சந்திராயன் 3
Rare Earth Elements-காக அனுப்பப்பட்டதா?
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பிரம்மாண்ட ஆய்வு முயற்சியின் தொடக்கப்புள்ளியாக கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜூலை 14 ம் தேதி மதியம் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலமானது விண்னில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்திய சற்று நேரத்திற்கெல்லாம், சந்திரயான் 3 விண்கலமானது துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்திருந்தார்.
முன்னதாக சந்திராயன் 1 நிலவில் ஏவப்பட்டபோது, நிலவின் தென்துருவ பகுதியில் தண்ணீர் உரைந்த நிலையில் இருப்பதற்கான தடயங்களை அது அனுப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ பெரிய அளவில் தனது ஆய்வை அப்போதே தொடர்ந்தது.
அந்த ஆய்வின் தொடர்சியாக சந்திரயான் 2 திட்டத்தை ஆரம்பித்த இஸ்ரோ, 2019 ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அத்திட்டம் எதிர்பார்த்தபடி வெற்றியடையவில்லை. ஆனால் அதில் உள்ள ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவினை படம் பிடித்து நமக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3-ஐ நிலவிற்கு அனுப்பினர்.
இந்நிலையில் கடந்த சில பத்தாண்டுகளாக பல நாடுகள் நிலவை நோக்கி தங்களின் விண்கலத்தை அனுப்புவதற்கு காரணம் என்ன என்பது குறித்து முதுநிலை அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) அவர்களிடம் பேசினோம்.
“நிலவில் Rare Earth Elements எனப்படும் பல அரிய தனிமங்கள் இருக்கின்றன. அந்த தனிமங்களை எதிர்காலத்தில் வெட்டி எடுக்கலாம் என்ற நோக்கில் ஆராய்ச்சிக்காக எல்லா நாடுகளும் நிலவிற்கு விண்கலத்தை அனுப்புகின்றன. தற்போது பூமியின் எல்லா பகுதிகளிலும் தனிமங்களளை வெட்டி எடுப்பதால், எதிர்காலத்தில் தனிமங்கள் இல்லாத நிலை உருவாகும் நிலையே உள்ளது. மேலும் சூழல் பாதிப்பு கூடுதலாக இருக்கும். ஆகையால் நிலவில் உள்ள விலைமதிப்பற்ற தனிமங்களை கண்டறிந்தால், அதை வெட்டி எடுத்து வர முடியும் என பலரும் கருதுகின்றனர். இதற்காகத்தான் பல நாடுகளும் நிலவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்கு பெயர் விண்வெளி பொருளாதாரம் (space economic). எதிர்காலத்தில் நிலவிலிருந்து வளங்களை எடுத்துவர முடியும் என்கிற கருத்தில் நிலவுக்கு செல்லும் முதல் படிதான் இப்போது நடந்து வரும் திட்டங்கள்.
நிலவு போன்ற கோள்களில் தனிமங்கள் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தால் அங்கு ராக்கெட் அனுப்பப்பட்டு அங்குள்ள தனிமங்களின் வகைகள் - அதன் இருப்பு போன்றவற்றை ஆராய்ந்து தெரிந்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் விண்கலத்தை அனுப்பி வருகிறது. இந்த வரிசையில் இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகள் தோல்வியை தழுவிய நிலையில் இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 வெற்றியடையும் போது நாம் ஒரு மைல்கல்லை எட்டுவோம்.
நிலவிலுள்ளவற்றை எடுத்துவருவதற்கு சாத்தியம் உள்ளதா?
வருங்காலத்தில் கோள்களிலிருந்து டன் கணக்கில் தனிமங்களை எடுத்து வருவதற்கான முதல் படி தான் இப்போது நடந்துவரும் திட்டங்கள். சீனாவின் சாம்பிள் ரிட்டன் மிஷின் (Sample Return Mission) திட்டத்தின் படி சீனா ஒரு ராக்கெட்டை சந்திரனுக்கு அனுப்பி அதில் வெற்றியும் கண்டது. சீனா அனுப்பிய அந்த ராக்கெட்டில் தரையிறங்கி கலத்துடன் (lander cell) திரும்பு கலமும் (returning cell) சேர்த்து அனுப்பப்பட்டது. நிலவில் ராக்கெட் தரையிறங்கியதும் அதில் உள்ள ரோவரானது நிலவில் இங்கேயும் அங்கேயும் ஓடி அங்குள்ள மண்ணை எடுத்து அதை ஒரு டப்பாவில் அடைத்து அதை திரும்பு கலனில் பத்திரபடுத்தி பூமிக்கு கொண்டு வந்தது. நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்த மண் மாதிரியை சீனா ஆராய்சி செய்து வருகிறது.
