மார்ச் 8 என்பது பெண்கள் தினம். இது அனைவரும் அறிந்தது. சமூக ஊடகங்களிலும், வாட்சாப் போன்ற செயலிகளிலும் Happy womens day என சிரித்த எமோஜிகளோடும், பூங்கொத்து எமோஜிகளோடும் குறுஞ்செய்திகள் பெண்களின் செல்போன்களை நிறைத்திருக்கும். அலுவலகங்களிலோ, கல்லூரிகளிலோ, குடியிருப்புகளிலோ பெண்கள் பங்கேற்கும் கோலப்போட்டி, சமையல் போட்டி, கல்லூரிகள் என்றால் பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி போன்றதெல்லாம் நடத்தப்படும். இதற்காக மட்டும்தான் உருவாக்கப்பட்டதா பெண்கள் தினம்?
மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கு பின் ஏகப்பட்ட உயிர்கள் தங்களது உயிர்களை பறிகொடுத்துள்ளன. பெரும் நாடுகளில் உள்ள நகரங்களின் வீதிகள், அங்குள்ள கட்டடங்கள் லட்சக்கணக்கான பெண்களின் போராட்டங்களையும், அவர்கள் எழுப்பிய சுதந்திர குரல்களையும் இன்றும் பறைசாற்றி வருகின்றன.
இன்று கூட பெரும்பாலான தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதுவே கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். உலகநாடுகள் முழுவதிலும் இதுவே நிலைமை. ஆப்பிரிக்காவில் மனிதர்கள் நிறத்தால் ஏற்றத்தாழ்வு கற்பித்துக்கொண்டார்கள், மேலை நாடுகளில் வர்க்கத்தால் ஏற்றத்தாழ்வு கற்பித்துக் கொண்டார்கள், இந்தியாவில் அது சாதியமாக இருந்தது. இத்தகைய காலக்கட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் மேலும் இன்னலுக்கு உள்ளானவர்கள் பெண்கள்.
தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை. அதுவே தொழில்களுக்கு தக்க, சீசன் நாட்களில், அது 20 மணி நேரமாகவும் உயரும். இதுஒருபுறம் இருக்க, செய்யும் வேலைக்கு முறையான ஊதியமும் கிடையாது. இதில் பாலியல் சீண்டல்கள் வேறு. உழைப்பு, மோசமான வாழ்வுநிலை காரணமாக இளம் வயதிலேயே பலரும் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. எத்தனை நாட்கள் தான் பொறுப்பார்கள் தொழிலாளர்கள்.
அமெரிக்காவிலும் எவ்வித மாற்றமும் இல்லை. முறையற்ற சம்பளம், அதிகமான வேலை. 1880களில் பெரும் தொழிற்புரட்சியால் வேகமாக வளர்ந்தது அமெரிக்கா. தேய்ந்தனர் தொழிலாளர்கள். வேலை பெருக பெருக அமெரிக்க முதலாளிகள், தொழிலாளர்களை சக்கையாக பிளிந்தனர். தொழிலாளர்கள் ஒன்று திரண்டார்கள். 1886 மே 1 ஆம் தேதி, 8 மணி நேர வேலை நேரம் வேண்டும் என்று வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். சிகாகோ நகரம் போராட்டத்தின் மையமாக மாறியது. அடுத்தடுத்த நாட்கள் நீண்ட போராட்டத்தை தடுக்க காவலர்கள் தலையிட்டனர்.
காவலர்களின் துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர், பலர் கைது செய்யப்பட்டனர், தூக்கிலிடப்பட்டனர். இதன் நினைவாகவே மே தினம் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் பின் தொழிற்சங்களும் வளர்ந்தது. அதில் கூட கறுப்பினத்தவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவில்லை என்பது கறும்புள்ளி. 1886ல் நடந்த போராட்டங்களுக்கு முன்பே, துணிகளைத் துவைக்கும் கறுப்பின பெண்கள் 1881 ஆம் ஆண்டு தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களுக்கு தேவையானதைப் பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இரண்டாவது ‘உலகத் தொழிலாளர் சங்கத்தின்’ மாநாடு நடந்தது. இது சோஷலிஸ்ட் மாநாடு என அழைக்கப்பட்டது. ஏனெனில் 1864 ஆம் ஆண்டு முதல் ‘உலகத் தொழிலாளர் சங்கம்’ லண்டனில் உருவாக்கப்பட்டு பல முரண்பாடுகளால் அது கலைந்துபோயிருந்தது. எனவே இரண்டாவது சங்கம். பெண் பிரதிநிதிகள் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதன் மாநாட்டில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மே தின தீர்மானமும் ஒன்று.
