கூட்டுக் குடும்பத்தின் அருமையை சொல்ல முயற்சிக்கும் ராஜவம்சம் - திரைவிமர்சனம்!

கூட்டுக் குடும்பத்தின் அருமையை சொல்ல முயற்சிக்கும் ராஜவம்சம் - திரைவிமர்சனம்!
கூட்டுக் குடும்பத்தின் அருமையை சொல்ல முயற்சிக்கும் ராஜவம்சம் - திரைவிமர்சனம்!
Published on

கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சிங்கம் புலி, மனோபாலா, சதீஷ், தம்பி ராமையா, விஜய குமார், ராதாரவி, யோகி பாபு, ரேகா என மிகப்பெரிய நடிகர் பட்டாளாமே இணைந்து நடித்திருக்கும் சினிமா ராஜவம்சம். இன்று இத்திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

ஐடி துறையில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு தொடர்புடையது என்பதால் மிகுந்த கவனத்துடன் அவர் அதனை கையாள வேண்டியிருக்கிறது. இன்னொரு புறம் மிகப்பெரிய குடும்ப பின்னனி கொண்ட சசிகுமாரின் குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறது. இவ்விரண்டுக்கும் இடையே நடக்கும் காட்சிகளின் தொகுப்பாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது.

கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளைச் சொல்வது குறித்து கதையினை நகர்த்துவதா...? நகைச்சுவை சினிமாவாக இதனை எடுத்துச் செல்வதா...? என பல கோணங்களில் சிந்தித்து இயக்குநர் ஒரு கலவையாக செய்திருக்கிறார். ஏதேனும் ஒன்றினை அழுத்தமாக சொல்லியிருந்தால் மனதில் இன்னும் ஆழமாக நின்றிருக்கும். இருப்பினும், குடும்பமாக சேர்ந்து சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

சண்டைக் காட்சிகளில் சசிகுமார் சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என இந்த மூன்று புள்ளியிலும் ஒரு நடிகராக தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். யோகி பாபு வழக்கம் போல அப்பள மூஞ்சு, சாணி தலையா, பனங்கிழங்கு மண்டையா என எதையோ நகைச்சுவை என உருட்டியிருக்கிறார். சிங்கம் புலி சில காட்சிகளில் தன் நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார். நிக்கி கல்ராணிக்கு சொல்லும் படியான அழுத்தமான காட்சிகள் இல்லை. ஆனால் மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார். சாமின் இசை கொஞ்சம் ஆறுதல்.

குடும்ப உறுப்பினர்களை எல்லா காட்சிகளிலும் வரிசையாக நிற்க வைத்து ஏன் சீரியல் பாணியில் ஆளுக்கு ரெண்டு க்ளோஸ் அப் ஷாட்டுகள் என பதிவு செய்திருக்கிறார்கள் என புரியவில்லை. ஒரு டிவி சீரியல் பார்க்கும் உணர்வையே தருகிறது. என் இரண்டு பெண்களையும் சசிகுமார் குடும்பத்துக்கு தான் கல்யாணம் செய்து கொடுப்பேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார் ராதாரவி. படம் முழுக்க காட்சி அமைப்பு, கதையின் ஆழம், வசனம் என எல்லாவற்றிலும் இன்னும் கொஞ்சம் ஆன்மாவை கூட்டியிருக்கலாம்.

ட்ரெய்லர் வெளியான போது, ‘கடந்த 15 வருடங்களா நம்முடைய நேச்சர் குளோபல் வார்மிங்களால் மாறிடுச்சுனு சொல்றாங்க. எந்த டெக்னாலஜியால இயற்கை பாதிக்கப்படுதுனு சொல்றாங்களோ ஏன் அதே டெக்னாலஜியை வச்சு நம்ம இந்த இயற்கையை பாதுகாக்க முடியாது...?’ என வசனங்கள் இடம்பெற்றிருந்தது. ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும். யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அதனால் படத்தின் மீது சில எதிர்பார்ப்புகள் இருந்தது. இயக்குநர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அதனையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்திருக்கலாம்.

சுப்ரமணியபுரம் என்ற பிரமாதமான சினிமாவை இயக்கிய சசிகுமார் ஏன் தான் ஏற்றுநடிக்கும் படங்களின் கதைகளை சரியாக தேர்வு செய்ய முடியாமல் திணறுகிறார் என புரியவில்லை. ஒருமுறை இருமுறை அல்ல தொடர்ந்து சசிகுமார் இத்தவறை செய்துகொண்டிருக்கிறார். நிச்சயம் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல காமடி கமர்ஷியல் குடும்ப சினிமாவாக அமைந்திருக்க வேண்டிய ராஜவம்சம் அஜாக்ரதையால் நழுவிவிட்டது.

ராஜவம்சம்..பொழுது போக்கு சினிமா!.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com