக்கிறாரே?


“வானதி சீனிவாசனுக்கும், அண்ணன் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் கொடுத்திருக்கவேண்டும். பல மூத்த தலைவர்கள் இருக்கும்போது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்கிறார்கள். ஆனால், எப்படி இருந்தாலும் சகோதரர் எல்.முருகனுக்கு வாழ்த்துகள். அண்ணாமலைக்கும் என் வாழ்த்துகள். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணாமலைக்கே காவடி எடுத்தாலும் சரி, குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் சரி, பாஜக தமிழ்நாடுக்கு தேவையில்லை. இந்தியாவுக்கே நாங்கள் தேவையில்லை என்கிறோம். இந்தியாவில் முக்கால்வாசி மாநிலத்தில் பாஜகதான் ஆள்கிறது. அந்த மாநிலங்களில் கல்வி, போக்குவரத்து, சாலைப் பராமரிப்பு, வேலை வாய்ப்பு, மின் உற்பத்தி, பொருளாதாரம் என எதையாவது ஒன்று காட்டுங்கள். பாஜக ஆண்ட மாநிலத்தில் இவ்ளோ வளர்ச்சி இருக்குன்னு காட்டுங்க. மூன்று முறை முதல்வராக மோடி இருந்த மாநிலத்தில்தான், கர்ப்பப்பை வாடகைக்கு விட்டு வாழ்கின்ற தாய்மார்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமா? தரமற்ற சாலைகளும் குப்பையும் அழுக்காக இருக்கும் மாநிலம் குஜராத்தான். ட்ரம்ப் வரும்போது அவசர அவசரமாக குடிசை வீடுகளை மறைத்தார்கள். அதற்கு கொஞ்சம் செங்கல்லைக் கொடுத்து வீடு கட்டி கொடுத்திருக்கலாமே? இவர்களிடம் நாம் சிக்கிக்கொண்டு பெரும்பாடு படுகிறோம். இதனால்தான், பாஜக மனிதகுல எதிரி என்று நாம் தொடர்ச்சியாக சொல்கிறோம். ’பெட்ரோல் டீசல் விலை ஏறுகிறது’ என்றால் ஒரு அமைச்சர் ’ஏன் பைக்ல போறீங்க? சைக்கிள்ல போங்க’ என்கிறார். ’பள்ளிக்கட்டணம் கட்டமுடியவில்லை’ என்றால் ’பெற்றோர்கள் செத்துப்போங்கள்’ என்கிறார்கள். இந்த சிந்தனையைத்தான் நாம் மனிதகுல எதிரியாகப் பார்க்கிறோம்”.

தொடர்ச்சியாக சசிகலா ஆடியோ வெளியாகி வருவதை கவனிக்கிறீர்களா?

”அதனை நான் ரசிக்கவில்லை: விரும்பவுமில்லை. இப்படி ஆடியோ வெளியிடுவது சரியான முறையும் இல்லை. உளவுத்துறைக்கூட நான் பேசுவதை பதிவு செய்து வைத்துக்கொள்ளுமே தவிர வெளியிடாது. ஆனால், ஒரு தலைவி, தலைவர் என்று மதித்து பேசும்போது அதனை பதிவு செய்து பொதுவெளியில் வெளியிடுவது அவமானமானது. நாகரீகமற்றச் செயல். இது தலைமைப்பண்புக்கு துளியும் உகந்ததல்ல. அப்படி தொண்டர்களைச் சந்திக்கவேண்டும் பேசவேண்டும் என்றால், ஒரு அறிக்கை வெளியிட்டு ’கட்சியை வழிநடத்துவேன் என்று என்மீது நம்பிக்கை இருந்தால் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி மீது பாசம் கொண்ட தொண்டர்கள் இந்தத் தேதிக்கு, இந்த இடத்திற்கு வாருங்கள்’ என்றுக்கூறி நேரடியாகப் பேசுவதுதான் மாண்பாக இருக்கும். அதைவிடுத்து எவன்கிட்டயோ பேசி பதிவு செய்து அதை எல்லோருக்கும் பரப்பி, தொலைக்காட்சியில் போட அனுப்புவது சரியாக இருக்காது. பார்க்கும் எல்லோருக்கும் ’என்ன இது கொஞ்சம் கூட நாகரீகமான செயலா இல்லையே’ என்றுதான் நினைப்பார்கள். நான் பலமுறை சசிகலாவிடன் இது நல்லா இல்லை. நிறுத்துங்கள் என்றேன். ஆனால், தொடர்ந்துகொண்டிருக்கிறார்”.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com