ஆமைகள் பற்றிய அரிய வகை தகவல்கள்
ஆமைகள் பார்த்து இருக்கீங்களா?.... பார்த்ததில்லை என்றால் கேள்வியாவது பட்டு இருப்பீங்க... ஆமையின் முதுகில் பெரிய ஓடு இருக்கும் எதிரிகளால் ஆபத்து என்றால் தன்னை அதனுள் மறைத்துக்கொள்ளும் என்று, இதைத்தவிர ஒரு கதையும் உண்டு . முயலுக்கும் ஆமைக்கும் போட்டி அதில் முயல் வெற்றிபெற்றுவிடும் என்று. அதில் ஆமையின் விடாமுயற்சியை வர்ணித்திருப்பார்கள். ஆம், ஆமைதான் மிகவும் சுறுசுறுப்பானது மேலும் பொறுமையானதும் கூட என்றால் நம்ப முடிகிறதா?... இதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆமைகளில் 356 வகைகள் இருந்தாலும் அதன் தலையக் கொண்டு அதை 2 குடும்பமாக பிரிக்கிறார்கள், அதில் ஒரு குடும்பம் அதன் கழுத்தை நேராக ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளுமாம், மற்றொரு குடும்பம் பக்கவாட்டில் இழுத்துக்கொள்ளுமாம். இதில் ஒரு வகைக்கு கண்கள் எதிரில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும்படி, கீழாகவும், இன்னொன்றுக்கு தண்ணீரில் மேலே உள்ள பொருட்களைப் பார்க்கும் படி தலையின் மேலும் கண்கள் இருக்குமாம்.
இதில் ஒருசில ஆமைகள் நீருக்கடியில் ஒரு மணிநேரம் வரையில் கூட மூச்சு விடாமல் இருக்க முடியுமாம். ஆனால் சில வகை ஆமைகளுக்கு மீன்களைப்போல பாப்பில்லே என்ற உறுப்புகளின் உதவியால் தண்ணீரில் இருக்கும் பொழுது தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கிறதாம்.
ஆமைகள் எப்பொழுதும் இளமையகவே இருக்குமாம், காலையில் சுறுசுறுப்பாக தனது உணவைத்தேடி அலையுமாம். அது, தன் உணவாக, கடல் பாசிகள், கடலில் இருக்கும் புழுக்கள், இறந்த மீன்கள், ஜெல்லிமீன்கள் இவற்றை விரும்பி சாப்பிடுவதால், கடலும், கடல் நீரும் சுத்தப்படுகிறதாம். அப்படிஎன்றால் ஆமை கடலின் தோழன் என்று சொல்லலாம் அல்லவா...
இதன் முன்னோர்கள் மிகப்பழமையானவர்களாம், அதாவது பாம்புகள் போன்ற ஊர்வன விலங்குகள் தோன்றுவதற்கு முன் தோன்றியவர்களாம். அட அப்படியா?... என்கிறீர்களா?... இருங்கள் மிச்சத்தையும் சொல்லிவிடுகிறேன்.
இது அதீத நியாபக சக்திக்கொண்டது, எப்படி என்றால், தான் பிறந்த இடத்தை நினைவில் வைத்துக்கொண்டு, அதே நிலப்பரப்பில் தான் தனது பேறு காலத்தில் முட்டையினை இடுமாம். அதாவது, நிலத்தில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி அதில் முட்டையிட்டு அதை மூடிவிட்டு சென்றுவிடுமாம். அம்முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள், உடனடியாக தனது இருப்பிடத்தின் காந்தப்புலம், அங்கு நிலவும் சூழ்நிலை மண்ணில் தன்மை, நீரின் தட்பவெப்பம் ஆகியவற்றை நினைவில் வைத்திருக்குமாம், தாயின் அரவணைப்பில்லாமல் தானாக வளரக்கூடியது. தங்களது உணவுக்காகவும் சூழ்நிலைக்காகவும் வேறு இடங்களை தேர்ந்தெடுத்து வளர்ந்தாலும், தனது முட்டையிடும் பருவம் வந்ததும் தான் பிறந்த இடத்தைத்தேடி சென்று, அந்த மண்ணில் முட்டையிடும் வழக்கம் கொண்டதாம்.
இதைவிட ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் ஆண்ட அரசர்கள் தங்களின் கடல் பயணத்திற்கு வழிகாட்டியாக ஆமைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
எப்படி என்கிறீர்களா?..
கடல் ஆமைகளுக்கு ஒரு விஷேஷ குணம் உண்டு. அது நீரின் போக்கை நன்கு அறிந்து வைத்திருக்குமாம்,
அதனால், அரசர்கள் நடுக்கடலில் தங்களின் படகுகள் கப்பல்கள் வழிதெரியாமல் திணரும் சமயத்தில் கடல் ஆமைகளை கடனினுள் விடுவார்களாம், அந்த ஆமையானது நீரின் போக்குக்கு ஏற்ப தங்களை அந்த நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு, அந்த நீரோட்டத்துடன் தனது பயணத்தை தொடருமாம். அந்த ஆமைகளைப் பின்பற்றி அரசர்கள் கரை வந்து சேர்வார்களாம். இத்தகைய புத்திசாலி ஆமைகளில் பல இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இருந்தாலும் மனிதர்களாகிய நாம் அதை தற்காலத்தில் வாஸ்து லிஸ்டில் சேர்த்து விட்டதுதான் பரிதாபம்.
ஜெயஸ்ரீ அனந்த்