பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைப்பு : என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?

பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைப்பு : என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?
பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைப்பு : என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?
Published on

தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிப் பாடத்திட்டம் தொடர்பாக 14 பேர் கொண்ட ஆய்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபற்றி சில ஆசிரியர்களிடம் கருத்து கேட்டோம்.

உமா மகேஸ்வரி, அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர், சென்னை

பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப், இணையம் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை, கல்வி தொலைக்காட்சியும் வாட்ஸ் ஆப்பும் மட்டுமே கைகொடுக்கிறது. சில அரசுப் பள்ளிகளில் வாட்ஸ் ஆப் பெருமளவில் பயன்படுகிறது. ஆன்லைன் வகுப்புகளை செல்போன் வசதி உள்ள மாணவர்களால் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது.

பள்ளிப் பாடத்திட்டத்தைக் குறைப்பது வரவேற்கக்கூடிய முயற்சிதான். பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பாடங்களைக் குறைப்பது மிகப்பெரிய சுமையைக் குறைப்பதாக இருக்கும். கொரோனா காலத்தில் மாணவர்கள் அனைவருமே ஆசிரியர்களுடன் தொடர்பின்றி படித்துவருவதால், பாடச்சுமையைக் குறைப்பது பலனளிக்கும். தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுவரை வந்துவிட்டார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எதுவும் வைக்கவில்லை. எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நான் கணக்குப் பாடங்களை நடத்திக்கொண்டு இருக்கிறேன். ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால், 30 மாணவர்களிடம்தான் செல்போன் வசதிகள் இருக்கின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இவ்வளவு பாடங்களைப் படித்தால் போதும் என்ற நிம்மதி ஏற்படும். பள்ளிகள் திறந்தால்தான் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி புதுப்பிக்கப்படும்.

தி. பரமேஸ்வரி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், ராணிப்பேட்டை மாவட்டம்

பள்ளி மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன. பாடங்களைக் குறைப்பது நல்ல விஷயம்தான். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அனைத்துப் பாடங்களையும் நடத்தமுடியாத நிலையும், படிக்கமுடியாத நிலையும் நீடிக்கிறது. வேறு வகையாக பார்த்தால், குறைக்கப்படும் பாடங்களால் அது சார்ந்த அறிவும், உரையாடலும் மாணவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

பாடங்களைக் குறைப்பது நல்ல முடிவுதான். மாணவர்களின் சுமையும் பயமும் குறைகிறது. அவர்கள் எளிதாக பயமின்றி தேர்வுகளுக்குத் தயாராக முடியும். பதினொன்று, ஆறு, ஒன்பது வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்கள் புதுமுகம் மாதிரிதான். அப்போதுதான் அவர்களுக்கு அறிமுகமாகும். பதினோராம் வகுப்பு மாணவர்கள் புதிய பாடங்களை எதிர்கொள்வார்கள். வணிகவியல், பொருளாதாரம், கணக்குப் பதிவியல் என்ற புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாகும்.

நாங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையான அளவில் பாடங்களைக் கொண்டுசேர்ப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்துவருகிறோம். கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செல்போன் வசதிகள் இல்லை. எங்கள் பள்ளியில் நான் மூன்று மாணவர்களுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்திருக்கிறேன். மேலும் சில மாணவர்களுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும். பாடங்கள் குறைக்கப்படுவதால் அவர்கள் தேர்வுகளை எளிதாக அணுகுவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com