தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் இரண்டாம் அலை தொடங்குகிறதா? ஒப்பீட்டளவில் தற்போதைய தரவுகளும், மருத்துவ நிபுணர்களும் சொல்வது என்ன? தற்போதைய கொரோனா பரவலைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை தயாராக இருக்கிறதா? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
சென்னையில் மார்ச் மாதம் பரிசோதனை செய்தவர்களில் 5% பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவே ஜனவரியில் 1.2% என இருந்தது. அதுபோல கடந்த 10 நாள்களில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 95% என அதிகரித்துள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு 2000-க்கும் மேற்பட்டோர் தினமும் தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். ஏற்கெனவே டெல்லி, மும்பை போன்ற நகரில் இரண்டாவது, மூன்றாவது அலைகள் பரவி வரும் நிலையில், சென்னையிலும் அடுத்த அலை பரவலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தரவியல் நிபுணர் விஜய் ஆனந்த் கூறும்போது, "உலகின் பல நாடுகளில் கொரோனா பரவலின் தரவுகளை பார்க்கும்போது, இப்போது தமிழகத்தில் அடுத்த அலை பரவத் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. தொற்றுப் பரவல் அலை என்பதை வரைபடத்தில் கூறினால், தமிழகத்தில் கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் உட்சபட்சமாக 6000 பேர் வரை நாள் ஒன்றுக்கு பாதிக்கப்பட்டனர்.
அதேபோல இந்தியாவில் செப்டம்பர் 16-ம் தேதி 97000 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவே உச்ச நிலையாக இருந்தது, அதன் பின்னர் படிப்படியாக வைரஸ் பரவல் குறைந்தது. தற்போது மீண்டும் வரைபடத்தில் அடிப்படையில் பார்த்தால் பரவல் மீண்டும் அதிகரிக்கிறது. அதுவும் மார்ச் 23-ம் தேதி 47,262 என்று இருந்த பாதித்தவர்கள் எண்ணிக்கை, நேற்று 68,020 என்கிற அளவில் பதிவாகியுள்ளது. அதே ஏற்றநிலை தமிழகத்திலும் நீடிக்கிறது. அதேநேரத்தில் தற்போது பரவி வரும் தொற்றுக்கு மக்களின் அலட்சியப் போக்கு முக்கிய காரணமாக உள்ளது" என்கிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் தொற்றை எதிர்கொள்வது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி தொற்று பாதிப்பு நாள் தோறும் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்ற வருடம் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு நம்மிடம் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. ஆனால், குறுகிய காலகட்டத்தில் மருத்துவமனை, பரிசோதனை உபகரணங்கள், வென்டிலேட்டர், படுக்கை வசதிகளை அதிகப்படுத்தியுள்ளோம். அதுவும் தமிழக சுகாதாரத் துறை மிகவும் விழிப்போடு செயல்பட்டு வருகிறோம்.
மார்ச் 1-ல் 18 என இருந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை 530 என தற்போது உயர்த்தியுள்ளோம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கங்கள், வர்த்தக அரங்கம், அரசு கட்டிடங்களை தேவைப்பட்டால் கொரோனா மருத்துவமனையாக மாற்றும் திட்டம் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் 79,000 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், ஒரு பகுதியில் மூன்று பேருக்கு தொற்று பரவினாலே, சுகாதாரத் துறை அதிகாரிகளால், அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. சுகாதாரத் துறை இணை ஆணையர்கள் கண்காணிப்பில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
கொரோனாவை எதிர்கொள்வதில் துறை ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக தமிழக சுகாதாரத் துறை தயாராக உள்ளது. ஆனால், பொது இடங்களில் மக்கள் முககவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்காமல் இருப்பதால் தற்போது பரவல் மேலும் அதிகரிக்கிறது. இது தேர்தல் காலகட்டம் என்பதால் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்கள் தடுப்புவிதிகளை பின்பற்றாமல் இருப்பதும் பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளது.
முக்கியமாக, 18 வயது முதல் 45 வயது நிரம்பிய 51% பேர் தற்போது தொற்றால் பாதிப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு எளிதில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.
