தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு முதன்முதலாக குரல் கொடுத்தார். அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராக அந்தக் குரலை அவர் பதிவு செய்தார். இதனையடுத்து திமுகவுடன் தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணிக்கு ரஜினிகாந்த் தன் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார்.
அப்போது திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அது ரஜினியின் குரலுக்கு கிடைத்த முதல் அங்கிகாரம். அதன்பிறகு திமுகவிற்காக சிலமுறை ரஜினியின் குரல் கொடுத்தார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதன்பின்னர், நேரடியாக அரசியல் நிலைமை குறித்து கருத்துகளை கூறுவதை தவிர்த்தார் ரஜினி. அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தன்னை ஒரு சக்தியாக மாற்றிக்கொண்டார் அவர் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
அவரது பல்வேறு படங்களிலும் அரசியலுக்கு வருவது குறித்த மக்களிடம் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டே வந்தார் ரஜினிகாந்த். ஆனால் ஒரு நிலையான முடிவை அறிவிப்பதில் அவருக்கு தயக்கம் நிலவியது. ஆகவே அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருந்தது. இந்நிலையில், ஒரு வழியாக ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை 2017 டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். "எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை. ஆன்மிக அரசியலை முன்னெடுப்போம். அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்குவோம்" என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று அவரது ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் எவ்வித முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடவில்லை. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “கட்சி அறிவிப்பு தேதி குறித்து ஆலோசித்தேன். நிறைய கேள்விகள் அவர்களிடம் இருந்தது. அதற்குப் பதில் அளித்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு மிகத் திருப்திகரமாக இருந்தது.
ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி கிடையாது. ஏமாற்றம்தான். அதை இப்போது வெளியே சொல்ல விரும்பவில்லை. உள்ளே பேசியதை வெளியே சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்” எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் தற்போது மீண்டும் முழுநேர அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி விட்டாரா ரஜினிகாந்த் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறும்போது, “கட்சியின் பெயர் வெளியிட வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும். பின்னரே கட்சியின் பெயர் கிடைக்கும். ரஜினிகாந்தின் புதிய கட்சி என்பது செப்டம்பர், அக்டோபர் காலகட்டத்தில்தான் வரும். மாநாடு அறிவிக்கலாம். அதற்கு வாய்ப்பு உள்ளது.
மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்கள் நலப்பணிகளை செய்து வருகின்றனர். அது உண்மைதான். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. மக்கள் பணிகளை செய்வதன் மூலம் மக்களுடன் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் தேர்தல் வெற்றிக்கு இது போதவே போதாது. தேர்தல் வெற்றி என்பது மிகவும் கடினம். ஒவ்வொரு களப்பணியாளர்களும் அவரவருக்கென்று சில கொள்கைகளை வகுத்திருப்பார்கள். குறிக்கோள்கள் இருக்கும். சில மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களும் இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டிதான் தேர்தல், அரசியலில் ஜொலிக்க முடியும்.
எவ்வளவுதான் பிரபலமானவர்களாக இருந்தால்கூட அவரின் ஓட்டு சதவீதம் 5 லிருந்து 10 சதவீதம்தான். அதற்கு மேல் தனியாக யாராலும் வாங்கவே முடியாது. அப்படி இருக்கும்போது அவர் கூட்டணி அமைக்க வேண்டும். அவர்கள் ஒன்றாக சேர வேண்டும். குறைந்த பட்சம் 35 சதவீதம் ஓட்டுகள் இருந்தால் தான் வெற்றிக்கு பக்கத்தில் போக முடியும். வெற்றி பெற போகிற கட்சிகளுக்கு தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள். இதற்கு கூட்டணியும் அவசியம். இவ்வளவையும் ரஜினி எப்படி செய்யப்போகிறார் அல்லது இந்தத் தடங்கல்களை அவர் எப்படி கடக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.