“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்! - அலசல்

“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்! - அலசல்
“இந்த அடைமொழியை அஜித் சுத்தமாகவே விரும்பவில்லை”-‘தல’ நீக்கத்தின் பின்னணி இதுதான்! - அலசல்
Published on

தன்னை 'தல' என அழைக்க வேண்டாம் என்று கூறி நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

இனி தன்னை யாரும் 'தல' என அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார். தீனா படத்தில் இருந்து நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் 'தல' எனக் குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால், 'தல' என்கிற வார்த்தை அஜித்தின் பல படங்களில் வசனமாகவும், பாடலாகவும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அசல் படத்தில் இடம்பெற்ற தல போல வருமா என்ற பாடல் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

இந்நிலையில், தன்னை அஜித், அஜித்குமார் அல்லது சுருக்கமாக ஏ.கே என அழைத்தால் போதுமானது எனவும், இனி தன்னை தல அல்லது வேறு எந்த அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம் எனவும் நடிகர் அஜித் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அஜித்தின் இந்த திடீர் முடிவு குறித்து திரை விமர்சகர் பிஸ்மி கூறுகையில், ''அறிக்கை வெளியானதும், அஜித் தரப்பை தொடர்பு கொண்டு பேசினேன். இந்த திடீர் அறிக்கைக்கு என்ன காரணம் என்பது குறித்து கேட்டேன். அதற்கு, 'ஊடகங்களில் அடிக்கடி தல, தல என்று அடைமொழியிட்டு கூறுவதை அஜித் விரும்பவில்லை.சொல்லப்போனால் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் 'தல', 'அல்டிமேட் ஸ்டார்' என கூறுவதையே அஜித் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் சகித்துகொண்டிருந்தார். இந்த நிலையில், ஊடகங்கள் தல என்று கூறும் போக்கு அஜித்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதமாகவே இதனை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி அஜித் யோசித்துக்கொண்டிருந்தார்' என்கிறார்கள்.

ஒவ்வொரு ஊடகங்களுக்கும் தனித்தனியாக சொல்வதா? அல்லது ஒட்டுமொத்தமாக சொல்வதா? சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? என அவரிடம் பல்வேறு குழப்பம் நிலவியிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது என்கிறார்கள். ரசிகர்கள் தல என்று கூறுவதைக்காட்டிலும், ஊடகங்கள் அடைமொழியிட்டு அழைப்பது தான் அவருக்கு கூடுதல் அதிருப்தியை கொடுத்துள்ளது.

அன்று ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்ததும் சமூகத்துக்கு அது இடையூறு கொடுத்துவிடக்கூடாது என்பதால் தான். மன்றம் இல்லாவிட்டாலும், ரசிகர்கள் நடிகருக்கு தொந்தரவு கொடுக்கத்தான் செய்வார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆக அதற்காக அஜித் ரசிகர் மன்றத்தை கலைக்கவில்லை. மாறாக மன்றம் என்ற பெயரில் சமூகத்துக்கு யாரும் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்பதால் தான் அன்று அத்தகைய முடிவை அஜித் எடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இந்த அடைமொழி தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நடிகர்களின் அடைமொழியுடன், தல என்ற அடைமொழியை ஒப்பிட்டு டிரெண்ட் செய்து வருவதை அஜித் விரும்பவில்லை. இதையெல்லாம் முழுமையாக ஒழிக்க முடியாது என்றாலும், ஓரளவுக்கு குறைக்க முடியும் என்பதால் இத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கிறார் அஜித்.

அவரின் இந்த முன்னெடுப்பை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும். என்னைப்பொறுத்தவரை அடைமொழி என்பதே ஒரு அபத்தமானதுதான். நடிகர்கள் அதை கைவிட முன்வர வேண்டும். உடனடியாக ரசிகர்கள் தல என்று கூறுவதை குறைத்துக்கொள்வதை விட, ஊடகங்கள் அடைமொழியிட்டு அழைப்பதை நிறுத்த வேண்டும். காரணம் ரசிகனைக்காட்டிலும், ஊடகத்தின் மூலம் அந்த சொல் வெளிப்படும்போது லட்சகணக்கானோரை எளிதில் அது சென்றடைந்துவிடும். ஆகவே, ஊடகங்களை குறிப்பிட்டுதான் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது என்கிறார்கள் அஜித் தரப்பினர்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com