தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'கே.ஜி.எஃப்' மூலம் வெகுவாக அறியப்பட்ட மூத்த கன்னட நடிகர் அனந்த் நாக்கிற்கு பத்ம விருது கொடுக்க வேண்டும் என ஆன்லைன் பிரசாரம் நடந்து வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் பல திறமையான நபர்கள் உள்ளனர், அவர்கள் அடிமட்டத்தில் விதிவிலக்கான வேலைகளைச் செய்கிறார்கள். பெரும்பாலும், அவர்களில் பெரும்பாலோரை நாங்கள் காணவோ கேட்கவோ இல்லை. இதுபோன்ற எழுச்சியூட்டும் நபர்களை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களை பத்ம விருதுக்கு #PeoplesPadma என்ற ஹேஷ்டேக்குடன் பரிந்துரைக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி இப்படி அறிவித்த இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது, இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான அனந்த் நாக்கிற்கு பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என கன்னட திரையுலக ரசிகர்கள் #PeoplesPadma என்ற ஹேஷ்டேக்குடன் பரிந்துரைத்து வருகின்றனர்.
கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் அனந்த் நாக் 300-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி மற்றும் உறுதுணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இண்டிபென்டென்ட் சினிமா எனப்படும் சுயாதீன படங்கள், 'மால்குடி டேஸ்' போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் அனந்த் நாக்.
கன்னட திரையுலகில் ஏழு மாநில விருதுகளை வென்ற 'சங்கல்பா' (1973) என்ற திரைப்படத்தின் மூலமாக அனந்த் நாக் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் 'கேஜிஎஃப்' படத்தில் இவரின் கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில்தான் இவரின் கலைச் சேவையை பாராட்டும் விதமாக, அவருக்கு பத்ம விருது கொடுக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக தற்போது ஆன்லைன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆன்லைன் பிரசாரத்துக்கு வித்திட்டவர் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இது தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டவர், ``கர்நாடகாவில் அபார திறமை உள்ளவர்களுக்கு பஞ்சமில்லை. அத்தகைய திறமை மற்றும் ஆளுமை கொண்ட மூத்த நடிகர் அனந்த் நாக். ஒரு நடிகராக, கன்னட திரைத்துறையில் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளார். அவருடைய பங்களிப்பை நாம் அங்கீகரிக்கும் நேரம் இது. #PeoplesPadma விருதுக்காக அனந்த் நாக் அவர்களைப் பரிந்துரைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். #AnanthnagforPadma என்று ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஆதரிக்கவும்" என்று கேட்டுக்கொண்டார்.
இவரின் பதிவை அடுத்து பலரும் நடிகர் அனந்த் நாக் பெயரைப் பரிந்துரைத்து பதிவிட்டு வருகின்றனர். பாஜகவின் கர்நாடக இளைஞர் பிரிவு தலைவர் சந்தீப் குமார், நடிகர் - திரைப்பட தயாரிப்பாளர் ரக்ஷித் ஷெட்டி மற்றும் இயக்குநர் ஹேமந்த் எம் ராவ் உள்ளிட்ட பலர் இந்த ஆன்லைன் பிரசாரத்தை வலுப்படுத்தி வருவதால் அனந்த் நாக்கிற்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதற்கிடையே, பத்ம விருதுகள் இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவ விருதாகும். பொது சேவை சம்பந்தப்பட்ட பல பிரிவுகளில் தனிநபர்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாக பத்ம விபூஷன், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக பத்ம விருது கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுதான் பரிந்துரைகள் முதல்முறையாக பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.