போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு 5 சதவீதம் உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதேபோல் இனி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 3 சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14 வது ஊதிய உயர்வு தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை இன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. தொ.மு.ச, அண்ணா தொழிற்சங்க பேரவை, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 66 தொழிற்சங்க நிர்வாகிகள் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதில் இனி தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு என்றும், அதேபோல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும் என இறுதி செய்யப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாததால் சி.ஐ.டி.யூ மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் வெளி நடப்பு செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், “அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் சாதாரண கட்டண பேருந்து ஓட்டுநர் நடத்துநர் தினசரி வசூல் பேட்டா இரட்டிப்பு செய்யப்படும். மேலும் ஓய்வு பெற்றோர் மற்றும் அவர்களது துணைவியருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். இறந்த தொழிலாளர்களின் மனைவிக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் “கொரோனா கால சிறப்பு ஊதியம் 300 ரூபாய் ஒரு பணிக்கு வழங்கப்படும் . போராட்டம் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை அனைத்தும் கைவிடப்பட்டது. நிகழ்கால நிதிநிலை , கால சூழலால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என ஒப்பந்தம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இதுபோல பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பேமெட்ரிக்ஸ் முறையில் கிடைக்கவுள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஊதிய உயர்வு விவரம் பின்வருமாறு:
ஓட்டுநர் - 2012 முதல் 7981 ரூபாய் வரை
நடத்துனர் -1965 முதல் 6640 ரூபாய் வரை
தொழில்நுட்ப பணியாளர் - 2096 முதல் 9329 ரூபாய் வரை
அலுவலக பணியாளர் - 1965 முதல் 6640 ரூபாய் வரை
தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் 4585 முதல் 8476 ரூபாய் வரை
போக்குவரத்து பயணச்சீட்டு பரிசோதகர்கள் - 4692 முதல் 7916 ரூபாய் வரை
பணி | குறைந்தபட்சம் (ரூ.) | அதிகபட்சம் (ரூ.) |
ஓட்டுநர் | 2012 | 7981 |
நடத்துனர் | 1965 | 6640 |
தொழில்நுட்ப பணியாளர் | 2096 | 9329 |
அலுவலக பணியாளர் | 1965 | 6640 |
தொழில்நுட்ப மேற்பார்வையாளர் | 4585 | 8476 |
போக்குவரத்து பயணச்சீட்டு பரிசோதகர் | 4692 | 7916 |
ஊதிய ஒப்பந்தத்தை ஏற்காத சி.ஐ.டி.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் சவுந்திரராஜன் பேசும்போது, “தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான 7வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திலிருந்து சிஐடியு வெளிநடப்பு செய்தோம்.
பேச்சுவார்த்தையில் உள்ள ஒவ்வொரு அம்சத்திலும் சிஐடியு உழைப்பு பங்களிப்பு உள்ளது. 90 விழுக்காடு ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளோம். ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தவும், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற 21 வேலை நிறுத்த நாட்களை பணி நாளாக மாற்றி ஊதியம் வழங்க மறுத்ததை கண்டித்தும் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த பாதக அம்சத்தை கண்டித்து நாளை (ஆக.25) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/XpmZlMY02jI" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>