ஓடிடி திரைப்பார்வை 17: அன்பு, தனிமை, வெறுமை - எப்படியிருக்கு புத்தம் புதிய காலை விடியாதா?

ஓடிடி திரைப்பார்வை 17: அன்பு, தனிமை, வெறுமை - எப்படியிருக்கு புத்தம் புதிய காலை விடியாதா?
ஓடிடி திரைப்பார்வை 17: அன்பு, தனிமை, வெறுமை - எப்படியிருக்கு புத்தம் புதிய காலை விடியாதா?
Published on

கடந்த 2020ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது 'புத்தம் புது காலை' ஆந்தாலஜி. சுதா கொங்காரா,கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ்மேனன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியிருந்த 5 கதைகள் கொரோனா ஊரடங்கை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. அந்த வகையில் தற்போது அதன் இரண்டாம் பாகம், 'புத்தம் புது காலை விடியாதா' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, சூர்யா கிருஷ்ணா மற்றும் ரிச்சர்டு ஆண்டனி ஆகியோர் இயக்கி உள்ள 5 கதைகளும் தனிமை, நம்பிக்கை, காதல், புதிய தொடக்கம், உறவுகளை ஊரடங்கு என்ற மையப்புள்ளியில் வைத்து சுழல வைத்திருக்கிறது. இந்த படங்கள் குறித்து பார்ப்போம்.

முகக்கவச முத்தம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் டீஜே (Teejay) கௌரி கிஷன் நடித்திருக்கும் முதல் எபிசோட் முகக்கவச காதல். மிகவும் சிம்பிளான கதை. இரண்டு காவலர்களுக்கு இடையே மலரும் காதலும், அதையொட்டி நிகழும் சம்பவமும் தான் முகக்கவச காதல். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மேலோட்டமாக பேசிவிட்டு, காதலுக்குள் நுழைந்திருக்கிறார் பாலாஜி மோகன். எந்தவித சுவாரஸ்யமும் இல்லாத தட்டையான திரைக்கதை படத்தை தொடர்ந்து பார்ப்பதில் சோர்வைத்தருகிறது. டீஜேவும், கௌரி கிஷனும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவர்கள் இருவருக்கும் காவலர் கதாபாத்திரம் பொறுந்தாமல் துருத்திக்கொண்டிருந்தது. படத்தின் திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கலாம் என தோன்றுகிறது. புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜியின் முதல் எபிசோட் ஏமாற்றத்தையே கொடுத்தது.

லோனர்ஸ்:

ஹலிதா சமீம் இயக்கத்தில் லிஜோமோல், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள இரண்டாவது எபிசோட் லோனர்ஸ். காதல்தோல்வியிழும், நட்பின் இழப்பாலும் வாடும் இருவர் ஒருவரையொருவர் சந்தித்து ஆறுதல் சொல்லி நெருக்கமானால் எப்படியிருக்கும் என்பதை தனது வழக்கமான திரைக்கதையின் வழியே படைப்பாக்கியிருக்கிறார் ஹலிதா சமீம். காதல் தோல்வியில் உழலும் லிஜோ மோலை காதல்தோல்வியுடன், கொரோனா ஊடங்கும் சேர்த்து அழுத்துகிறது. நண்பனின் இழப்பு அர்ஜூன் தாஸை மன உளைச்சலுக்கு ஆளாக்க வீடியோகால் வழி பிறக்கிறது ஆறுதல். 'உலகத்தின் சிறந்த போதை பேச்சு போதை' என்பதை தன் முந்தைய படங்களில் கூறிய ஹலிதா சமீம், இந்த கதையில் 80% உரையாடல்களை வைத்திருக்கிறார். ஆண் என்றால் பெரும்பாலும் காதல் தோல்வி, இழப்பை நினைத்து உருகுபவராகவே காட்சிப்படுத்திவரும் சூழலில், நண்பனின் பிரிவை எண்ணி தவிக்கும் களம் புதிதாகவே இருந்தது. வீடியோகால் திருமணங்கள் கொரோனா ஊரடங்கின் கொடூரத்தை போகிற போக்கில் பதிவு செய்தது.

மெளனமே பார்வையாய்

முந்தைய படத்தில் பெரும்பாலும் உரையாடல்கள் என்றால், 'மௌனமே பார்வையாய்' எபிசோட்டில் உரையாடலே இல்லை. ஒரு வார்த்தை கூட இல்லாமல் அட்டகாசமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா. ஜோஜூ ஜார்ஜ், நதியா இருவரின் நடிப்பும் சிறப்பான முறையில் இருந்தது. கணவன் மனைவிக்குள் சிறிய சண்டையும், அதையொட்டி நிகழும் சம்பவங்களும் தான் கதை. இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளாத காதல் நிழலாடும் விதம் அழகாகவே இருந்தது. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே சமூக இடைவெளி உருவாகியிருந்ததை காட்சிப்படுத்தியிருந்தார்கள். திரைக்கதையில் சேர்க்கப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்க வைத்தன. நதியில் தவழும் இலையைப்போல படம் அதன்போக்கில் பெரிய திருப்பங்கள் இல்லாமல் நகர்கிறது.

தி மாஸ்க்

சூர்யா கிருஷ்ணன் இயக்கி உள்ள தி மாஸ்க் கதையில் சனந்த், திலிப் சுப்புராயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தன்பால் ஈர்ப்பாளரின் காதல் குறித்து பேசுகிறது படம். இடையில் பழைய நண்பர் ஒருவரை சந்திக்கிறார் நாயகன் சனந்த். அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் தான் தி மாஸ்க். சமூகத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் பொய்யான முகமூடி ஒன்றை அணிந்துகொண்டே வாழவேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்த்த இந்த டைட்டிலை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து போகிற போக்கில் தொட்டுவிட்டு போகிறதே தவிர, அதன் சிக்கல்களை முழுமையாக பேசவில்லை. சனந்த், திலிப் சுப்புராயன் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால், படத்தின் கலர் டோனில் இருக்கும் வித்தியாசத்தை திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம் என தோன்றுகிறது. அங்காங்கே நகைச்சுவையை முயற்சி செய்து அதும் பலனளிக்கவில்லை. கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்கவேண்டிய தேவையை தி மாஸ்க் உணர்த்துகிறது.

நிழல் தரும் இதம்

ரிச்சர்ட் ஆண்டனி இயக்கத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, நிர்மல் பிள்ளை ஆகியோர் நடித்துள்ள கதை நிழல் தரும் இதம். ஐஸ்வர்ய லட்சுமி
ஒற்றை ஆளாக நின்று கதையை தாங்குகிறார். பெற்றோரின் அன்புக்காக ஏங்கி, தனிமையை துணையாய் கொண்டு வாழ்ந்த மகள் ஒருவரின் உணர்வு கிழிசல்கள் தான் நிழல் தரும் இதம். பொறுமையாக நகரும் திரைக்கதை சோர்வைத்தருகிறது. பாசத்தில் ஏங்கும் மகளின் உணர்ச்சியை கதைக்களமாக கொண்ட முயற்சி, அதன் திரைக்கதையில் சொதப்பியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com