சென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன? - ஒரு பார்வை

சென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன? - ஒரு பார்வை
சென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன? - ஒரு பார்வை
Published on

சென்னையில் ஆற்றங்கரையோரமுள்ள குடியிருப்புகளை அகற்றும் பணி எப்போது தொடங்கியது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதிக்கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகள் எனக்கூறி அவற்றை இடிக்கும்பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. அங்கிருந்த 93 குடும்பங்களுக்கு புளியந்தோப்பில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் அப்பகுதியில் வசித்த மேலும் சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படாததால் குடியிருப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பினர்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டதோடு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து இப்பிரச்சனை பெரிதான நிலையில், மாநகராட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதியோரம் 243 குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகள் எனக் கண்டறியப்பட்டு, அவற்றை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு வசித்தவர்களில் ஏற்கெனவே 93 குடும்பத்தினருக்கு புளியந்தோப்பில் உள்ள கே.பி.பார்க் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

93 குடும்பத்தினரும் கே.பி.பார்க் செல்ல, சனிக்கிழமையிலிருந்து 3 நாள்கள் வாகன வசதியும் 3 வேளை தரமான உணவும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. எஞ்சிய அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள சென்னை மாநகராட்சி, முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆற்றங்கரையோர குடியிருப்புகளை அகற்றும் பணி எப்போது தொடங்கியது? காரணம் என்ன?

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின் கூவம், அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அகற்றி மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை ஆய்வு ஒன்றையும் நடத்தியது.

அந்த ஆய்வில் ஏறத்தாழ 15,300 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு இடங்களாக கண்டறியப்பட்டது. தீவுத்திடல், ஓட்டேரி, அமைந்தகரை இந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டது. இந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றி, பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மூலமாக புது வீடுகள் ஒதுக்கப்பட்டு மறு குடியமர்வு செய்யப்படுகிறார்கள். இதுவரை 12,395 குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகளாக கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. 2,905 குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டிய சூழலில் இருக்கிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் குமரசேன் பேசுகையில், “ஆக்கிரமிப்பு என்ற சொல்லே அதிகார வன்மத்தை காட்டும் வகையில் இருக்கிறது. கூவம் கரையோரம் அவர்கள் ரசிப்பதற்காகவா போய் குடியமர்ந்திருக்கிறார்கள்? அதனுடைய அத்தனை ஆபத்துகளையும் அறிந்து, அங்கே குடியிருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய வாழ்க்கை நிலை அப்படியிருக்கிறது. அந்த வாழ்க்கை நிலைக்கு யார் பொறுப்பு?

கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள், செயல்படுத்தப்பட்ட நடவடிகைகளின் தோல்வித்தானே அது. வேறு வழியில்லாமல் அந்த பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களுக்கு, மாற்று இடம் கொடுக்கப்பட்டாக வேண்டும்.

ஏற்கெனவே அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில்தான் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இருக்கும். அவர்களை ஊருக்கு வெளியே கொண்டு போய் குடியமர்த்துவதுதான் பிரச்னை. இது அவர்களது வாழ்வாதார பிரச்னை. சரியான திட்டமிடல் இல்லாததால் தான் திரும்ப திரும்ப எதிர்ப்புக்குள்ளாகி வருகிறது. அந்தந்த பகுதிகளிலேயே மறுகுடியமர்வு செய்தால் இந்த பிரச்னை முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com