1992ல் நஜிபுல்லா.. இன்று அஷ்ரப் கானி : தலிபான்களை எதிர்கொண்ட 2 ஆப்கன் அதிபர்களின் கதை!

1992ல் நஜிபுல்லா.. இன்று அஷ்ரப் கானி : தலிபான்களை எதிர்கொண்ட 2 ஆப்கன் அதிபர்களின் கதை!
1992ல் நஜிபுல்லா.. இன்று அஷ்ரப் கானி : தலிபான்களை எதிர்கொண்ட 2 ஆப்கன் அதிபர்களின் கதை!
Published on

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்த பின்னர், தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் எந்தவித எதிர்ப்புமின்றி கைப்பற்றிய தலிபான்கள், தங்களுக்கு சவாலான நகரமாக இருந்த மசர் இ ஷரீஃப் உட்பட, தலைநகர் காபூலையும் எந்த எதிர்ப்புமின்றி ஆகஸ்ட் 15ம் தேதி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

காபூலும் தலிபான்களிடம் வீழ்ந்துவிட்டதை தொடர்ந்து, அதிபராக இருந்த அஷ்ரப் கானி அதிகாரத்தை இழந்து தப்பியோடினார். இருப்பினும், தலிபான்களிடம் அதிகாரத்தை இழந்த முதல் ஆப்கானிஸ்தான் அதிபர், அஷ்ரப் கானி அல்ல. இவருக்கு முன்னதாகவே முகமது நஜிபுல்லா என்பவர் ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்தபோது, தலிபான்களிடம் வீழ்ந்தார். அப்போதுதான் முதன்முதலில் தலிபான்கள் நாட்டை கைப்பற்றினர். ஆனால் அஷ்ரப் கானியை எதிர்கொண்டது போல் அல்லாமல் நஜிபுல்லாவை தலிபான்கள் இலகுவாக எதிர்கொள்ளவில்லை. நஜிபுல்லாவை, தலிபான்கள் எப்படி எதிர்கொண்டனர் என்ற கொடூரத்தை இங்கே விரிவாக தெரிந்துகொள்வோம்!

காபூலை கைப்பற்றியதோடு தலிபான்கள் இரண்டாவது முறையாக தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். இது, இரண்டு முறையாக ஒரு அதிபர் வீழ்த்தப்படுவது. இதற்கு முன்னதாக 1996ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது முகமது நஜிபுல்லா ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தார். இப்போது இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றியபோது அதிபராக அஷ்ரப் கானி இருந்தார். அஷ்ரப் கானியை பொறுத்தவரை காபூலில் `ரத்தக்களரியைத் தவிர்க்க' விரும்புவதாகக் கூறி தலிபான்களிடம் சிக்காமல் ஹெலிகாப்டர் நிறைய பணத்தை நிரப்பிக்கொண்டு தப்பிவிட்டார். ஆனால், முகமது நஜிபுல்லா நிலை அப்படி அல்ல. அவர் சிக்கிய விவரத்தை தெரிந்துகொள்ளும் முன் முகமது நஜிபுல்லா யார் என்பதை தெரிந்துகொள்வோம்!

யார் இந்த முகமது நஜிபுல்லா? முகமது நஜிபுல்லா ஒரு மருத்துவர். சோவியத் ரஷ்யாவின் வெற்றி காரணமாக ஈர்க்கப்பட்ட நஜிபுல்லா, ஒரு கம்யூனிஸ்டாக அரசியலில் நுழைந்தார். தான் மருத்துவ மாணவராக இருந்தபோதே (1965ல்), ஆப்கானிஸ்தானின் கம்யூனிஸ்ட் மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அடுத்த 13 ஆண்டுகளில் இவரின் பிடிபிஏ ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. என்றாலும், 1979-இல் ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புக்கு பின்பே ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லாவின் எழுச்சி தொடங்கியது.

1979 க்குப் பின்னான நஜிபுல்லாவின் எழுச்சி: 1980-ல் ஆப்கனின் ரகசிய காவல்துறையின் தலைவராக இருந்தார். 1986ல் ஆப்கானிஸ்தான் அதிபர் என்ற உச்சப்பட்ச பதவியை பெற்றார். இந்தப் பதவியை அப்போது ஆப்கானை நிழலாக இருந்து ஆட்சி செய்து வந்த சோவியத் ரஷ்யாவின் தலைநகராக இருந்த மாஸ்கோ ஆட்சியாளர்கள் வழங்கினார்கள். பின்னர் 1990-91 இல் சோவியத் ரஷ்யா உள்நாட்டு எழுச்சியால் சோவியத் ஒன்றியம் உடைய, முஜாஹிதீன் படைகளின் அழுத்தத்தை எதிர்கொண்டார் நஜிபுல்லா.

