காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங், இவர் பாஜகவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. காங்கிரஸ் – சிரோமணி அகாலிதளம் – அம் ஆத்மி என்று மும்முனை போட்டியில் உள்ள பஞ்சாப் அரசியலில் இந்த புதிய கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்துமா?
காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பஞ்சாப் மாநிலத்தை ஒன்பதரை வருடங்கள் ஆட்சி செய்தவர் 80 வயதான கேப்டன் அமரீந்தர் சிங். இவர் தன்னிச்சையாக செயல்படும் தன்மை கொண்டவர் என்பதால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையான சோனியா காந்தி குடும்பத்துடன், குறிப்பாக ராகுல் காந்தியுடன் நட்புறவு இருந்ததில்லை.
கடந்த வருட கொரோனா பாதிப்பு காரணமாக பஞ்சாப் மாநில பொதுமக்கள் அம்ரீந்தர் அரசு மீது அதிருப்தியுடன் உள்ளார்கள் என பல காங்கிரஸ் தலைவர்கள் சமீப காலமாக புகாரளித்து வந்தனர். இந்தப் புகார்களின் பின்னணியில் இருந்தவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் நெருக்கமாக பழகி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் கட்சி அம்ரீந்தர் சிங் தலைமையில் செயல்பட்டால் அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என அவர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸுக்கு தான் தலைமையேற்று கட்சிக்கு வெற்றி பெற்றுத் தருவேன் என அவர்களிடம் சித்து உறுதியளித்ததன் விளைவாக, அவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கட்சித் தலைமையின் முடிவுகளால் கடும் கோபமடைந்த அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பட்டியலினத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் புதிய பஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
புதிய கட்சி தொடங்கும் கேப்டன்:
காங்கிரஸ் தலைமை தன்னை அவமதித்துவிட்டதாக சொல்லிவரும் அம்ரீந்தர் சிங், புதிய கட்சியினை தொடங்கவுள்ளதாகவும், கருத்தொற்றுமை உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசியலில் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அம்ரீந்தர் சிங் சந்தித்தது பரபரப்பை உருவாக்கியது. அப்போது முதலே அம்ரீந்தர் புதிய கட்சியை தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என்று பரவலாக பேசப்படுகிறது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் தனக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு உள்ளது என்று நம்புகிறார் அம்ரீந்தர் சிங். தனியாக கட்சி தொடங்கி செயல்படும் பட்சத்தில் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் தன்பின்னால் வருவார்கள் என்றும் கணக்கு போடுகிறார் கேப்டன். தனது சொந்த செல்வாக்கு மற்றும் பாஜக உள்ளிட்ட சில கட்சிகளுடனான கூட்டணி மூலமாக ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதே அம்ரீந்தரின் கனவாக இருக்கிறது, அதற்கான காய்களையும் அம்ரீந்தரும், பாஜகவும் நகர்த்த தொடங்கியுள்ளது. அம்ரீந்தர் புதிய கட்சி தொடங்கும் முடிவை பாஜக வரவேற்றுள்ள சூழலில், காங்கிரஸ் அம்ரீந்தரை “ தேசதுரோகி” என விமர்சித்துள்ளது. சிரோமணி அகாலிதளம் கட்சி அம்ரீந்தரை பாஜகவின் ‘பி டீம்’ என விமர்சித்துள்ளது.
அம்ரீந்தரின் புதிய கட்சி – பஞ்சாப் நிலவரம் என்ன?
சீக்கியர்கள் அதிகம் உள்ள பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலிதளம் இரண்டும்தான் முக்கியமான கட்சிகள். 2012 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலிதளம் கட்சியை கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது. இந்த தேர்தலில் 117 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் 77 இடங்களிலும், ஆம் ஆத்மி கூட்டணி 22 இடங்களிலும், அகாலிதளம் – பாஜக கூட்டணி 18 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலின் மூலமாக பஞ்சாபின் முக்கிய கட்சியாக ஆம் ஆத்மியும் உருவெடுத்தது.
கடந்த தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த சிரோமணி அகாலிதளம், 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது சிரோண்மணி அகாலிதளம் தனியாக தேர்தலை சந்திக்கவுள்ளது, ஆம் ஆத்மி கட்சி பட்டியலின மக்களை கவர பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 30% க்கும் மேல் வாக்கு வங்கி உள்ள பட்டியலின சமூகத்தினரை கவரும் நோக்கத்துடன் பட்டியலினத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக்கியுள்ளது காங்கிரஸ். தற்போதைய சூழலில் பஞ்சாப் நிலவரம் காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மிக்கு சாதகமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அம்ரீந்தர் சிங்கின் புதிய கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அது ஒருவேளை காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியில் பாதிப்பினை உருவாக்கினால் அது ஆம் ஆத்மிக்கே சாதகமாக முடியும். மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியதால் பாஜக அரசு மீது பஞ்சாப் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி உருவானால் ஒருவேளை அவர்களின் கோபம் அம்ரீந்தர் மீது முழுமையாக திரும்பும், இதுபோல நடந்தால் அது காங்கிரஸ்க்கு சாதகமாக வாய்ப்பு உள்ளது என கணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.