அரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா?

அரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா?
அரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா?
Published on

அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அரசு அதிகரித்ததைத் தொடர்ந்து, அம்முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகி வருகின்றன. 

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறையின் 2021- 2022ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் ஆகியவற்றை நிரப்புவது குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதற்குரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு இதற்கு முன் 30 சதவீதமாக இருந்தது.

பாலின சமத்துவம், நிதிச் சுதந்திரம், சம உரிமை அதிகாரம் என இதில் பல நன்மைகள் கிடைக்கும் என்பதால், இதற்குப் பெண்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கின்றது. ஆனால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்த அறிவிப்பிற்குப் பல இடங்களில் எதிர்ப்புக் குரல்களும் எழுந்திருக்கின்றன. 30 சதவிகித இட ஒதுக்கீடோடு, பொதுப் பிரிவான 70 சதவீதத்திலும் பெண்களால் போட்டிப்போட முடியும் என்பதால் ஏற்கனவே, அரசுப் பணிகளில் சுமார் 60% பணியிடங்களைப் பெண்களே பெறுகிறார்கள் எனவும், அதனை 40 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதால் அது 70 சதவிகிதத்திற்கும் மேல் என உயரலாம் எனவும் ஆண்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

1989-ல் தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி 30 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தார். அப்போது இருந்த பெண்களின் நிலையையும், சுதந்திரத்தையும் ஒப்பிடும்போது, இப்போது அவர்களின் சமூக நிலை மேம்பட்டிருக்கிறது. இந்த சூழலில் மேலும் 10 % இடஒதுக்கீடை உயர்த்துவது, அரசியல் ஆதாயத்திற்கானது எனும் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

முக்கிய அரசுத்துறைகளில் ஆண் மற்றும் பெண் ஊழியர்களின் விகிதம்:

நிர்வாகம் சார்ந்த வேலைகளில் பெண்கள் குறைந்த அளவில் உள்ளனர். இதையே உயர் பதவி, கடைநிலை ஊழியர்கள் என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். நிர்வாகப் பணிகளில் பெண்கள் கிட்டத்தட்ட 50% பேர் கடைநிலை ஊழியர்களாக உள்ளனர். நிர்வாகப் பணிகளில் உயர் பதவிகளில் 20% பெண்கள் மட்டுமே உள்ளதாகத் தகவல்.

சேவை சார்ந்த பணிகளில் பெண்களின் சதவிகிதம் அதிகம்

செவிலியர், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களில் 90- 95% பெண்கள் உள்ளதாகவும் அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களில் 60-70% பெண்கள் இருப்பதாகவும் தகவல் உள்ளது.

மருத்துவம், மருத்துவத்துறை சார்ந்த பணியிடங்களில் 50% மேற்பட்ட பெண்கள் பணிபுரிகிறார்கள். சட்டத்துறையில் 12% குறைவாகவே பெண்களின் எண்ணிக்கை உள்ளதாகத் தகவல் உள்ளது. 

பொதுப்பணித்துறை, கட்டுமானம் போன்ற களப்பணிகள் சார்ந்த துறைகளில் பெரும்பாலும் ஆண்களே பணியமர்த்தப்படுகின்றனர். இதில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது.


இது தொடர்பாக போட்டித் தேர்வு பயிற்சியாளர் அய்யாசாமி பேசுகையில், ''பெண்கள் முன்னேற்றம் என்பது சமூக, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தரங்களிலும் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றால், அதற்கு அடுத்தக்கட்டமாக சமூகத்தில் அதிகாரம் பெறுவார்கள். அரசியல் தளத்தில் அதிகாரம் பெறுவார்கள். பொருளாதாரத்துக்கு அடிப்படையான கருவி என்றால் வேலைவாய்ப்பு. இந்த வேலைவாய்ப்பில் 30லிருந்து 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் ஆண்களிடமிருந்து ஏன் எதிர்ப்பு வருகிறது என்றால், 30லிருந்து 40 சதவீதம் உயர்த்தப்பட்டதால் அல்ல. இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் முறையில் சில நிர்வாக பிரச்னை இருக்கிறது. இதனால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது. அதைத்தான் பேசுகிறோமே தவிர, 40 சதவீதம் இட ஒதுக்கீடு உயர்த்தியதை எதிர்க்கவில்லை. இந்தியாவை பொறுத்தவரை இரண்டு வகையான இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒன்று வெர்டிக்கல் மற்றொன்று ஹரிசான்டல் இட ஒதுக்கீடு. உதாரணத்துக்கு 1000 பணியிடங்கள் இருந்தால், தமிழ்நாட்டு இடஒதுக்கீட்டு முறையை அடிப்படையாக கொண்டு பின்பற்றப்படும். ஹரிசான்டல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்போது சிக்கல் ஏற்படுகிறது. டிஎன்பிஎஸ்சி போன்ற சில இடங்களில் இது பிரச்னையாகிறது. ஆண்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படவில்லை. போட்டிதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது'' என்றார்.

போட்டித் தேர்வு பயிற்சியாளர் சிவபாலன் பேசுகையில், ''தமிழ்நாட்டின் இன்றுவரை பாலின சமத்துவம் நிலவவில்லை. 1989 கருணாநிதி 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். ஆனால் இன்று எந்த அரசு துறையிலும் 50-50 ஆண், பெண் என்ற சமத்துவத்தை அடையவில்லை. சமூக,பொருளாதார, அரசியலில் பெண்களின் பங்கு குறைவாகத்தான் இருக்கிறது. அரசு கொண்டு வந்த 40சதவீத இட ஒதுக்கீடு பெண்கள் முன்னேற்றத்துக்கான அடித்தளம். மீதமுள்ள 60 சதவீதத்தில் போட்டியிட்டு யார் வேண்டுமானாலும் மேலே வரமுடியும். பெண்கள் 50 சதவீத இடங்களில் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு இட ஒதுக்கீடு தேவையற்றது என முடிவுக்கு செல்லலாம். நாம் 50 சதவீத இலக்கை அடைய போராடிக்கொண்டிருக்கிறோம். அதுவரை நாம் இவற்றை பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com