வறுமையை திறமையால் வென்று காட்டிய வெற்றித்திருமகன் மாரியப்பன் தங்கவேலு. 2016 பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தங்கமகனாய் ஜொலிக்கும் அவருக்கு புதிய தலைமுறை விளையாட்டுபிரிவிற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருதை வழங்கியுள்ளது.
மாரியப்பன் தங்கவேலு சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் பிறந்தவர் மாரியப்பன். குடும்பத்தை அப்பா உதறிவிட்டுச் செல்ல, அம்மா சரோஜா செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலைபார்த்து, காய்கறிகள் விற்று கிடைக்கும் சொற்பப் பணத்தில் குடும்பத்தை நகர்த்தினார். விதி விபத்தாய் விரட்டியது. ஐந்தாவது வயதில் பள்ளி செல்லும்போது பேருந்து மாரியப்பனின் வலது காலில் ஏறியது. முழங்காலுக்குக் கீழே காலை இழந்தார் மாரியப்பன்.
காலை இழந்த மாரியப்பனுக்கு தன்னம்பிக்கை துளிர்த்தது. விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டினார். பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் வழிகாட்டுதலில் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார் மாரியப்பன். 2013ம் ஆண்டு தேசிய மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்துகொண்டார். அவரது திறமைகளை அறிந்த பயிற்சியாளர் சத்தியநாராயணா மாரியப்பனுக்கு பயிற்சியளிக்க முன்வந்தார். 2015-இல் பெங்களூருவில் உள்ள சத்தியநாராயணாவின் பயிற்சி நிறுவனத்தில் இணைந்தார் மாரியப்பன்.
2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் டுனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி ரியோ மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார் மாரியப்பன். ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தங்கமகனாக வலம் வருகிறார் மாரியப்பன்.
2016-பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்காக, 2017-இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது மாரியப்பனுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசு வழங்கிய 2 கோடி ரூபாய், இளைஞர் விளையாட்டுத்துறையிடமிருந்து ரூ. 75 லட்சம், சமூக நீதி அமைச்சகத்திடமிருந்து ரூ. 30 லட்சம், சச்சின் டெண்டுல்கர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம், யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ரூ.10 லட்சம், டெல்லி கோல்ஃப் மையத்திடமிருந்து ரூ.10 லட்சம் என அவருக்குப் பரிசுத் தொகை குவிந்தது.