"ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பாத்துது!" - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் கண்ணீர் கதை

"ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பாத்துது!" - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் கண்ணீர் கதை
"ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பாத்துது!" - சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் கண்ணீர் கதை
Published on

"நாங்க பார்க்குற வேலைக்கி என்னத்த கூலி கெடச்சுடப் போகுது? ஏதோ பத்தாத காசை வெச்சுத்தான் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்கோம்..." - இப்படி விரக்தியில் பேசும் குடும்பங்களும் சிவகாசியில் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்குத் தெரிந்த பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகவே இருப்பதற்கு இதுவே சான்று.

கலர் கலராக வண்ணங்களோடு ஒலியுடன் ஒளியை உமிழும் பட்டாசை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கருப்பு - வெள்ளை படம்போல கும்மிருட்டாகத்தான் இருக்கிறது. அவர்களில் சிலரை சிவகாசியில் நேரடியாக சந்தித்தோம்.

வீட்டின் முன்பு மரத்தடியில் அமர்ந்திருந்தவரிடம், "என்னாக்கா ஒக்காந்து இருக்கீங்க, வேலைக்கு போகலையா?" என்று கேட்டோம். "நேத்தே கம்பெனில வேலை முடுஞ்சுருச்சு சார்... அடுத்து ரெண்டு மாசம் கழிச்சுதான் தொறப்பாங்க. அதுவரைக்கும் என்ன செய்றதுன்னு யோசுச்சுக்கிட்டே ஒக்காந்து இருக்கேன்" என்றார் பாண்டியம்மாள்.

"என்னது, ரெண்டு மாசம் கம்பெனி இருக்காதா?" என நாம் கேட்டு முடிப்பதற்குள். "ஆமா சார் மழைகாலத்துல பட்டாசு செய்யமாட்டாங்க, காய லேட்டாகும்ல, அதான்", என்றவரிடம் சம்பளம் - போனஸ் குறித்து கேட்டதற்கு, "என்ன சார் போனசு... நாம பாக்குற வேலைக்கு என்னத்த போனஸ் கெடச்சுற போகுது?

வேலைக்குப் போனா டெய்லி நூறோ, நூத்தி இருபதோ கெடைக்கும் அதுல 20 ரூபாய் புடுச்சு வெச்சு போனசுன்னு மொத்தமா தருவாங்க. நான் கூலியில புடிக்க வேணாம்னு சொல்லிட்டேன். அதனால எனக்கு போனசு இல்ல" என்றவரின் அருகில் வந்த செல்லத்தாயி, "வயசான எங்கனால வேகமா வேலை பார்க்க முடியுமா? வயசு புள்ளைகளா இருந்தா தினமும் நானூறு ஐநூறு கூலியா வாங்குவாங்க. அவங்களுக்கு போனஸ் கிடைக்கும். எங்களுக்கெல்லாம் போனசும் இல்ல... ஒண்ணுமில்ல..." என்றவர் தொடர்ந்தார்.

 "கொரோனா காலத்துல வேலை இல்லாம வெட்டியில்லாம ரொம்ப கஷ்டத்துல இருக்கு சார். இந்த வேலைய நம்பித்தான் கடன் வாங்கியிருக்கோம். இந்த வேலையும் இல்லாம கடன எப்படி கட்டுறதுன்னு தெரியல. ஒரு காப்பி தண்ணிகூட இல்லாம, யாருடா இம்முட்டு காபி கொடுப்பாங்கன்னு அடுத்தவங்கள நம்பிக்கிட்டு இருக்கோம்" என்றவர், அந்தப் பக்கமாக சென்ற சரஸ்வதியிடம், "அக்கா இங்க வாக்கா... நீயும் வந்து நம்ம கதைய சாருகிட்ட சொல்லு" என்றவரிடம், "நம்ம கதைதான் ஒலகத்துக்கே தெரியுமே... இதுல நான் என்னத்த சொல்றது" என்று அலுத்துக் கொண்டாலும் நம்மிடம் பேசினார்.

 "நம்ம வேலையில்லாம ஒக்காந்து இருக்குறது கடன்காரங்களுக்கு தெரிய மாட்டேங்கிது. கடன திருப்பி கொடு, லேட்டானா வட்டியோட கொடுன்னு அவங்க தொல்லை தாங்கள. ஏதோ ரேஷன்ல அம்பது கிலோ அரிசி போடுறதால பசிய தீத்துக்குறோம். வேல இல்லாதப்ப அதுதான் எங்கள காப்பாத்துது. அதுல பசங்க என்னம்மா டெய்லி இதையே போடுறேன்னு கேக்குறாங்க. நாங்க படுற கஷ்டம் அந்த கடவுளுக்கே தெரியும் அவன் பாத்துக்கிட்டுதானே இருக்கான். அடுத்து ரெண்டு மூணு மாசத்துக்கு வேல இருக்காது என்ன செய்றதுன்னு தெரியல" என்றார் கன்னத்தில் கை வைத்தபடி.

 அப்போது அங்கு வந்த குருசாமி, "யாரும்மா இது?" என நம்மைப் பார்த்து கேட்க, "ஏதோ டிவியில இருந்த வந்திருக்காங்கலாம்" என்றார். "ஓ அப்படியா" என்ற குருசாமி, "சார் பட்டாசு தொழில் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாதான் இருந்துச்சு. அதுக்கு அப்புறமா பசுமை பட்டாசு, அது இதுன்னு அதிகமா எங்களுக்கு வேலை இல்லாம போயிருச்சு. இப்ப கொரோனா வேற. எப்படியாவது பட்டாசு தொழிலை முடக்கிறலாம்னு பாக்குறாங்க. பட்டாசு தொழிலை முடக்கிட்டா இங்க எந்த தொழிலும் இருக்க முடியாது. தீப்பெட்டி, கொத்தனார், பிரஸ்-னு இதைச் சார்ந்துள்ள எல்லா தொழிலும் ஒண்ணுமில்லாம போயிரும்" என்றவரிடம், இந்தத் தொழில்ல ஆபத்தும் இருக்கே... அதை எப்படி எதிர்கொள்ளுறீங்க?" எனக் கேட்டதும் நம்மை மேலும் கீழும் பார்த்தார்.

பின்னர்... "பயந்தா வாழ முடியுமா சார்? எல்லா இடத்திலேயுமா விபத்து நடக்குது... விதி, அதுதான்னா போய் சேர வேண்டியதுதான். பயந்துக்கிட்டு வீட்லேயே ஒக்காந்து இருந்தா சாப்பாடு எப்படி சார் வரும்?" என்றார் வெள்ளந்தியாகவும் தெளிவாகவும்!

வழக்கமான பிரச்னைகளுடன், பல்வேறு மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்குத் தடை, கடும் கட்டுப்பாடுகள், ஆங்காங்கே மழை போன்றவை இம்முறை சேர்ந்துள்ளன. இவற்றுக்கிடையே, பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் இருண்ட இவர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றும் நாள் என்றோ, அன்றே உண்மையான தீபாவளியாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com