பொதுமக்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதெல்லாம், முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வர வேண்டாம். அவசியமற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதிலும், பயணங்களும் தவிர்க்கலாம். அதேபோல நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சுகாதாரத் துறையை நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தடுப்பூசி போடுவதும் தற்போது முடிக்கிவிடப்பட்டு, அதற்கான முகாம்களும் மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, நம்பிக்கையுடன் சுகாதார துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்" என்றார் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
தற்போது அதிகரித்து வரும் தொற்றுப் பரவலுக்கு பொதுமக்களின் அலட்சியம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொரோனாவை பற்றிய அச்சமும், விழிப்புணர்வும் குறைந்திருப்பது கவலை அளிப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஸ் வர்தன் தெரிவித்துள்ளார். உலக அளவில் 28 லட்சம் பேர் கொரோனா தோற்றால் மரணித்துள்ளனர். இந்தியாவில் 1.6 லட்சம் பேரும், தமிழகத்தில் 12,670 பேரும் மரணித்துள்ளனர். உலக அளவை ஒப்பிடுகையில் இந்தியாவிலும், தமிழகத்திலும் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது நல்ல செய்தியாக இருந்தாலும், சுகாதாரத் துறை செயலாளர் கூறியதுபோல இளம் தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டும்; அவர்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உடைய வயதானவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
கொரோனாவை அழிக்க ஒருபக்கம் தடுப்பூசிகளை கண்டறிந்தாலும், அதை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் பெரிய சவாலே அடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் எத்தனை முறை கொரோனா மரபணு மாற்றம் அடைந்துள்ளதோ, அதற்கேற்றார்போல தடுப்பூசியை செயல்பட வைப்பது ஒரு நெடும் பணி. அதற்காகத்தான் பல மருத்துவ நிபுணர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். மக்களை காப்பாற்ற தன்னுயிரை துச்சமென எண்ணி பல சுகாதார பணியாளர்கள் உழைத்து வருகிறார்கள். அவர்களில் பலர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர்.
எதார்த்தத்தில் மனித சமூகத்திற்கும் கொரோனாவிற்கு இடையேயான போரில் நம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம். இதற்கு முன்பு பிளேக், ஸ்பேனிஸ் ப்ளு, சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்கள் ஒரே நாளிலோ ஒரே வருடத்திலோ இவ்வுலகை விட்டு செல்லவில்லை. மனித குலத்தின் ஒற்றுமையின் விளைவால்தான் இதுவரை பல நுண் கிருமிகளை சாமாளித்துள்ளோம். அதேபோல கொரோனாவை ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் எதிர்கொள்வோம்.
கடந்து வந்த பாதை... ஒரு விரைவுப் பார்வை:
2019 டிசம்பர் மாதம் சீனாவின் வர்த்தக நகரான வூகானில் உள்ள ஓர் உணவுச் சந்தையில் பரவத் தொடங்கிய கொரோனா எனும் மனித உடலுக்கு ஒவ்வாத வைரஸ், அடுத்த மூன்று மாதத்தில் உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆறு கண்டங்களிலும் பரவத் தொடங்கியது. உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19 பரவலை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்தது.
முதலில், ஐரோப்பிய நாடுகளில் பரவிய வைரஸ், விமான போக்குவரத்தின் மூலம் ஆசிய, அமெரிக்க நாடுகளிலும் வேகமாக பரவியது. இந்தியாவை பொறுத்தவரையில் ஜனவரி 31-ல் சீனாவிலிருந்து வந்த கேரள மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களில் தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 2020 மார்ச் 24 முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தபட்டது. இருந்தும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பே Cluster எனப்படும் தொற்றுப் பரவல் மையம் உருவாகியது. இதனால் மே, ஜூன் மாதங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து அரசு மருத்துவமனைகள் நிறைந்தன.
விளையாட்டு மைதானங்கள், வர்த்தக மையங்கள், அரசு கூடங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, கோவிட் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. உட்சபட்சமாக 2020 செப்டம்பர் 16ம் தேதி நாள் ஒன்றுக்கு 97,894 பேருக்கு இந்தியாவில் தொற்று பதிவானது. சுகாதார ரீதியாக எதிர்கொள்ள பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டது. அதேபோல தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். இதனால் டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. அதேபோல தமிழகத்திலும் ஜனவரியில் பரவல் நாள் ஒன்றுக்கு 400-க்கும் கீழ் குறைந்தது.
2002-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸின் அடிப்படைத் தோற்றம், பரவும் விதம் ஆகியவை தற்போது பரவி வரும் கோவிட் 19-ஐ ஒத்திருப்பதால், சார்ஸ் வைரஸின் மரபணு மாற்றத்தால் கோவிட் 19 ஆக உருமாறி இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே, சார்ஸ் வைரஸ் அதிகமாக பரவிய சமயத்தில் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது, அதற்கான தடுப்பூசிகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன போன்ற வழிமுறைகளை பின்பற்றி தொற்றை கட்டுப்படுத்தலாம் என பரவலாக மருத்துவ நிபுணர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், வூகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் 2000-க்கும் மேற்பட்ட முறை மரபணு ரீதியாக உருமாற்றம் அடைந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. அதில், இங்கிலாந்தில் B.1.1.7, ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் B.1.351 என்ற கொரோனா வைரஸ் மிக வீரியத்துடன் வேகமாக பரவியது. அதேநேரத்தில், தொற்றுப் பரவல் அதிகமாக இருந்தபோது இந்தியாவில் சிறந்த முறையில் எதிர்கொண்ட கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று வேகமாக பரவியது. அதேநேரத்தில், முதலில் வேகமாக பரவிய தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று குறைந்தது. இந்நிலையில், ஜனவரி பிப்ரவரி மாதங்களில் குறைந்த தொற்று பாதிப்பு, தற்போது மீண்டும் இந்த மாநிலங்களில் ஏறுமுகம் கண்டு வருவது கவனிக்கத்தக்கது.
- ந.பால வெற்றிவேல்