சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா தரப்பு வழக்கறிஞராக பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ’ஜூன், ஜூலையிலேயே சசிகலா விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது’ என்று கூறியிருந்தார். ஆனால், இன்னும் சசிகலா விடுதலை ஆகவில்லை. அவரது விடுதலைக் குறித்து வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் தொடர்புகொண்டு கேட்டோம்,
“நான் கடைசியாக சசிகலாவை கடந்த மார்ச் 7 ஆம் தேதிதான் போய் பார்த்தேன். அதன்பிறகு, மீண்டும் அவரைப் போய் பார்த்துவிட்டு வந்தபிறகுதான் இதுகுறித்து விரிவாக பேசமுடியும். கர்நாடக சிறைத்துறை கொரோனாவால் எங்களை மட்டுமல்ல யாரையும் பார்க்க விடுவதில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே, அவர் விடுதலையாக தகுதிப் பெற்றுவிட்டார். அது தள்ளிப்போகவே, மார்ச் மாதம் இறுதியிலாவது வெளியாவார் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. அதன்பிறகு, கொரோனா ஊரடங்கு அறிவித்ததால் சந்திப்பு தடைப்பட்டுவிட்டது. மீண்டும் சசிகலாவை சிறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தால் மட்டுமே நிலவரம் தெரியும். அதன்பிறகுதான், விடுதலைக் குறித்து பேசமுடியும்.
சசிகலா வசித்த போய்ஸ்கார்டன் இல்லம் அரசுடைமை ஆனது சசிகலாவுக்கு தெரியுமா?
அவருக்குத் தெரியாது. மார்ச் மாதத்திற்குப் பிறகு, அவருடன் எந்த தொடர்புமே இல்லை. முன்பெல்லாம் மாதம்தோறும் இரண்டு தடவை சிறையில் சென்று சந்தித்துவிட்டு வருவேன். நான் போகவில்லை என்றாலும் மற்ற வழக்கறிஞர்கள் போவார்கள். அவர்களிடம் தகவல் சொல்லி அனுப்புவார்கள். இப்போது, எந்த தகவலும் இல்லை. பரப்பன அக்ரஹாரா சிறை மட்டுமல்ல; கர்நாடகாவில் எந்த சிறையிலும் சிறையில் இருப்பவர்களை பார்க்க அனுமதி கிடையாது. கொரோனாவால் விடுதலைக்கான ஃபைல்கள் மூவ் ஆனதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், சசிகலா வெளிவருகிறார் என்றால் எங்களுக்குத் தகவல் சொல்லியிருப்பார்கள். அப்படி எதுவும் சொல்லப்படவில்லை.
- வினி சர்பனா