அடுத்தடுத்த மாநாடுகள் நடந்தன. இதன் ஒருபகுதியாக ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ 1907 ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடந்தது. அதாவது சோஷலிஸ்ட் மாநாடு நடத்தப்படும் நாளுக்கு முன்பாக நடத்தப்பட்டது. சோஷலிஸ்ட் மாநாட்டில் கலந்துகொள்ள இருந்த பெண்கள் கூடி ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டை நடத்தினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1908 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி அமெரிக்க சிகாகோவில் உள்ள கேரிக் திரையரங்கில் சோஷலிஸ்ட் பெண்கள் கூட்டமைப்பு, பெண்களுக்கான வாக்குரிமை பிரச்சாரத்தை மைய இலக்காகக் கொண்டு மகளிர் தினத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனை ஒட்டி பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. 15 ஆயிரம் பெண்கள் பேரணியாக நியூயார்க் நகரத்தின் வழியாக ஊதிய உயர்வு, வாக்குரிமை போன்றவற்றையும் கோரி அணிவகுத்துச் சென்றனர். 1909 ஆம் ஆண்டு வாக்குரிமைக்கான ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்த நாளை அந்நாட்டு பத்திரிக்கைகள் மகளிர் தினம் என்று குறிப்பிட்டது. இதன்பின், 1913 ஆம் ஆண்டுவரை பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் உலகப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
சோஷலிஸ்ட் அகிலத்தின் அடுத்த மாநாடு 1910 ஆகஸ்ட் 28 முதல் செப் 3 வரை டென்மார்க்கில் நடந்தது. அதற்கு இரு தினங்கள் முன், இரண்டாவது உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடும் நடந்தது. இந்த மாநாட்டிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூடவே மகளிர் தின தீர்மானத்தை மார்க்சியவாதியான கிளாரா ஜெட்கின் முன்வைத்தார். ஒவ்வொரு ஆண்டும், அனைத்து நாடுகளிலும் ஒரே தினத்தில் இத்தினம் கொண்டாடப்பட வேண்டும் என தெரிவித்தார். கிளாரா ஜெட்கினின் பரிந்துரையை ஒருமனதாக மாநாடு ஏற்றுக்கொண்டது. இதன்பின்னர், திட்டமிடப்பட்ட, உலகத்தின் முதல் மகளிர் தினம் 1911 மார்ச் 19 அன்று பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. பிரெஸ்ஸியாவில் பெரும் புரட்சி ஏற்பட்ட சூழல், இதன் விளைவாக பெண்களுக்கும் வாக்குரிமை என்ற வாக்குறுதியை அந்நாட்டு அரசர் அளித்திருந்தார். அது நிறைவேற்றப்படவில்லை என்றாலும் கூட மக்களது போராட்டத்தின் நினைவாக அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளிலும் மகளின் தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து முதலாம் உலகப்போரும் வந்தது. உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. போர் சூழல் காரணமாக வேலையும் அதிகமானது. விலைவாசி கடுமையாக உயர்ந்தது. உணவு கூட கிடைக்காத சூழல். ரஷ்யாவிலும் இதே நிலைமை. போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டது பெண்களே. கணவர், மகன், தந்தை, சகோதரர் என பலரையும் இழந்து தவித்தனர். கிட்டத்தட்ட 2 மில்லியன் ரஷ்ய ராணுவ வீரர்கள் இறந்திருந்தனர். 1917 மார்ச் 8 அன்று போர் நிறுத்தம் வேண்டி பெட்ரோகிராட் சாலைகளில் பேரணியாக சென்றனர். லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெரும்பாலும் பெண்கள் கூட்டம். ஆங்காங்கு இருந்த ஆண்களும் இணைந்துகொண்டார்கள். நான்கு நாட்களைத் தாண்டியும் போராட்டம் தொடர்ந்தது. அரசு இதில் அரசியல் செய்தது. மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். ரஷ்யா ஸ்தம்பித்தது. தொடர்ந்து ரஷ்ய புரட்சி நடந்தது. அனைத்திற்கும் வித்திட்டது மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தொடங்கிய போராட்டம். இதன் பின்னர் ரஷ்யாவில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது. பின்னர் அனைத்து நாடுகளிலும் இந்தியா உட்பட மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது.
பெண்களின் ஊதியம், 8 மணி நேர வேலை எல்லாம் பெண்களின் போராட்டத்தால் சாத்தியப்பட்டது. தங்களது ஒவ்வொரு தேவையும் போராடியே பெண்கள் பெற்றுள்ளனர். சில நாடுகளில் வர்க்க ரீதியாக பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்றால், சில நாடுகளில் மத ரீதியாக, சில நாடுகளில் சாதி ரீதியாக. இந்தியாவிலும் அப்படியே. சாதி, மதம், குடும்பம், சமூகம் என அனைத்தும் பெண்களை ஒடுக்கியது. பெண்களின் உடைகள் தொடங்கி கல்வி, சொத்து என அனைத்திலும் போராடி போராடியே இத்தகைய வளர்ச்சியை பெண்கள் இப்போது பெற்றுள்ளனர். இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக, மார்பை மறைக்கக்கூடாது, மூட்டுகளுக்கு கீழ் சேலை கட்டக்கூடாது என ஏகப்பட்ட இன்னல்களுக்கு நடுவேதான், இத்தனை நாள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களும் சரிசமமாக உலகின் முன் எழுந்து நிற்கின்றனர். இவை அனைத்தும் அவர்களுக்காக அவர்களே குரல்கொடுத்தபோது மட்டுமே சாத்தியமாகிற்று.