'மாலிக்' திரைப்படத்தில் பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் சனல் அமனுக்கு உண்மையில் வயது 34. நாடக நடிகரான அவர் தனது பட அனுபவங்களையும் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.
ஃபஹத் ஃபாசில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'மாலிக்' நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்தப் படத்தில் ஏரளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் வேளையில், சிறைச்சாலையில் ஃபஹத்தை கொலை செய்ய நியமிக்கப்பட்ட பள்ளி மாணவராக வரும் ஃப்ரெடி என்னும் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கும் விதமாக அமைந்தது. அந்த மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் சனல் அமன்.
17 வயது மாணவராக நடித்த சனலின் உண்மை வயது 35. அவர் 'மாலிக்' பட அனுபவம் தொடர்பாக மனம் திறந்திருக்கிறார். ஃப்ரெடி கேரக்டருக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளை பெற்றுவரும் நடிகர் சனல், ''படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணன்தான் எனக்கு இந்த கேரக்டரை கொடுத்தார். எங்களின் முதல் சந்திப்பு 2016-ல் நிகழ்ந்தது. அப்போது 'தி லவர்' என்ற நாடகத்தை நான் இயக்கி நடித்தேன்.
இந்த நாடகத்தை பார்க்க, மகேஷ் நாராயணன் வந்திருந்தார். எங்களின் நாடகம் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த நாடகம் முழுவதும் பார்த்து என்னை பாராட்டிய பின்னரே அவர் அங்கிருந்து சென்றார். பின்பு, 2019-ல் அவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவர் என்னிடம் கொச்சியில் வந்து அவரைச் சந்திக்கச் சொன்னார். அந்த சந்திப்பில்தான் அவர் 'மாலிக்' முழு ஸ்கிரிப்டையும் என்னிடம் விவரித்து எனது கதாபாத்திரம் பற்றி சொன்னார்.
ஆனால், நான் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்கத் தயங்கினேன். ஏனெனில், அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கான போதுமான நம்பிக்கை என்னிடம் இல்லை. மேலும், எனக்கு 34 வயதாகி இருந்தது. இதுபோன்ற காரணங்களால், ஏற்கத் தயங்கினேன். ஆனால், மகேஷுக்கு என் மீது முழு நம்பிக்கை இருந்தது. எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்ன அவர், சில கிலோ எடையைக் குறைக்க சொன்னார்.
இயக்குநர் மகேஷ் என் மீது நம்பிக்கை காட்டியதால் மட்டுமே நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும், என்னைத் தேடிவந்த அந்த வாய்ப்பின் மதிப்பை உணர்த்தால், தட்டிக் கழிக்க முடியவில்லை. தற்போது கிடைத்து வரும் பாராட்டுகளால், மகேஷ் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தது எனது அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறும் சனல், இந்த கதாபாத்திரத்திற்காக யோகா பயிற்சி மூலம், ஒரு மாதத்திற்குள்ளாக உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
நாடக நடிகரான சனல் பள்ளிக் காலத்தில் இருந்து நாடகத்தின் மீது தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். மேலும். டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பட்டப்படிப்பை முடித்த சனல் திரிச்சூர் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் இரண்டு ஆண்டுகள் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். எண்ணற்ற நாடகங்களில் நடித்துள்ள சனல் 'மாலிக்' திரைப்படத்துக்கு முன்பாகவே ஒரு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பேசப்பட்ட 'பிரியாணி' படத்தின் சஜின் பாபுவின் முதல் படத்தில்தான் சனல் நடித்திருக்கிறார்.
''எனது முதல் படம் சஜின் பாபு இயக்கிய 'அஸ்தமயம் வரே'. இருப்பினும், அந்தப் படம் பெரிதும் கவனிக்கப்படவில்லை. பின்னர் இந்தி - மராத்தி படம் ஒன்றிலும் சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறேன். இதுபோன்ற படங்களில் நடித்ததால், 'மாலிக்' பட கதாபாத்திரத்தை என்னால் சிரமமின்றி நடிக்க முடிந்தது. 'மாலிக்' எனது முதல் வெள்ளித்திரை திரைப்படம். எனது குடும்பத்துடன் வீட்டில் 'மாலிக்' பார்த்தேன். படம் பார்த்த பிறகு எனது அம்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். எனது குடும்பத்தினருடன் படம் பார்த்தது ஓர் அற்புதமான அனுபவம்.
படப்பிடிப்பின்போது நான் நடித்த முதல் காட்சி ஃபஹத்துடன் இருந்தது. இதற்கு முன்பு நான் அவரிடம் அதிகம் பேசாததால் நான் சற்று பதற்றமடைந்தேன். ஆனால், ஃபஹத் தான் பின்பு நான் நிதானமாக நடிக்க உதவினார். முதல் காட்சி படமாக்கப்பட்ட பிறகு, நாங்கள் ஒவ்வொருவரையும் நீண்ட காலமாக அறிந்திருப்பது போல நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். எனது முதல் பெரிய திரைப்படம் என்பதால் தியேட்டர் வெளியீடு இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. நான் எப்போதும் தியேட்டர்களால் ஈர்க்கப்பட்டவன். ஆனால், தொற்றுநோய்களின்போது, பாதுகாப்பான சூழலில், சினிமாவை ரசிக்க ஓடிடி தளங்கள் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்" என்று சனல் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தகவல் உறுதுணை: onmanorama.com