தென் துருவப்பகுதியில் சந்திராயன் இறங்க காரணம் என்ன?
நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதாக சந்திராயன் 1 கண்டுபிடித்து அதன் ஆதாரத்தையும் நமக்கு அனுப்பியது. தண்ணீரை ஹைட்ரஜன் ஆக்ஸிஜனாக பிரித்து ஆக்ஸிஜனை சுவாசிக்கவும் ஹைட்ரஜனை எரிப்பொருளாக பயன்படுத்தவும் முடியும். LVM க்ரயோஜினிக்-ல் ஹைட்ரஜன் தான் தேவைப்படுகிறது, ஆகையால் நிலவிலிருந்து கூட நாம் ராக்கெட் விடலாம்" என்றார்.
சோவியத் யூனியன் தான் முதன்முதலில் நிலவில் தங்கள் நாட்டு கொடியை ஊன்றியது. அதன் பிறகு அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் நிலவில் தங்களது கொடியை ஊன்றியிருக்கிறார்கள். அந்த வகையில் நிலவின் தென் துருவபகுதியில் சந்திரயான் 3 நம் நாட்டு கொடியை ஊன்றும் என நாம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளோம்.
பூமியில் ஒரு சர்வதேச சட்டம் நடைமுறையில் உள்ளது. அது தான் finder keeper. அதாவது, இதுவரை யாருமே போகாத ஒரு தீவில் அல்லது ஒரு இடத்திற்கு ஒரு நாடு சென்று அந்த இடத்தில் அந்நாட்டின் கொடியை ஊன்றினார்களோ அல்லது பறக்க விட்டார்கள் என்றால் அந்த பிரதேசமானது அந்த நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டது என்று சட்டம். இது நிலவுக்கும் பொருந்துமா என்ற அச்சம் நிலவியது. நிலவில் முதலில் சென்ற சோவியத் யூனியன் நிலவில் தங்களது நாட்டு கொடியை பறக்கவிட்டது என்பதால், நிலவை சோவியத் யூனியன் சொந்தம் கொண்டாடிவிடும் என மேலை நாடுகள் அச்சம் கொண்டன. இந்த பின்னணியில் தான் சரவதேச விண்வெளி சட்டம் ஏற்றப்பட்டது.
இந்த பின்னணியில் தான் சர்வதேச விண்வெளி உடன்பாடு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் விண்வெளி, நிலவு மற்றும் வான் பொருட்கள் எல்லாம் மனித குலத்தின் பொது சொத்து; அங்கே எந்த நாடும் தனது இறையாண்மையை கொண்டாட முடியாது என ஒப்புக்கொண்டனர்.
ஆனால் விண்வெளி பொருளாதாரம் சாத்தியக்கூறு உருவாகும் இந்த சூழலில் அமெரிக்கா SpaceAct சட்டத்தை உருவாக்கி பல நாடுகளை அதனை ஏற்க நிர்பந்தம் செலுத்தி வருகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் கிழ் உருவாக்கப்படும் சர்வதேச உடன்பாடு அல்ல. இந்த திருத்திய ஸ்பேஸ் ஆக்ட் படி எந்த ஒரு தனியார் நிறுவனமும் விண்வெளிக்கு சென்றால் அங்கே வெட்டி எடுக்கும் பொருள்களை தனக்கு என உரிமைக் கொண்டாடலாம் என்று கூறி வருகிறது. அமெரிக்காவின் இத்தகைய கருத்தானது சர்வதேச அளவில் விவாதத்தில் இருக்கிறது. விண்வெளி பொருளாதார சாதியக்கூறு வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவும் நிலவிற்கு சந்திரயானை அனுப்பியது கவனிக்கத்தக்கது.