அந்த அழுத்தத்தை கொடுத்த முஜாஹிதீன் படைகளை திருப்திப்படுத்தும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார் நஜிபுல்லா. அதில் முதற்கட்டமாக தனது அரசாங்கத்தின் 'மதச்சார்பற்ற' தன்மையை கைவிட்டார். முன்பு, ஆப்கானிஸ்தான் ஜனநாயக குடியரசு என்று அழைக்கப்பட்டபடியே மீண்டும் அழைக்க தொடங்கினார். இஸ்லாம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் எதுவும் முஜாஹிதீன்களை திருப்திப்படுத்தவில்லை. அவர்களின் தாக்குதல் தொடர்ந்தது. நஜிபுல்லா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

நஜிபுல்லாவுக்கு என்ன நடந்தது? சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் பல்வேறு குழப்பங்களை சந்தித்தது, ஆப்கானிஸ்தான். ஊழல் பெருகின. அரசின் பொது அலுவலகங்களை பயனற்றது ஆகின. இந்த நேரத்தில் சோவியத்துகளுக்கு எதிராக ஜிஹாத்துக்கு தலைமை தாங்கிய முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தானை ஆளும் எண்ணத்துடன் ஒன்று சேர்ந்தனர். இந்த நேரத்தில் அமெரிக்காவின் ஆதரவும் சேர்ந்துகொள்ள, ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் முன்னேறினர் தலிபான்கள்.

1992ல் காபூலை கைப்பற்றிய முஜாஹிதீன் படை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார் நஜிபுல்லா. மேலும் தலிபான்களிடம் சிக்காமல் இருக்க தன்னை காப்பாற்றுமாறு அப்போது ஆப்கானிஸ்தானுடன் நெருக்கமாக இருந்த ஒரு நாட்டுக்கு கோரிக்கை விடுத்தார் நஜிபுல்லா. அந்த நாடு, இந்தியா தான். இந்திய அரசும் உதவிக்கரம் நீட்டியது. இந்தியத் தூதரின் காரில் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்காக விமான நிலையம் அழைத்து வரப்பட்டார். ஆனால் விமான நிலையம் நுழையும் முன் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அதேநேரம் பதவி விலகுவதற்கு சில மாதங்கள் முன்பே தனது குடும்பத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் நஜிபுல்லா. அன்றிலிருந்து டெல்லியில் வசித்து வருகிறது அவரின் குடும்பம்.

இதனிடையே, கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் ஐக்கிய நாடுகள் வளாகத்தில் சிறைவாசம் அனுபவித்தார் நஜிபுல்லா. இந்த நான்கரை ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முஜாஹிதீன்களின் போரிடும் பிரிவுகளிடமிருந்து முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக இந்த நான்கு ஆண்டுகளும் தலிபான்கள், வடக்கு கூட்டணி என்றழைக்கப்படும் தாஜிக் தலைவர் ‘அஹ்மத் ஷா மசூத்’ தலைமையிலான படைகளுடன் போரிட்டனர். இந்த வடக்கு கூட்டணி, தலிபான்கள் எதிர்ப்பு அமைப்பாக செயல்பட்டு வந்தது. வடக்கு கூட்டணியிலிருந்து தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியபோது, பல ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஓடிவிட, ஷா மசூத் நஜிபுல்லாவுக்கு தப்பிக்க வழி ஏற்படுத்தி கொடுத்தார்.

அந்த வாய்ப்பை ஏற்க மறுத்த அதிபர் நஜிபுல்லா, தான் பிறந்த பாஷ்டன் இனத்தை சேர்ந்த சிலர், தான் தலிபான் அமைப்பின் மைய சக்திகளாக இருந்ததால் அவர்கள் தன்னை கொல்ல மாட்டார்கள் என்று நம்பினார். ஆனால் அவர் நம்பியதுக்கு மாறாக அனைத்தும் நடந்தது. செப்டம்பர் 27, 1996 அன்று ஐ.நா. வளாகத்திற்குள் மாறுவேடத்தில் நுழைந்த தலிபான்கள் நஜிபுல்லாவையும் அவரின் சகோதரரையும் அடித்து, வெளியே இழுத்துச் சென்றனர். சித்திரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து பின்னர் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஒரு போக்குவரத்து விளக்கு கம்பத்தில் அவரை தூக்கிலிட்டனர் தலிபான்கள்.

அஷ்ரப் கானி! 2014 முதல் ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்து வந்தவர் அஷ்ரப் கானி. என்றாலும் நஜிபுல்லாவுக்கு இருந்த நிலைமை போல் அஷ்ரப் கானி நிலை இல்லை. கானி கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர். ஆனால், நஜிபுல்லாவைப் போலவே அவரது அரசாங்கமும் ஊழலால் பாதிக்கப்பட, அதேநேரம் அமெரிக்க வல்லரசு தலிபான்களை எதிர்ப்பதில் பின்வாங்க தொடங்க, தலிபான்கள் முன்பை விட படுவேகமாக முன்னேறத் தொடங்கினர்.

அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே காபூலை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். தலிபான்கள் காபூலில் நுழைந்த சில மணி நேரங்களில் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அஷ்ரப் கானி காபூலில் இருந்து நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்துடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, முஜாஹிதீன் படைகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த போதிலும், முன்னாள் அதிபர் நஜிபுல்லா போல தலிபான்களால் பயங்கரமாக சித்ரவதை செய்து கொல்லப்படாமல், இப்போதைய அதிபர் அஷ்ரப் கானியோ தனது துரிதமான செயலாற்றலின்மூலம், உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com