தேசிய கல்விக் கொள்கை முன்னிறுத்துவதை போலவே, இல்லம் தேடி கல்வி திட்டமும் கற்பிக்கப்படும் இடம் - விதத்தில் மாற்றம் வரவேண்டுமென பேசுகிறது. ஆனால் அது சரியல்ல. பள்ளிக்கூட கல்விதான், சமூகநீதிக்கான அடையாளம். அப்படி பள்ளிக்கூட கல்வி என்ன சொல்லித் தருகின்றது என சிலர் கேட்கலாம். 'எல்லா தரப்பட்ட மாணவர்களும், ஒரே வகுப்பில் ஒரே போல அமரவைக்கப்பட வேண்டும்' என்பதுதான் பள்ளிக்கூடம் கற்றுத்தரும் அடிப்படை சமூக நீதி. கல்வியென்பது எந்தக்காலத்திலும் சமூகநீதியையும் சம உரிமையையும் சொல்லிக்கொடுக்க வேண்டியது முக்கியம். ஆனால், இல்லம் தேடி கல்வி அப்படியா செய்கிறது? ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப கல்வி சொல்லிக் கொடுப்பதென்பது, வெறும் ஏட்டுக் கல்வியாகத்தான் அமையும். இப்படி இல்லம் தேடிச்சென்று கல்வி கற்பிக்கப்பட்டு வளரும் மாணவரால், வருங்காலத்தில் தன்னைவிட பொருளாதார ரீதியாக - சாதிய ரீதியாக - உரிமை ரீதியாக ஒடுக்கப்படும் மாணவரின் நிலையை புரிந்துக்கொள்ள முடியாது. அப்படி புரிந்துக்கொள்ளாத மாணவர்கள் சமூகத்துக்குள் வரும்போது, அது சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும்.
இதுவொரு பக்கமென்றால், இன்னொரு புறம் பள்ளிக்கூடத்தை நம்பியே உணவுத் தேவை அமையும் மாணவர்களின் பிரச்னை இன்னும் அதிகம். ஏற்கெனவே அவர்கள் இந்த கொரோனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தில் இருக்கிறார்கள். அதன் விளைவாக, பல ஏழை மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். இப்போது அந்த மாணவர்களெல்லாம் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டுமென்றால், அவர்களுக்கு இருக்கும் பொருளாதார நஷ்டத்தை தீர்க்க வேண்டிய சூழல் அரசுக்கு உள்ளது. பொருளாதார நஷ்டம் காரணமாக நலிவடைந்து கிடக்கும் அந்த மாணவர்களுக்கு, அவர்களின் பசியை ஆற்ற அரசு முனைய வேண்டும்.
அதுபோலவே பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கிடைக்கும் இலவச நாப்கின், முட்டையெல்லாம் அவர்களுக்கு முழுமையாக தரப்படவேண்டும். இவையெல்லாம் கிடைக்க, மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அரசு சொல்வதுபோல, வீட்டிலேயே இருந்தால், அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்காமல் போய்விடும். அப்படி ஆகிவிட்டால், அவர்கள் இன்னும் இன்னும் நலிவடைவர்; அவதிப்படுவர்.