வண்ணதாசனைப் பற்றி ஒருமுறை அவரது நண்பர் வண்ணநிலவன் கூறுகையில், "அரை நூற்றாண்டாக எழுதி வரும் அவரை, நான் பின்தொடர்கிறேன். அவரது எழுத்து முழுவதும் காட்சிப்படுத்துதல் நிறைந்திருக்கிறது. அவரை நகலெடுப்பது கடினம்தான்” என்றார். அப்படி நகலெடுக்க முடியாத இந்தத் தனிக்கலைஞனுக்கு புதிய தலைமுறை தமிழ் இலக்கியப் பிரிவிற்கான தமிழன் விருதை வழங்கி இருக்கிறது.
வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். பிரபல தமிழ் எழுத்தாளர் தி.க சிவசங்கரனின் மகன். சிறுகதைகளை வண்ணதாசனாகவும், கவிதைகளை கல்யாண்ஜி என்ற புனைப்பெயரிலும் எழுதுபவர். கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, ஒரு சிறு இசை போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வழங்கிய இவருக்கு ஒரு சிறு இசை 2016-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. வண்ணதாசனின் தந்தை தி.க சிவசங்கரனும் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்தான். சாகித்ய அகாதமி விருதுபெற்ற தந்தை - மகன் கூட்டணி இவர்கள்தான். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான
வண்ணதாசன், விஷ்ணுபுரம் இலக்கிய விருதும் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
”தனது எழுத்தில் சிறு சிறு சம்பவங்களைக் குறித்தும், சாமான்ய மக்களைக் குறித்து எழுதும்போது எண்ணற்ற விவரங்களுடன் எழுத்தை மெருகூட்டுபவர் வண்ணதாசன். அத்தனை விவரங்களும் பண்பாட்டுடன் ஒன்றியதாகவே இருக்கும். வண்ணதாசனின் சிறுகதைகளின் நீட்சியே அவரது கவிதைகள். அவரிடமிருந்தும், சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்தும் தள்ளி நின்று அவர்களை கவனிக்கும் எழுத்துதான் வண்ணதாசன் எழுத்து. அவரின் கதை மாந்தர்கள் சாமான்ய மனிதர்கள். மக்களுடன் பிணைந்திருக்கும் அந்த கதைகளின் வாயிலாக, வண்ணதாசனால் யாரையும் வெறுக்க முடியாது என்பதை அறியலாம்” என ஒருமுறை தேசிய நாட்டுபுற இலக்கிய ஆதரவு மையத்தின் இயக்குநர் எம்.டி முத்துக்குமாரசாமி வண்ணதாசனைப் பற்றிக் கூறினார்.
வண்ணதாசனை மட்டுமல்ல, அவரது கதை மாந்தர்களையும் யாராலும் வெறுக்க முடியாது.