சேலம் சம்பவம்: தொடரும் காவலர்களின் அத்துமீறல்கள்... பின்புலம் என்ன?

சேலம் சம்பவம்: தொடரும் காவலர்களின் அத்துமீறல்கள்... பின்புலம் என்ன?
சேலம் சம்பவம்: தொடரும் காவலர்களின் அத்துமீறல்கள்... பின்புலம் என்ன?
Published on

சேலம் ஏத்தாப்பூரில், காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த வழக்கில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதுடன் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த வியாபாரி முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாத்தான்குளம் போல தமிழகத்தில் தொடரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணங்கள், தீர்வுகள் என்ன?

ஏத்தாப்பூர் - சேலம், சேலம் - பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை காவல்துறையினர் மடக்கினர். மளிகைக்கடை வியாபாரியான வெள்ளையன் என்கிற முருகேசன் உள்ளிட்ட 3 பேர் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், வாகனத்தின் மீது அடித்ததால் முருகேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த ஏத்தாப்பூர் காவல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை கண்மூடித்தனமாக தாக்கினார். பின் மண்டையில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

18 வயதாகும் மூத்த மகள், 17 வயது இளைய மகள், 14 வயது மகன் என 3 பிள்ளைகளுடன் முருகேசனின் மனைவி அன்னக்கிளி செய்வதறியது கதறிக்கொண்டிருக்கிறார். விசாரிக்காமல் தந்தையை அடித்துக் கொன்றது ஏன் என முருகேசனின் மகள் கண்ணீருடன் கேள்வி கேட்கிறார்.

முருகேசனுடன் வாகனத்தில் வந்த 2 பேர், எஸ்.எஸ் ஐ. பெரியசாமி உள்பட சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் விசாரணை மேற்கொண்டார். முருகேசன் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியசாமி மீது கொலை வழக்கு மற்றும் மனித உரிமை மீறல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து எஸ்எஸ்ஐ பெரியசாமி கைது செய்யப்பட்டார், இதற்கிடையே ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் வந்து டிஐஜி மகேஷ்வரி விசாரணை நடத்தியதையடுத்து பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அரசு சார்பில் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை என்ற கோரிக்கைகளுடன் முருகேசனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் தாக்குதலில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு குறித்து சேலம் சரக டிஐஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆணைய தலைவரான நீதிபதி எஸ்.பாஸ்கரன் சேலம் சரக டிஐஜி-யை 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மனித உரிமை ஆர்வலர் பூமொழி கூறும்போது, "சேலம் சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனையும் அவருடன் வந்த இரண்டு பேரையும் எளிய முறையில் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ரவுடித்தனமாக காட்டுமிராண்டித்தனமாக முருகேசனை, பெரியசாமியும் அவருடன் இருந்த சக காவலரான முருகனும், ஆயுதப்படை காவலர்களான திவாகரும் பாலாஜியும் சேர்ந்து அடித்ததன் மூலம் மனித உரிமை மீறலை நடத்தியிருக்கிறார்கள்.

காவலர்கள் எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு வழங்கவே இல்லை. ரவுடிகள் சாதாரண மக்களை எப்படி தாக்குவார்களோ அப்படியொரு தாக்குதலை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இந்திய விசாரணை முறை சட்டத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்ய வேண்டுமென்றால் சிறிய பலத்தை பிரயோகப்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறது. அந்த பலம் என்பதை இவர்கள் அடிப்பதாக கருத்தில் எடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனமாக அடிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோல இவர்கள் 302 மற்றும் 176 சட்டப்பிரிவின்படி பெரியசாமியை கைது செய்திருக்கிறார்கள், ஆனால் அவருடன் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த முருகன், திவாகரன், பாலாஜி ஆகியோரை இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களையும் சேர்த்து அவர்கள் மீது 302 சட்டப்பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைதுசெய்ய வேண்டும், அதோடு இவர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அரசு இறந்தவர்களின் வீட்டிற்கு பத்து லட்சமோ இருபது லட்சமோ பணத்தைக் கொடுத்துவிட்டு ஏதேனும் ஒரு அரசு வேலையை வழங்கி இந்த சம்பவத்தை மூடி மறைக்கிறார்கள்.

குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இந்த காவலர்களை பணியிடைநீக்கம் மட்டுமே செய்கிறார்கள். ஆனால், பணிநீக்கம் செய்வதில்லை. இதுதான் இவர்களின் ஆணவத்திற்கும் அட்டூழியத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. அதனால் சேலத்தில் நடந்த மனித உரிமை மீறலை ஏற்றுக்கொள்வே முடியாது. காவல் துறையினர் எப்படி நடக்க வேண்டுமென்று எத்தனையோ மனித உரிமை சட்டங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் எத்தனையோ இருக்கிறது. ஆனால், தமிழக காவல்துறையினர் இந்த சட்டங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் காலில் மிதித்து தனது ஆணவத்தைதான் தொடர்ந்து வெளிபடுத்தி வருகிறார்கள். இது காவல் துறையின் அதிகாரத் திமிரையும் வக்கிர புத்தியையுமே காட்டுகிறது” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரி சந்திரசேகர் கூறும்போது, ”சேலம் சம்பவத்தை பொறுத்தவரை முருகேசனுடன் வெளியே சென்ற மூன்று பேரும் மோட்டர் வாகனத்தில் திரும்புகிறார்கள். ஒரே வாகனத்தில் வந்த மூன்றுபேரையும் நிறுத்திய போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தலாம். ஆனால் காவலர்களுக்கு மனஉளைச்சல் அதிகம். அவர்களும் கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இருந்தாலும் மனிதர்களை அடிப்பது என்பது குற்றமான ஒரு செயல்தான். இந்த குற்றச் செயலுக்கு அவர் உயிரிழக்கும் அளவிற்கு அடிக்கவேண்டிய அவசியமே இல்லை.

சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்கூட பெரிய குற்றவாளிகள் கிடையாது. இப்போது காவலர்கள் தெரிந்தும் தெரியாமலும் எந்த தவறும் செய்துவிட முடியாது. காரணம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் இருக்கின்றன. இதன் மூலமாக ஏதாவது தவறு நடந்தால் வெளிவந்துவிடுகிறது. வாகனங்களில் வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் யாரும் மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்துவதில்லை. இதை நீதிமன்றங்கள் கூட சுட்டிக்காட்டியுள்ளது. போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக பதில்சொன்னால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்.

கைகளில் கம்போடு நிற்கும் போலீசார் வாகனங்களில் செல்பவர்களை ஓங்கி அடிப்பார்கள். இப்படி அடிக்கும் அவர்கள் கீழே விழுந்து மரணமடையும் வாய்ப்பும் இருக்கிறது. சட்டசபை நிகழ்வுகள் நடக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் எங்கேயும் நடக்கக் கூடாது என்று மேலதிகாரிகள் கடுமையாக ஆலோசனை வழங்குவார்கள். காவல் நிலையத்தில் கூட யாரையும் வைத்து விசாரிக்கக் கூடாது. பகலிலேயே அவர்களை விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் யாரையும் காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலீசாருக்கென்று தனிச்சட்டம் எதுவும் இல்லை, யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம்; அத்துமீறலாம் என்றெல்லாம் இல்லை. தவறு செய்தவர்களை பிடித்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதுதான் நம்முடைய வேலை. ஆனால் சிறிய பலப்பிரயோகம் தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் குற்றவாளியை கைது செய்யும்போது மட்டுமே. போலீசார் பொதுவெளியில் வைத்து அடித்து துன்புறுத்துவதை எந்த சட்டமும் ஏற்றுக்கொள்ளாது, இதெல்லாம் மனித உரிமை மீறலில்தான் வரும்.

இதேபோல பொதுமக்களும் போலீசாரை ஹெல்மெட்டை வைத்து அடித்த சம்பவங்களும் நடந்துள்ளது. முருகேசன் மது அருந்தியிருக்கிறார் என்றால் அவரிடம் மிகவும் பத்திரமாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மதுபோதையில் இருப்பவரை லேசாக தள்ளிவிட்டு கீழே விழுந்தால் கூட உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எந்தெந்த சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று போலீசாருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலதிகாரிகளும் போலீசார் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தி வருகிறார்கள். அப்படி இருந்தும் சில போலீசார் யூனிபார்ம் போட்டவுடன் கர்வம் கொள்கின்றனர். வேலையில் உள்ள எரிச்சல், பணிச்சுமை, இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com