டெல்டா மற்றும் டெல்டா+ வேறுபாடுகளும் தாக்கங்களும் - ஆராய்ச்சியாளர் வின்சென்ட் விளக்கம்

டெல்டா மற்றும் டெல்டா+ வேறுபாடுகளும் தாக்கங்களும் - ஆராய்ச்சியாளர் வின்சென்ட் விளக்கம்
டெல்டா மற்றும் டெல்டா+ வேறுபாடுகளும் தாக்கங்களும் - ஆராய்ச்சியாளர் வின்சென்ட் விளக்கம்
Published on

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் டெல்டா + வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 40 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா மற்றும் டெல்டா + வகை குறித்த சந்தேகங்களுக்கு புதிய தலைமுறைக்கு விளக்கமளித்தார் அமெரிக்காவில் கொரோனா குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் மயோ க்ளினிக்கல்ஸை சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் வின்சென்ட்.

டெல்டாக்கும் டெல்டா+க்கும் என்ன வேறுபாடு? அடுத்த அலையை இது உருவாக்குமா?

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கும் டெல்டா வகைக்கும் நடுவே நிறைய பிறழ்வுகள் இருக்கிறது. அதில் சில மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. டெல்டா + வகையில் மேலும் பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த டெல்டா + வகை வைரஸால் அங்கு கொரோனா தடுப்பூசி சரியாக வேலைசெய்யவில்லை.

புதிய வகை வைரஸ் வந்ததால் அடுத்த அலை உருவாகும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு முறையும் பிறழ்வுகள் ஏற்படும்போது அது அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கும் அளவிற்கு, தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இதுவரை உருவான பிறழ்வுகளில் எந்தவகை கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது?

இதுவரை மரபணு பிறழ்வுகள் அடைந்த வைரஸ்களிலிருந்து நான்கு வகைகளைத்தான் WHO அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக கருதுகின்றனர். அமெரிக்காவில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை. இதன் பரவும் வேகம் அதிகமாக இருந்தது. அடுத்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா வகை. அங்கு தடுப்பூசி சரியாக வேலை செய்யாததுதான் அதிக கவலையை ஏற்படுத்தியது. அடுத்து பிரேசிலில் கண்டறியப்பட்ட காமா வகை. அடுத்ததாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை. இதன் பரவும் வேகமும், வைரஸின் தாக்கமும், தடுப்பூசி சரிவர வேலைசெய்யாததும் இதில் அதிகமாகவே இருக்கிறது. இதனால் 4 வகைகளில் டெல்டா வைரஸ்தான் மிகவும் மோசமானதாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள டெல்டா+ வகையில் தென் ஆப்பிரிக்கா பிறழ்வும் சேர்ந்துள்ளதால் இது கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

தற்போதுவரை பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளின் நிலை என்ன? அவை உருமாற்றமடையும் வைரஸுகளை கட்டுக்குள் வைக்குமா?

தடுப்பூசிகளை பொருத்தவரை, இந்தியாவில் உள்ள டெல்டா வகை வைரஸ்களின்மீது முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும்போது அதன் செயல்திறன் குறைவாக இருக்கிறது. அதேசமயம் இரண்டும் டோஸ்களும் செலுத்தியபிறகு செயல்திறன் அதிகரிக்கிறது. குறிப்பாக அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதியானவர்கள்மீது கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் 60% ஆகவும், மற்றவர்களுக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தியபிறகு அதன் செயல்திறன் 92% ஆகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்தும்போது அது மூன்றாம் அலை உருவாவதை குறைக்கும்.

ஆல்பா வகையைவிட டெல்டா வகை தீவிரத்தன்மை குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆல்பாவை விட டெல்டா மிகவும் தீவிரத்தன்மையுடன் இருக்கிறதா?

இங்கிலாந்தில் மிகவும் தீவிரமாக இருந்த வைரஸ் ஆல்பா. அதேபோல் இந்தியாவில் தற்போது மிகவும் தீவிரமான வைரஸாக டெல்டா இருப்பதால் இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் ஆல்பா வைரஸை விட டெல்டா வைரஸின்மீது தடுப்பூசியின் செயல்திறன் சற்று குறைவாகத்தான் இருப்பதாக தெரியவந்துள்ளது. டெல்டாவகைதான் தற்போது மற்ற நாடுகளிலும் பரவிவருகிறது.

6-8 வாரங்களுக்குள் இந்தியாவில் மூன்றாம் அலை பரவும் என எய்ம்ஸ் இயக்குநர் கூறியிருக்கிறார். தற்போது எந்தெந்த நாடுகளில் 3ஆம் அலை பரவிவருகிறது? இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் 40 -50% பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டதால் 3ஆம் அலை சற்று குறைவாகவே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதுபோன்று இல்லாததால் 3ஆம் அலைக்கான வாய்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவர் என்று எனக்கு தோன்றவில்லை.

தடுப்பூசிக்கான இடைவெளி எப்படி இருக்க வேண்டும்? இரண்டு டோஸ்களிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாமா?

18 வயதிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதைவிட அதற்குமேல் உள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவேண்டும். மேலும் தடுப்பூசியின் பக்க விளைவுகளையும் கருத்தில்கொள்ள வேண்டும். கனடா போன்ற மற்ற நாடுகளில் இரண்டு டோஸ்களிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கின்றனர். அதில் பக்கவிளைவுகள் பெரிதாக இல்லை. ஆனால் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு குறித்த ஆராய்ச்சிகள் அவ்வளவாக இல்லாததால் தற்போது இதை முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது.

கொரோனாவிற்கு பிறகான பக்க விளைவுகளை சரிசெய்வது எப்படி?

தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்கிறது. சிலருக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் இருக்கிறது. மருந்தின் தாக்கமும் சிலருக்கு இருக்கிறது. ஆராய்ச்சிப்படி, 10-20% பேருக்கு பக்கவிளைவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிலருக்கு தடுப்பூசிக்கு பிறகு சிறிது முன்னேற்றம் தெரிகிறது. எனவே கொரோனாவிற்கு பிறகான பக்கவிளைவுகளை சரிசெய்வதைவிட கொரோனா வராமல் பார்த்துகொள்வதே சிறந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com