'முதலில் சமூக சீர்திருத்தம்... பிறகே அரசியல்!' - இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தின பகிர்வு

'முதலில் சமூக சீர்திருத்தம்... பிறகே அரசியல்!' - இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தின பகிர்வு
'முதலில் சமூக சீர்திருத்தம்... பிறகே அரசியல்!' - இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தின பகிர்வு
Published on

அயோத்திதாச பண்டிதர், எம்.சி ராஜா, அம்பேத்கர் என பட்டியலின மக்கள் விடுதலையை முழு மூச்சாகவும், பெருங்கனவாகவும் கொண்டிருந்த பல தலைவர்கள் இருந்தார்கள். அந்த வரிசையில் மூத்தவராக நீண்ட காலம், அதாவது தனது 85 வயது வரை பட்டியலின மக்களின் குரலாய் ஒலித்து பயணித்தவர், இரட்டைமலை சீனிவாசன். இன்று அவரது 162-வது பிறந்த தினம்.

‘கற்பி… ஒன்று சேர்… புரட்சி செய்’  என்பதே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கரின் மாபெரும் முழுக்கம். சாதியின் பெயரில் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல், இன்று பொது சமூகத்தாலும் அறிவார்ந்த தலைவராக கொண்டாடப்படும் அம்பேத்கர் மகாராஷ்டிராவில் 1891-ஆம் ஆண்டு பிறந்தார். அவர் பிறந்த அதே ஆண்டில் தமிழகத்தில் பட்டியலின மக்கள் உரிமைகளுக்காகவும் கல்வி அதிகாரத்திற்காகவும்  ‘பறையர் மகாஜன சபை’யை  ஏற்படுத்தி போராடிக் கொண்டிருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். பட்டியலின மக்கள் உரிமை விவகாரத்தில் வட இந்தியாவை காட்டிலும் தமிழ்நாடு சமூக நீதி விஷயத்தில் எவ்வளவு முன்னோக்கி இருந்தது என்பதற்கு இரட்டைமலை சீனிவாசன் ஏற்படுத்திய 'பறையர் மகாஜன சபை'யும் முக்கியச் சான்று.

’தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (நீதிக்கட்சி)  தமிழகத்தில் 1916-ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது.  நீதிக்கட்சி வந்தபிறகுதான் ’பட்டியலின மக்கள் கல்வி கற்க முடிந்தது: உரிமைகளைப் பெற முடிந்தது’ என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே, ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறோம்: பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்; அவர்களுக்காக போராட அமைப்பு மட்டுமல்ல… பத்திரிகையையே கொண்டு வந்திருக்கிறோம்’  என்று பெருமையோடு சொல்ல தமிழக வரலாற்றின் ஆவண சாட்சியாய் விளங்கிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர்  இரட்டைமலை சீனிவாசன்.

பழைய செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் ஜூலை 7 இதே நாளில்தான் 1859 ஆம் ஆண்டு பெரும் செல்வந்தரான இரட்டைமலை – ஆதியம்மை தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் இரட்டைமலை சீனிவாசன். ’கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் உயர்ந்திருந்தாலும் எங்களைவிட நீ கீழானவர்தான்’ என்று ஒடுக்குதலுக்கு ஆளானபோது தஞ்சைக்கு குடிபெயர்ந்தது இவரது குடும்பம். ஆனால், அங்கும் நிலவுடமையாளர்களால் ஒடுக்கப்பட்டதால் கோவைக்கு குடிபெயர்ந்தனர். எங்கு குடிபெயந்தாலும் தனது கல்வி கற்கும் ஆர்வத்தை யாராலும் ஒடுக்கிவிட முடியாது என்பதில் தீவிரமாக இருந்த இரட்டைமலை சீனிவாசன் தஞ்சை மற்றும் கோவையில் பள்ளிப்படிப்பை, முடித்து கோவை அரசினர் கல்லூரியில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.

கல்லூரியில் பயின்ற 400 பேரில் கிட்டத்தட்ட 390 பேர் பிராமணராக இருக்க, பத்து பேர் மட்டுமே வேறு சாதியினர். அதில், இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில், அனுபவித்த சாதியக் கொடுமைகள், தனித்து செயல்பட்ட வலிகள் ஏராளம். அந்த இளம் வயதில், அவர் மனதில் ஏறியது பாடங்கள் மட்டுமல்ல; ’பிறப்பால் அனைவரும் சமம்’ என்று சமூகத்திற்கு கற்பிக்கவேண்டிய சிந்தனையும்தான்.

