ராம ராஜ்யம் அல்ல இந்து ராஜ்யம்

ராம ராஜ்யம் அல்ல இந்து ராஜ்யம்
ராம ராஜ்யம் அல்ல இந்து ராஜ்யம்
Published on

மக்களிடம் செல்வாக்குபெற்ற குறியீடுகளையும், முழக்கங்களையும் கவர்ந்து தங்களின் அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்துவது இந்திய வகுப்புவாதிகள் நீண்டகாலமாகக் கையாண்டு வரும் உத்திகளில் ஒன்று. அப்படித்தான் பௌத்தத்தின் குறியீடுகள், கொள்கைகள் களவாடப்பட்டன. இப்போது காந்தியடிகளின் ‘ராம ராஜ்யம்’ என்ற கோஷத்தைக் கவர்வதற்கு அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக பாஜக ‘ராம ராஜ்யம் ‘ குறித்துப் பேசி வருகிறது. பிரதமர் மோடியும் ‘ராம ராஜ்யம்’ அமைப்போம் எனக் கூறி வருகிறார். பாஜகவும் அதன் தாய் இயக்கமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து ராஷ்டிரம் அமைப்பதைப் பற்றித்தான் பேசி வந்தார்கள். 1939 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ‘அகில பாரதிய இந்து மகாசபா’வின் 21 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றிய சாவர்க்கர், “இந்துக்களுக்கு சுயராஜ்யம் என்றால் இந்து அல்லாத எவராலும் ஆதிக்கம் செலுத்தப்படாத, இந்துத்துவம் தனது அதிகாரத்தை முழுதுமாக கைக்கொள்கிற ஒரு ஆட்சியாக இருக்கும்”என்றார். 

இந்தியாவில் பிறந்திருந்தாலும் முஸ்லிம்கள் இங்கே ஆட்சி செய்ய அனுமதியில்லை, அவர்கள் சிறுபான்மையினருக்கு என்ன உரிமையோ அதை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் பேசினார். இந்துக்களின் புனித மொழி சமஸ்கிருதம் எனக் குறிப்பிட்ட சாவர்க்கர், சமஸ்கிருதத்திலிருந்து தனக்கான சாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள இந்தி மொழியே இந்த நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். (Hindu Rashtra Darshan, 1949, பக்கம் 103-107) . இந்துத்துவவாதிகளின் இந்து ராஷ்டிரத்தின் உள்ளீடு இதுதான். 

காந்தியடிகள் கூறிய ராமராஜ்யம் என்பது இந்துத்துவவாதிகளின் இந்து ராஷ்டிரம் அல்ல; அது குறித்து காந்தியடிகளே விளக்கியிருக்கிறார். “ராமராஜ்யம் என்று நான் குறிப்பிடுவது இந்து ராஜ்யத்தை அல்ல. என்னைப் பொருத்தவரை ராம ராஜ்யம் என்றால் புனித ராஜ்யம், கடவுளின் ராஜ்யம். எனக்கு ராமனும் ரஹீமும் ஒன்றுதான். உண்மையும், நற்பண்பும்தான் எனக்குக் கடவுள்”என காந்தியடிகள் கூறியிருக்கிறார் ( யங் இந்தியா 19.09.1929 பக்கம் 305). ‘நான் ஏற்றுக்கொண்டுள்ள இந்துமதம் எல்லா மதங்களையும் மதிக்கும்படி எனக்குக் கற்றுத் தந்துள்ளது. அதில்தான் ராமராஜ்யத்தின் ரகசியம் அடங்கியுள்ளது’ என்றார் அவர் (ஹரிஜன், 19.10.1947).

காந்தியடிகளின் கருத்துகளில் உடன்பாடில்லாததால்தான் அவரை வகுப்புவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். அவரது உயிரைக் கவர்ந்தவர்கள் இன்று அவரது கருத்தைக் களவாட முயற்சிப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்து ராஜ்யம், இந்து ராஷ்டிரம்  என்ற அவர்களது கோஷம் மக்களிடம் எடுபடவில்லை. எனவேதான் ராம ராஜ்யம் என்று தங்களது கோஷத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியடிகள் குறிப்பிட்டதுபோல, ‘நாய்க்குக்கூட நீதி வழங்கும் நல்லாட்சி’என்ற பொருளில் அவர்கள் ராம ராஜ்யத்தைப் பார்க்கவில்லை. ‘சூத்திரன் என்பதால் சம்புகனுக்கு தவம் செய்வதற்கான உரிமை இல்லை. அப்படிச் செய்தால் அவனைக் கொன்றுவிடலாம்’என்ற ராம ராஜ்யமே அவர்கள் அமைக்க விரும்புவது. 

