வரலாற்றில் இன்று சந்தனக்கடத்தல் வீரப்பன் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட தினம். இன்றுடன் வீரப்பன் மறைந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தினத்தில் வீரப்பன் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த சில தகவல்கள் இங்கே.
கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி இரவு தருமபுரி அருகே பாடி என்ற கிராமத்தில் வேகமாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் திடீரென்று சடன் பிரேக் போட்டு நின்றது. அந்த அதிர்வில் ஆம்புலன்ஸுக்குள் இருந்தவர்கள் நிலை தடுமாறினர். அப்போது ஆம்புலன்ஸில் இருந்து இருவர் இறங்கி ஓடினர். அடுத்த சில மணித்துளிகள் அந்த இடமே அதிரும் அளவுக்கு துப்பாக்கிகள் குண்டுமழை பொழிந்தன. அந்த தொடர் துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவித்தது தமிழக அதிரடிப்படை.
வீரப்பனின் வரலாற்றை அறிய, நாம் அக்.18, 2004- லிருந்து 52 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 1952ஆம் ஆண்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்தார் வீரப்பன். பள்ளிப் பக்கமே போகாத அவர் சிறு வயதில் மாடு மேய்த்ததாக சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஒரு ஆசிரியரிடம் படிக்க மட்டும் கற்றுக்கொண்ட அவர், பின் காடு, மாடு என்று சுற்றியிருந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட அவர், ஒரு கட்டத்தில் யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை கடத்தத் தொடங்கியுள்ளார். நெற்றிப்பொட்டில் சுட்டு யானையை வீழ்த்துவதே அவரது வாடிக்கை.
பின் தந்தத்தைத் தொடர்ந்து சந்தன மரங்களை நோக்கித் திரும்பியது வீரப்பனின் பார்வை. அதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்தினார். அதன்மூலம் அவருக்கு பணம் கொட்டத்தொடங்கியது. பின்னர் ஆள்கடத்தல், கொலை என நீள்கிறது வீரப்பனின் குற்றப்பட்டியல்.
அவர் செய்த மோசமான கொலைகளில் முக்கியமானவை என பட்டியலிடப்படுவை, 1993ஆம் ஆண்டு நிலக்கண்ணி வெடி மூலம் 22 பேரை கொன்றது, கர்நாடக வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸின் தலையை வெட்டியது போன்றவைதான். அதே போல வீரப்பன் கடத்தியவர்களில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா ஆகியோர் முக்கியமானவர்கள். ஆள்களை கடத்திவிட்டு அவர்களை விடுவிக்க தான் முன்வைக்கும் நிபந்தனைகளை கேசட்டாக வெளியிடுவது வீரப்பனின் வழக்கம்.
தமிழ்நாடு, கர்நாடகா அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போன வீரப்பனை பிடிக்க இருமாநில அதிரடிப்படைகள் களமிறக்கப்பட்டன. ஆனால் காட்டைப் பற்றி நன்கறிந்து வைத்திருந்த வீரப்பனை பிடிக்க இரு அரசுகளும் திணறிப்போயின. இந்த தேடுதல் வேட்டையில் அப்பாவி மலைவாழ் மக்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் உண்டு. குறிப்பாக நாட்டையே அதிர வைத்த வாச்சாத்தி வன்கொடுமை அக்காலக்கட்டத்தில்தான் நிகழ்ந்தது.
என்ன நடந்தாலும் வீரப்பனை தேடும் பணி மட்டும் தொடர்ந்தது. தேடுதல் வேட்டையில் முக்கியமான மாற்றமாக, அதன் சிறப்பு அதிரடிப்படையின் ஐ.ஜி பதவிக்கு 2001ஆம் ஆண்டு விஜயகுமார் என்பவர் நியமிக்கப்பட்டார். காட்டுக்குள் இருந்து வெளியே வரவைத்துவிட்டால் வீரப்பனை பிடிப்பது சுலபம் என நினைத்த விஜயகுமார் அதற்கான திட்டங்களை வகுத்தார். வீரப்பன் வெளியிட்ட வீடியோவில் எழுத்துகளை படிப்பதற்கு அவர் சிரமப்படுவதைக் காவல்துறையினர் கண்டுகொண்டனர். கண் சிகிச்சைக்காக காட்டைவிட்டு வீரப்பனை வெளியே கொண்டு வந்துவிட்டால், அவரை கைது செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்காக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வீரப்பன் முகாமுக்குள் ஊடுருவினர்.
அதிரடிப்படை எதிர்பார்த்து காத்திருந்த நாள் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வந்தது. அன்று காட்டைவிட்டு வெளியே வந்தார் வீரப்பன். அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோரும் உடனிருந்தனர். நான்கு பேரையும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றது தமிழக அதிரடிப்படை. சுமார் 20 நிமிடங்களில் வீரப்பன் இருந்த ஆம்புலன்ஸை நோக்கி 338 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும் அதில் இரண்டு குண்டுகள் மட்டுமே அவர் மீது பாய்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரப்பனை கொல்லும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றும், சரணடைய மறுத்து தாக்குதல் நடத்தியதாலேயே என்கவுண்ட்டர் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும் அதிரடிப்படை விளக்கமளித்தது.
காவல்துறை இவ்வாறு கூற வீரப்பன் உறவினர்களோ அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். வீரப்பன் உயிரிழந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும் அவரது இறப்பு குறித்த சந்தேகம் இன்று வரை தொடர்கிறது.
- மு.கவியரசன்