சுதந்திரப் போராட்டக் கதையில் ராமர்.! RRR படம் சொல்வது என்ன? - விமர்சனம்

சுதந்திரப் போராட்டக் கதையில் ராமர்.! RRR படம் சொல்வது என்ன? - விமர்சனம்
சுதந்திரப் போராட்டக் கதையில் ராமர்.! RRR படம் சொல்வது என்ன? - விமர்சனம்
Published on

பாகுபலி மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த பெயர் எஸ்.எஸ். ராஜமெளலி. அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்.டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட் ஆகியோர் நடித்திருக்கும் இந்த சினிமா மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இன்று(25 மார்ச்) திரைக்கு வந்திருக்கிறது.

1920களில் சுதந்திரப் போராட்டகாலத்தில் நடப்பது போலான கற்பனைக் கதையினை ராஜமெளலி உருவாக்கியிருக்கிறார். தங்கை மல்லியைத் தேடும் பீம், சுதந்திரப் போராட்டத்தில் தன் தந்தையை இழந்த ராம ராஜூ ஆகியோர் நீராகவும் நெருப்பாகவும் சித்தரிக்கப்பட்டு திரையில் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் தான் RRR.

முதலில் படத்தின் நிறைகளை பற்றிப் பார்க்கலாம். நிச்சயம், தயாரிப்பு வடிவமைப்பு மற்று கலை வேலைகள் பிரம்மிக்க வைக்கின்றன. கிராபிக்ஸ் காட்சிகளைப் பொறுத்த வரை ரசிகர்கள் நிச்சயம் திருப்தி அடைவர். அவ்வளவு உழைப்பு, அவ்வளவு ரசனை. புலிவேட்டை காட்சியாகட்டும், பாலத்தில் பற்றி எரியும் ரயில் காட்சியாகட்டும். பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றன. இன்னும் பல காட்சிகள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. படம் நெடுக கீரவானியின் இசை அழகாக அமைந்திருக்கிறது. ரசிக்கலாம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை. காட்சியனுபவத்தைச் சுவாரஸ்யமாக்க இவர்களின் வேலை உதவுகின்றன. ஆனால்….

ஒரு சினிமாவை நிறைய பொருட் செலவில் பிரம்மாண்டமாக எடுத்தால் போதுமா? படத்தின் கதையில் ஆன்மா வேண்டாமா...? ஆர்.ஆர்.ஆர் கதை மற்றும் திரைக்கதையில் துளியும் ஆன்மா இல்லை. உணர்வுப் பூர்வமாக நம்மால் எங்குமே ஒட்ட முடியவில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தன் சொந்த கற்பனையினால் பல இடங்களில் கொச்சைப்படுத்தியிருக்கிறார் ராஜமெளலி என்றே சொல்ல வேண்டும். ஆயுதம் தாங்கிய ஆங்கிலேயப் படையினை ராமாவதாரம் எடுத்தது போல ராம் சரண் வில்லும் அம்புமாக வந்து இந்துமதக் கடவுள் ராமனின் வேஷமிட்டு அம்பெய்தி வீழ்த்துவதெல்லாம் என்ன வகையான லாஜிக்.? எந்த தரப்பை திருப்திப் படுத்த இப்படியான காட்சி? இதற்கெல்லாம் ராஜமெளலி பதில் சொல்லவேண்டும்.

பாகுபலி போல முழுகற்பனை சினிமாவாக ஆர்ஆர்ஆர் இருக்கும் பட்சத்தில் அவர் ராமனைக் காட்டினாலும் வேறு யாரைக் காட்டினாலும் நமக்கு அதில் கேள்விகள் எதும் எழப் போவதில்லை. ஆனால் இந்திய விடுதலை யுத்தத்தை மையக் கருவாக கொண்டு எடுக்கப்படும் ஒரு சினிமாவில் ராமன் ஆங்கிலேயர்களை வில் அம்பெய்தி வீழ்த்துவது நிச்சயம் விமர்சனத்துக்குறியது.

தமிழாக்கம் செய்வதில் அத்தனை குழப்பம். “நிஜத்துக்கும் நான் எந்த தப்பும் செய்யல அண்ணா., என் கண்ணுக்குள்ள பாருங்க” என்கிறார் ஜூனியர். அதாவது “நிஜமா நான் எந்த தப்பும் செய்யலை அண்ணா., என் கண்ணப் பாருங்க” என்பது தான் அது. நமக்கு சில போன்கால்கள் வருமே “ஏடிஎம் கார்டு மேலே இருக்க நம்பர் சொல்லு சார்” என., இது போலத்தான் படம் முழுக்க மொழிமாற்றப் பிரதியில் தமிழ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் சினிமாதானே என்று இல்லாமல் இனி இதிலும் ராஜமெளலி உள்ளிட்ட இயக்குநர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆலியாபட் சமுத்திரக்கனி போன்ற முன்னனி நடிகர்களை ஜூனியர் ஆர்டிஸ்ட் போல பயன்படுத்தியிருப்பது துன்பம்.

படத்தின் பல காட்சிகள் கருப்பு வெள்ளை சிவாஜி படங்களை ரீ மேக் செய்தது போல உள்ளது. சங்கிலியால் கட்டப்பட்ட ஜூனியார் என்.டி.ஆர் சுதந்திரத் தாகமெடுத்து பாடல் பாடுகிறார். அவரை ராம் சரண் சாட்டையால் அடிக்கிறார். இதெல்லாம் 60களின் காலக்கட்டங்களிலேயே வழக்கொழிந்த காட்சிகள். மல்லியைக் காப்பாற்ற முயலும் ஜூனியருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆங்கிலேய இளவரசி ஜென்னியின் நட்பு ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைக்கிறது. ஜென்னியின் அழைப்பின் பெயரில் ஜூனியர் என்.டி.ஆர் ஆங்கிலேய கோட்டைக்குள் நுழைய முடிகிறது. நல்ல குணமான பெண்ணாக காட்டப்படுகிறார் ஆங்கிலேய இளவரசி. ஜூனியர் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் மல்லியை இளவரசியே ஜூனியர் என்.டி.ஆருடன் அனுப்பி வைத்திருப்பார். ஆனால் சிங்கம் புலிகளைக் கொண்டுவந்து களமாடி பல உயிர்களை அடித்து தும்சம் செய்து தான் மல்லியை காப்பாற்றுகிறார் பீம். ஏதும் வேண்டுதலாக இருக்குமோ என்னவோ!

உயிரற்ற ஆறடி உடலை எத்தனை பெரிய பிரம்மாண்ட பல்லக்கில் ஏற்றினால் தான் என்ன...? ராஜமெளலி அப்படித்தான் உயிரற்ற ஒரு சினிமாவை பிரம்மாண்டமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார். தொழில்நுட்பத்தில் காட்டும் பிரம்மாண்டங்களை சிந்தனையிலும் ராஜமெளலி காட்டியிருக்கலாம். சினிமா என்பது பலரது கடினமான உழைப்பால் உருவாக்கப்படும் ஒரு கலை. அப்படியான ஒப்பற்ற மனித உழைப்பை ஆர்.ஆர்.ஆர் போன்ற சினிமாக்கள் மூலம் வீணடிக்காமல் இருக்கலாம்.

நாம் பாகுபலியைக் கொண்டாடியது, பனைமரத்தை வளைத்து வீசும் பிரமாண்டத்துக்காக மட்டுமல்ல; அதன் கதையிலிருந்த ஆன்மாவுக்காகவும்தான் என்பதை ராஜமெளலிக்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டிய நேரமிது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com