 ’கல்வியே ஒடுக்கப்பட்டவர்களின் பேராயுதம்’ என்பதை உணர்ந்து தீண்டாமைச் சூழலிலும் வைராக்கியத்துடன் கல்லூரிப் படிப்பை முடித்தவர்,  நீலகிரியில் பிரிட்டிஷ் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்துகொண்டே பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடும் கலகராகவும் தான் கற்றக் கல்வியை பயன்படுத்தத் துவங்கினார்.

1883-ஆம் ஆண்டு ஏழு மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என்று பிரிட்டிஷ் அரசு இயற்றிய சட்டம் பெரிய அளவில் 'ரீச்' ஆகாதபோது, அந்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வூட்டி பட்டியலின மக்களையே பள்ளிகளைத் துவக்கவைத்தார் இரட்டைமலை சீனிவாசன். பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சிறப்புப் பள்ளிகளை உருவாக்கவேண்டும் என்ற இவரது வேண்டுகோளை ஏற்று பிரிட்டிஷ் அரசும் சிறப்புப் பள்ளிகளை உருவாக்கியது. ஆனால், அப்படி பள்ளி துவங்க எதிர்ப்புகள், நிலம் கொடுக்க முன்வராமை, பட்டியலின மக்கள் பள்ளிக்கு மாற்று சாதி ஆசிரியர்கள் வராதது போன்ற பிரச்னைகள் வந்தன. ஆனால், கல்வி கற்க வெறும் கோரிக்கை மட்டும் வைக்காமல், அந்தக் கோரிக்கை செயல்படுத்தப்படும்போது ஏற்பட்ட இடர்பாடுகளுக்காகவும் களத்தில் நின்றவர் இரட்டை மலை சீனிவாசன். அவரால் உருவான சிறப்புப் பள்ளிகள்தான் பின்னாட்களில் உருமாறி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் ஆனது என்பது வரலாறு.

 ‘பட்டியலின மக்களின் உரிமைகள் குறித்து பேசாத எந்த அரசியல் இயக்கமும் தேவையில்லை’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததோடு 1891-ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் உரிமைகளைப் பெறவும், கல்வி உரிமைக்காகவும் ‘பறையர் மகாஜன சபை’யை ஏற்படுத்தினார்.  அதோடு நிறுத்தவில்லை. " ’பறையர்’ என்ற சொல்லில் என்ன இழிவு இருக்கிறது? அர்த்தத்தில்தான் இழிவு இருக்கிறது. ஒரு சொல்லுக்கு இழிவு என்றால், அதை கற்பித்துதான் போக்கவேண்டும். ஆகவே, அதை நெஞ்சுரத்தோடு பயன்படுத்துவதுதான் இழிவைப் போக்கும்” என்றுக் கூறி எந்த சொல்லால் ஒடுக்குகிறார்களோ அதே சொல்லால், 1893 ஆம் ஆண்டு ‘பறையன்’ இதழை ஆரம்பித்து சாதிக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். இந்தச் செயல்பாடுகளால், ’சமூக இதழியலின் முதல் முன்னோடி’ என்ற பெருமையும் இரட்டைமலை சீனிவாசனுக்கே உரியது. ‘பறையன்’ இதழுக்கு முன்பு பல இதழ்கள் வந்தன. ஆனால், அவருடைய இதழ்தான் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இந்தியாவின் பேரியக்கம் என்று சொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியையே ஒரு விஷயத்தில் தோற்கடித்தப் பெருமை இரட்டைமலை சீனிவாசனை சேரும். ’இந்தியன் சிவில் சர்வீஸ்’ பணிக்கு இந்தியர்கள் தேர்வு எழுதவேண்டும் என்றால் லண்டன் சென்றுதான் எழுதவேண்டும். அங்கு தேர்ச்சிப் பெற்றவர்களே அதிகாரிகளாக வரமுடியும். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முதல் இந்திய உறுப்பினரான தாதாபாய்  நெளரோஜி, ’இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை இந்தியாவிலும் நடத்தவேண்டும். அப்போதுதான், இந்தியர்களும் பங்கெடுக்க முடியும்’ என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஆராய்ந்து செயல்படுத்துவதற்கு இந்திய செயலாளருக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் நாடாளுமன்றம். 

