இதயநலன் மீது அக்கறை கொண்டவரா நீங்கள்? எப்படித்தான் பாதுகாப்பாக இருந்தாலும் உங்களுடைய இதய நலன் என்பது உங்களுடைய ரத்த வகையை பொருத்தது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது என்றால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ஆம், குறிப்பிட்ட ரத்த வகை உள்ளவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. பெரும்பாலும் நமது ரத்த வகை என்ன என்பது நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அனைவரின் ரத்தமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் அதிலுள்ள சிறிய மாற்றங்கள் ரத்தத்தை வகைகளாக பிரிக்கின்றன. A+, A-, B+, B-, O+, O-, AB+, AB- தான் பெரும்பாலான ரத்தவகைகள்.
A, B மற்றும் O ரத்த வகைகள் என்றால் என்ன?
A, B மற்றும் O என்ற எழுத்துக்கள் ABO மரபணுவின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கின்றன. இதுதான் நமது இரத்த அணுக்களை வெவ்வேறு விதத்தில் பல்வேறு இரத்த வகைகளாக பிரிக்கிறது. அதேசமயம் AB வகை இரத்தத்தை உடையவர்களின் ரத்த சிவப்பணுக்களில் A மற்றும் B ஆன்டிஜென்கள் உற்பத்தியாகும். அதுவே O வகை உள்ளவர்களின் ரத்தத்தில் எந்த ஆன்டிஜென்களும் சுரக்காது.
நேர்மறை அல்லது எதிர்மறை ரீசஸ் (Rh or Rhesus) காரணி என்றால் என்ன?
ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதங்களை பொருத்து அவற்றை நேர்மறை அல்லது எதிர்மறை என வகைப்படுத்தலாம். உங்கள் ரத்தத்தில் புரதம் இருந்தால் அதன் Rh - நேர்மறை. O- ரத்தவகை உள்ளவர்களை '’உலகளாவிய நன்கொடையாளர்கள்’’ என்று அழைக்கின்றனர். ஏனென்றால் அவர்களுடைய ரத்தத்தில் எந்த ஆன்டிஜென்களோ அல்லது புரதங்களோ இருக்காது. இந்த ரத்தத்தை அவசரகாலங்களில் எந்த உடலும் ஏற்றுக்கொள்ளும்.
உங்கள் ரத்த வகை மற்றும் ரீசஸ் காரணி என்ன?
இப்போது லைசன்ஸ் எடுக்கவோ அல்லது விண்ணப்ப படிவங்களை நிரப்பவோ கூட ரத்தவகையை குறிப்பிடவேண்டும். ரத்த வகையை அறிந்து வைத்திருப்பது அவசரகாலத்தில் முக்கியமானதாக இருப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்தைப் பற்றிய சில முக்கியமான தகவல்களையும் வழங்க முடியும். தொடர்ந்து நடைபெற்று வரும் ரத்த ஆராய்ச்சிகள் நாம் எதிர்பார்ப்பதைவிட பல முக்கியமான தகவல்களை நமக்கு வழங்கி வருகின்றன. குறிப்பாக ஆரோக்கியத்தை குறித்த விவரங்களை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக இதய நோய்களுக்கும் ரத்த வகைகளுக்கும் உள்ள தொடர்பை இந்த ஆராய்ச்சிகள் விளக்குகின்றன.
இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் ரத்த வகை
O ரத்தவகையைவிட A, B மற்றும் AB ரத்தவகை உடையவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழத்தல் போன்ற பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன். A மற்றும் B ரத்த வகையுடைய ஆண்களுக்கு ரத்த உறைவு ( thrombosis) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். O ரத்தவகை ஆண்களுடன் ஒப்பிடும்போது தீவிர நரம்பு ரத்த உறைவு அதிகமாக இருக்கும்.
A மற்றும் B ரத்தவகை உள்ளவர்களுக்கு 8 சதவீதம் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும், 10 சதவீதம் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் ஜெசிகா ரெண்டால் CNET-இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேபோல் ரத்த உறைதல் விகிதங்களில் உள்ள வேறுபாடு மிக அதிகமாக உள்ளது எனவும் அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் தெரிவித்திருக்கிறது.
அதே ஆய்வில் A மற்றும் B ரத்தவகை உள்ளவர்களுக்கு ஆழ் நரம்பு ரத்த உறைதல் பிரச்னை வரும் வாய்ப்புகள் 51 சதவீதம் உள்ளதாகவும், அதேபோல், நுரையீரல் அடைப்பு வரும் வாய்ப்புகள் 47 சதவீதம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. இதுபோன்ற ரத்த உறைதல் பிரச்னைகள் இதயம் செயலிழத்தலையும் அதிகரிக்கும்.
இந்த பிரச்னைகளுக்கான காரணம் A, B அல்லது AB ரத்த வகைகள் உள்ளவர்களின் உடலில் ஏற்படும் அழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் டோக்ளாஸ் குக்கென்ஹிம் (haematologist with Penn Medicine). A, B ரத்தவகைகள் ரத்த உறைவை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அவை நரம்புகள் மற்றும் தமனிகளில் அடைப்பு அல்லது ரத்தத்தை அடர்த்தியாக்குகிறது. இது ரத்தக்கட்டிகள் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது என்கிறார் அவர்.
O ரத்த வகை உள்ளவர்களில் கடுமையான கொரோனா நோய்க்கான ஆபத்து குறைவதை இது விவரிப்பதாகவும் இது ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது எனவும் கூறுகிறார் குக்கென்ஹிம். இருப்பினும் அந்த ஆய்வு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதீத கொரோனா தொற்று இதய பிரச்னைகள், ரத்தக் கட்டிகள் மற்றும் பிற கார்டியோவாஸ்குலார் பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
O மற்றும் B ரத்தவகை உள்ளவர்களை காட்டிலும் A மற்றும் AB ரத்தவகை உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்ததாக கனடாவின் ரத்த சேவைகளின் தலைமை விஞ்ஞானி டாக்டர் டானா, டெவின் இணைந்து எழுதி Bodyecology.com -இல் வெளியிட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர். இது ரத்த வகை மற்றும் கொரோனா ஆபத்தை ஒன்றாக ஒப்பிட உதவும். ஏனெனில் இது ரத்த வகையை தீர்மானிக்கும் ABO மரபணுவையும் பாதிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,289 பேர்களின் ரத்தமாதிரிகளை ஹார்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆழமான பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் ரத்த வகை மற்றும் நோய் மோசமடைதல் அல்லது ரத்த வகை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம், அல்லது ஏதேனும் அழற்சி ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பை அந்த கண்டுபிடிப்புகள் காட்டவில்லை.