நவீன கொள்ளையர்களாக மாறிய உணவகங்கள்..!

நவீன கொள்ளையர்களாக மாறிய உணவகங்கள்..!
நவீன கொள்ளையர்களாக மாறிய உணவகங்கள்..!
Published on

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற பெயரில், நாடு முழுவதும் கடந்த ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இதில் சேவைகள் மற்றும் பொருட்களுக்கு 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையால், பொருளாதாரத்தில் சுணக்கம்; தொழில் துறையில் வீழ்ச்சி; பொதுமக்கள், வணிகர்கள் என பலதரப்பினரும் பாதிப்பு என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. இதனால், ஜி.எஸ்.டி. வரியில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில், ஏசி உணவகங்களுக்கான 18% வரியும், ஏசி அல்லாத உணவகங்களுக்கான 12% வரியும் குறைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக அனைத்து உணவகங்களுக்கும் 5 சதவிகிதமே வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கும் வந்துள்ளது. மேலும், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டன.

இதன் மூலம், உணவகங்கள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை கணிசமான அளவுக்கு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, பொருட்களின் விலை குறையாமல் இருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். வரி குறைப்புக்கு முன்பு உள்ள விலையையும், வரி குறைப்புக்கு பிறகு உள்ள விலையையும் ஆராய்ந்தால், இப்படியா நூதன முறையில் கொள்ளையடிப்பார்கள் என்று, வியாபாரிகள், நிறுவனங்கள் மீது ஆத்திரம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

உதாரணமாக, ஏசி உணவகம் ஒன்றில் 1,000 ரூபாய்க்கு ஒரு குடும்பம் சாப்பிடுகிறது என்றால், வரி குறைப்புக்கு முன் ஜி.எஸ்.டி.யாக (18%) ரூ.180 செலுத்த வேண்டும். தற்போது 5 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டிருப்பதால், ரூ.50 செலுத்தினால் போதுமானது. இதனால் உணவருந்திய குடும்பத்துக்கு ரூ.130 கிடைத்திருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்திருக்கிறது? ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டிருப்பதற்கு ஏற்ப, இந்த தொகையை ஈடுகட்டும் அளவிற்கு உணவுப் பொருட்களில் விலையை உயர்த்திவிட்டார்கள்.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் விலை குறைப்பு செய்யப்பட்டதால், சிறிதளவு பலன் மக்களுக்கு சென்று சேர்கிறது. ஆனால் பெரும்பாலான உணவகங்கள் விலை குறைப்பு செய்யாமல் நூதன முறையில் கொள்ளையடித்து வருகின்றன. இதனால், ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க முடியாமல் போயிருக்கிறது. இது உணவகங்களில் மட்டுமல்ல; ஏற்கனவே குறிப்பிட்டது போல, மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட நிறுவனங்களிலும் இதே நிலைதான். இப்படியான வியாபாரிகள், உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரப்போகிறது என்ற அறிவிப்பு வந்த பிறகு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்ட உணவகங்கள், அதற்குமேல் 18% (ஏசி உணவகங்கள்) அல்லது 12% (ஏசி அல்லாத உணவகங்கள்) வரியை வசூலித்தன. இது, ஜி.எஸ்.டி. கொண்டுவராததற்கு முன்னர் வசூலிக்கப்பட்ட வரிகளைவிட அதிகமாக இருந்ததால், மக்கள் ‘ஒரே நாடு, ஒரே வரி’ முறையால் அவதியடைந்தனர்.

உணவு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு 3 காரணங்களை கூறுகின்றனர். ஒன்று, வரி குறைப்புக்கு முன்னரே பொருட்களை வாங்கியிருப்பதால், அவற்றை புதிய வரி விதிப்புக்கு ஏற்றவாறு விற்பதற்காக விலையை உயர்த்தியிருப்பதாக கூறுகின்றன. மற்றொன்று, உள்ளீட்டு வரி வரவை (ITC – INPUT TAX CREDIT) மத்திய அரசு ரத்து செய்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, மூலப்பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெறும் முறை. மூன்றாவதாக, விலைவாசி ஏற்றம். இவை எல்லாவற்றையும் எப்படிக் கணக்கிட்டு நியாயப்படுத்தினாலும் கூட, ஜி.எஸ்.டி. வரி பெருமளவு குறைக்கப்பட்டதன் மூலம் ஒரு சிறிய பங்காவது மக்களுக்கு சென்று சேருவது தவிர்க்க முடியாதது.

அதை செய்யாமல், ஜி.எஸ்.டி. வரியை வைத்து நூதன முறைகேட்டில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், கணினியில் ஏற்பட்ட கேளாறு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் மாறியிருப்பதாக கூறி மக்களை ஏமாற்ற நினைக்கும் உணவகங்களை நினைத்து சிரிப்புதான் வருகிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய 5% வரி மட்டும் பில்-லில் சரியாக இருக்கிறது. ஆனால் அவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களின் விலை மட்டும் கணினி கேளாறால் ஏறியிருக்கிறது.

ஜி.எஸ்.டி அமலுக்கு வரும்போது, உணவகங்களுக்கு 18% வரியா? என கொந்தளித்து, மத்திய அரசுக்கு புகாரையும், எதிர்ப்பையும் மக்கள் தெரிவிக்க வேண்டும் என்று போஸ்டர் அடித்து சொன்ன உணவகங்கள்தான் இன்று கொள்ளையில் ஈடுபடுகிறது. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு மக்களுக்கு நியாயமாக சென்று சேரவேண்டிய பலனை (பணத்தை) சுரண்டிக் கொழிக்கும் உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்டறிந்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மக்களிடம் ஏமாற்றிய பணத்தை கணக்கிட்டு வசூலித்து, அதை அரசின் வரி வருவாயில் சேர்க்க வேண்டும். 

ஜி.எஸ்.டி. வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? குறைக்கப்பட்ட பொருட்களுக்கான வரிகளின் பலன் மக்களுக்கு கிடைக்கிறதா? என்பதை மத்திய – மாநில அரசுகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். ஏமாற்றி வரி வசூல் செய்யும் நிறுவனங்கள் குறித்து தெரியவந்தால், ஜி.எஸ்.டி. குழுவிற்கோ, வணிக வரித்துறைக்கோ அல்லது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கொள்ளை லாப தடுப்புக் குழுவுக்கோ மக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் 'டிஜிட்டல்' இந்தியாவில் உருவாகும் நூதன கொள்ளையர்களை மட்டுப்படுத்த முடியும்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com