அப்படி, இந்தியாவில் ஆராயும்போது, அதற்கு எதிர்ப்பாக 3000-க்கும் மேற்பட்டவர்களின் கையெழுத்தை வாங்கி 112 அடிக்கு கடிதம் எழுதி ”இந்தியாவில் இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் ஆதிக்க சாதியினர் மட்டுமே வெற்றி பெறுவார்கள். ஏற்கெனவே, தங்கள் சாதி பலத்தால்தான் ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் ஒடுக்குகிறார்கள். இவர்களுக்கு அரசு அதிகாரமும் கிடைத்துவிட்டால், இன்னும் மக்களை ஒடுக்குவார்கள். ஆகவே, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை நீங்கள் இந்தியாவில் நடத்தக்கூடாது. லண்டனில் மட்டுமே நடத்தவேண்டும். இந்தத் தேர்வை இங்கிலாந்தினர் மட்டுமே எழுதினால் நல்லது. ஏனென்றால், அவர்கள் சாதிய பாகுபாட்டை பார்க்க மாட்டார்கள். அவர்கள் சமூகத்தில் சாதி கிடையாது. ஆகவே, அவர்கள்தான் இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள். என்றைக்கு இந்தியர்கள் சாதியை விட்டொழிகிறார்களோ அன்றைக்குத்தான் இவர்கள் ஆளத் தகுதியானவர்கள்” என்று அழுத்தமாக மனு அளித்ததோடு 1893 ஆம் ஆண்டு இதற்கு எதிராக கூட்டமும் நடத்தினார் இரட்டைமலை சீனிவாசன்.

மிக முக்கியமாக அவர் அளித்த மனுவில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டியலின மக்களை சேர்க்காதது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். அவர், அனுப்பிய அந்த மனுவும்கூட,  “இந்தியாவில் இப்போது இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்த சாதகமான சூழல் இல்லை” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை அறிவிக்க வைத்தது. அன்றைய காலத்திலேயே, அதுவும் இந்தியாவின் பேரியக்கமான காங்கிரஸுக்கே சிம்ம சொப்பனமாய் விளங்கி இந்திய அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவரான தாதாபாய் நெளரோஜியை மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தோற்கடித்தார் இரட்டைமலை சீனிவாசன். ’இந்தியாவில் முதலில் சமூக சீர்திருத்தம்தான் தேவை. அதற்குப்பின்புதான் அரசியல் சீர்திருத்தம்’ என்ற தெளிவான புரிதல் கொண்டிருந்தார்.

 இரண்டு வட்ட மேஜை மாநாட்டில் இந்தியா சார்பாக கலந்துகொண்டது,  புனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று அம்பேத்கருடன் நட்பு பாராட்டிய இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் தன்னைவிட வயதில் குறைந்தவர் என்றாலும் அம்பேத்கரின் அறிவை போற்றியவர். வட்டமேஜை மாநாட்டில் தனக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரங்களை அம்பேத்கர் இன்னும் அழுத்தமாக பேசுவார் என்பதால் அவருக்குக் கொடுத்தார்.

  அதேசமயம், அவரது கருத்தில் முரண்படவும் செய்தார். 1935 ஆம் ஆண்டு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தை தழுவதே சிறந்த வழி என்றபோது, ‘நீங்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிறீர்கள்? நாம்தான் இந்துவே கிடையாதே? பிறகு எப்படி நாம் அதிலிருந்து வெளியேற முடியும்?’ என்றார்.  சாதியக் கொடுமைக்கு மதமாற்றம் தீர்வாகாது என்பதை வலியுறுத்தியவர், தியாஸபிக்கல் சொசைட்டியை நிறுவிய கர்னல் ஆல்காட் புத்த மதத்தை ஆதரித்ததையும் அயோத்திதாசர் புத்தமதத்தை ஏற்றதையும் ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நியமன சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது, பட்டியலின மக்களை ஏமாற்றி வாங்கும் கைநாட்டு பத்திரங்களை ரத்து செய்தல், பொதுப்பயன்பாட்டு உரிமைகளை பட்டியலின மக்களுக்கும் வழங்குதல், விடுமுறை நாட்களில் மதுக்கடைகளை மூடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் சாதிக் கொடுமைகள் குறித்து பிரிட்டிஷ் அரசிடம் எடுத்துக் கூற 1900-ஆம் ஆண்டு லண்டன் செல்ல மும்பைக்குச் சென்றார் இரட்டைமலை சீனிவாசன். ஆனால், மும்பையில் அவருக்கு லண்டன் செல்லும் கப்பல் கிடைக்காததால் தென்னாப்பிரிக்கா செல்லும் நிலை ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு காலம் அரசுப் பணியில் இருந்து  ஓய்வுபெறும்போது நடந்த உபசரிப்பில் “சந்தோஷமாக இருக்க நான் ஊருக்கு செல்லவில்லை. என் மக்களுக்காக நான் பாடுபட்டேன். 20 ஆண்டு காலம் இங்கு வந்து தங்கிவிட்டேன். மீண்டும் அந்தப் போராட்டத்தை தொடங்குவதற்காகத்தான் நான் இந்தியா செல்கிறேன்” என்றுக் கூறியவர், தனது சொல்லை சாகும் வரை செயலாக்கி பட்டியலின மக்களின் உரிமைகளிலும் வளர்ச்சியிலும் பங்கெடுத்துக் காட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com