இந்த யாத்திரைக்கு ‘ராம ராஜ்ய ரத யாத்திரை’எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதற்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பர சுவரொட்டியில் இந்த யாத்திரைக்கான ஐந்து நோக்கங்களை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ராம ராஜ்யத்தை மீண்டும் அமைப்பது; ராமாயணத்தைப் பாடத் திட்டத்தில் சேர்க்கச் செய்வது; ராம் ஜன்ம பூமியில் ராமர் கோயிலைக் கட்டுவது; வியாழக்கிழமையை வார விடுமுறை நாளாக அறிவிக்கச் செய்வது; உலக இந்து நாள் என ஒன்றை அறிவிக்கச் செய்வது. இவைதான் அந்த நோக்கங்கள். 

ஐந்து நோக்கங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பிப்ரவரி 13 ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த யாத்திரையின் நெடுகிலும் ராமர் கோயில் கட்டுவதைப்பற்றியே பேசி வந்துள்ளனர். ரத யாத்திரை துவக்கப்பட்டபோது உரையாற்றிய சுவாமி சாந்தானந்தா “2019ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். அது இந்த நாட்டில் ராம ராஜ்யத்தின் ஆரம்பமாக இருக்கும். அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு ராமர் திரும்புவார். அதைக் கொண்டாடும் விதமாக 2020 ல் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரிக்கு இன்னொரு ரத யாத்திரை நடத்தப்படும்” என்றார். இந்தச் செய்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதன் நூற்றாண்டு 2025 ஆம் ஆண்டில் வருகிறது.  அதற்குள் இந்தியாவை இந்து ராஜ்யம் என அறிவித்துவிட வேண்டும் என்பதே அவர்களது திட்டம். அதற்காக நூற்றுக்கணக்கான உதிரி வகுப்புவாத அமைப்புகள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டுக்குள் அதை அமைத்துவிடவேண்டும் என 2017 ஜூனில் கோவாவில் கூடிய 150க்கும் மேற்பட்ட இந்துத்துவ அமைப்புகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோவாவில் கூடிய உதிரி அமைப்புகளைப் போன்ற ஒன்றுதான் இப்போது ‘ராம ராஜ்ய ரத யாத்திரை’யை நடத்தும் ‘ஸ்ரீராமதாஸா மிஷன் யுனிவர்சல் சொசைட்டி’ என்ற அமைப்பாகும். 

அந்த அமைப்பின் நிறுவனரான சுவாமி சத்யானந்த சரஸ்வதி என்பவர் 1991 ஆம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகை கோயிலிலிருந்து ராம நவமி யாத்திரை ஒன்றைத் துவக்கி நடத்தியுள்ளார். அயோத்தியிலிருந்து கொண்டுவரப்பட்ட ராமனின் பாதுகையும், இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட சூடாமணியையும் ஒரு ரதத்தில் வைத்து கேரள மாநிலத்தின் பட்டி தொட்டியெல்லாம் அந்த யாத்திரை நடத்தப்பட்டது. கேரளாவில் இந்துத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அந்த யாத்திரை குறிப்பிடத்தக்க பங்காற்றியதாக  ராமராஜ்ய ரத யாத்ரா என்னும் அந்த அமைப்பின் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.

சத்யானந்தாவின் மறைவுக்குப் பின் பொறுப்பேற்றுள்ள சாந்தானந்தா, கிருஷ்ணானந்தா என்ற இருவரும் ரத யாத்திரைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இப்போது ராம ராஜ்ய ரத யாத்திரையை நடத்துவதும்கூட அவர்கள் இருவரும்தான். இந்த ரத யாத்திரையைத் துவக்கி வைக்குமாறு உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்தை அழைத்திருந்தனர். யார் துவக்கி வைப்பது என்பதில் இந்த யாத்திரையைப் பின்னாலிருந்து இயக்கும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்புக்கும் ஆதித்யநாத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால் ஆதித்யநாத் இந்த நிகழ்சியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். எனவே விஎச்பி மற்றும் பாஜக தலைவர்கள் இந்த யாத்திரையைத் துவக்கி வைத்தனர்.

ராமர் கோயில் என்பதை முன்வைத்துப் பேசிவந்த வகுப்புவாத அமைப்புகள் இப்போது ராம ராஜ்யம் எனப் பேசி வருகின்றனர். அவர்களது நிலைபாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாம் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். ராமர் கோயில்  என்னும்போது அது அயோத்தி சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மட்டுமே இருந்தது. ஆனால் ராம ராஜ்யம் என்று பேசும்போது அவர்கள் இந்திய ஆட்சி முறையையே மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது வெளிப்படுகிறது. அதற்கேற்ப மக்களின் மனநிலயைத் தயார் படுத்துவதே இந்த ரத யாத்திரையின் பின்னுள்ள திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆபத்தைப் புரிந்துகொண்டால் இந்த ரத யாத்திரையை எப்படி எதிர்க்காமல் இருக்கமுடியும்?   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com