எனது பிராண்ட்டின் பெயரில் மத அடையாளம் எதுவும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் என்று கூறியவர் "மில்க் மிஸ்ட்" சதீஷ்குமார். எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு, தொழிலில் இறங்கி இன்றைக்கு வருடத்திற்கு நூறு கோடிக்கும் மேல் லாபம் ஈட்டும் நிறுவனத்தை நடத்தி வருபவர் சதீஷ்குமார். அவருக்கு புதிய தலைமுறை, தொழிற்துறைப் பிரிவிற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருதை வழங்கியுள்ளது.
ஈரோடு அருகே தயிர்பாளையம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சதீஷ்குமார். சதீஷ்குமாரின் தந்தை விவசாயத்தால் பலன் கிடைக்காத நிலையில், பால் வியாபாரத்தைத் தொடங்கினார். நஷ்டம் ஏற்பட்டதால், பால் வியாபாரத்தை விட்டுவிட நினைத்த தந்தையிடம், எட்டாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு பால் வியாபாரத்தை தனது பொறுப்பில் எடுத்துக்கொள்வதாக கூறினார் சதீஷ்குமார்.
பின்னர் பால் வியாபாரத்திலிருந்து விடுபட்டு, பால் பொருட்கள் தயாரிப்பில் இறங்கினார் சதீஷ்குமார். பால் பொருட்கள் தயாரிப்பு இரண்டு வருடத்தில் சூடுபிடித்தது. சில்லறை வர்த்தகத்தில் தடம்பதிக்க விரும்பியபோது, ப்ராண்ட் பெயர் தேவைப்பட்டது. ப்ரவுசிங் செண்டருக்கு போய், சரியான மக்களைச் சென்றடையக் கூடிய ஒரு ப்ராண்ட் பெயரை தேடியிருக்கிறார் சதீஷ். மில்க்கி மிஸ்ட் என்ற வார்த்தையைப் பிடித்திருக்கிறார். இது பற்றி அவர், "சுலபமாக நினைவில் வைக்கவும், உச்சரிக்கவும் வசதியாக இருந்த மில்க்கி மிஸ்ட் தான் இனி எனது தயாரிப்புகளின் பெயர் என முடிவு செய்தேன். எனது ப்ராண்ட்டின் பெயர் மதத்தையோ வேறு எந்தவித அடையாளத்தையோ சார்ந்ததாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்” என்கிறார்.
பின்னர் தனது பால் பண்ணையை பன்னீர் பண்ணையாக மாற்றி, ”மில்க்கி மிஸ்ட்” என்ற பெயரைச் சூட்டினார்.
2013-14 ஆண்டுகளில் மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் 121 கோடி ரூபாய். இந்த வருடம் 220 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கிறார். அது மட்டுமல்ல 2020-இல், மில்க்கி மிஸ்ட் 3000 கோடி லாபம் வருமானம் ஈட்ட வேண்டும் என விரும்புகிறேன் என்றும் சொல்கிறார் சதீஷ்குமார்.