சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்காக சுவர்களை வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்திய மருத்துவமனை

சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்காக சுவர்களை வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்திய மருத்துவமனை
சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்காக சுவர்களை வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்திய மருத்துவமனை
Published on

மூன்றாவது அலையில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் அதிகமிருக்கலாம் என கணிக்கப்படுவதால், அவர்கள் மருத்துவமனை வந்தால் அவர்களை எப்படியெல்லாம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் கவனிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கையாக பல மருத்துவமனைகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. அந்தவகையில் குழந்தைகள் தங்கள் மருத்துவமனைக்கு வந்தால் அவர்கள் பாதிப்பு அச்சமின்றி சிகிச்சை பெறுவதற்காக வண்ண வண்ண ஓவியங்களுடன் பள்ளி சூழலை பிரதிபளிக்கும் வகையில் சிறார் விரும்பும் விதவிதமான கார்டூன் ஓவியங்களுடன் தயாராகி வருகின்றது புதுச்சேரி அரசு கோவிட் மருத்துவமனை.

சிறார்களின் மருத்துவமனை பயத்தை போக்கும் எண்ணத்தை மாற்றும் வகையில், வண்ண ஓவியங்களுடன் கூடிய சூழலை தன்னார்வு அமைப்பினருடன் இணைந்து ஏற்படுத்தியுள்ளனர் இந்த மருத்துவமனை நிர்வாகத்தினர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. தினசரி தொற்று 100க்கும் கீழ் பதிவாகி வரும் நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தொற்று பரவலை தடுக்கவும், தாக்கத்தை குறைக்கவும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒரு பக்கம் தீவிரமடைந்துள்ளது.

அதே நேரம் மூன்றாம் அலையை எதிர்கொள்ளவும் அரசு பல்வேறு வகையில் தயாராகி வருகின்றது. அதிலும் இந்த மூன்றாவது அலை குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளை பாதுகாக்கவும், தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பொதுவாக மருத்துவமனை என்றால் பெரியவர்களுக்கேகூட அச்சம் ஏற்படும். அதிலும் கொரோனா சிகிச்சை எனும்போது சொல்லவே வேண்டாம். பெரியவர்களுக்கே இப்படி என்றால் சிறார்கள் மனநிலை எப்படி இருக்கும்...? தொற்று பாதிக்கும் குழந்தைகள் எப்படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்கள், மருந்துகளுக்கும் மருத்துவர்களுக்கும் எப்படி ஒத்துழைப்பார்கள் என்ற எண்ணத்தில் மருத்துவமனையை பள்ளி சூழல் மற்றும் குழந்தைகளின் விரும்பும் வண்ண மயமான, விளையாட்டுத்தனமான எண்ண சூழலை கொண்டு வர முயற்சித்துள்ளார்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரும், புதுச்சேரியை சேர்ந்த தன்னார்வலர்களும்.

புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருந்துவக்கல்லூரி மருத்துவமனை முற்றிலும் கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டு இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப்பெற்றுள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் இங்கு உள்ளன. இந்த மருத்துவமனையில் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகள் மேலும் தயார்படுத்தப்பட்டு மூன்றாம் அலையை எதிர்கொள்ளவும், குறிப்பாக குழந்தைகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்கவும் அதன் கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றார்கள்.  

இந்த நிலையில் ஒருவேளை தொற்று பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளின் மனநிலைக்கு ஏதேனும் சிக்கல் வருமோ என்று எண்ணி, அதற்கேற்ப மருத்துவமனையின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்க வேண்டும் என ‘பெயிண்ட் பாண்டிச்சேரி’ என்ற அமைப்பின் தன்னார்வலர்களுக்குத்தான் முதலில் தோன்றியுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி சுகாதாரத்துறை அனுமதியை பெற்றுள்ளனர். இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சை பெறும் அனைத்து வார்டுகளையும் வண்ண வண்ண ஓவியங்களால் வரைந்து பள்ளி வகுப்பறைகள் போன்று அவர்கள் மாற்றி அசத்தியுள்ளார்கள். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

பொறியாளர்கள், மருத்துவர்கள், பணிபுரியும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமான தன்னார்வளர்களை இந்த பெயிண்ட் பாண்டிச்சேரி அமைப்பை சேர்ந்தவர்கள் இதற்கு முன்னரும்கூட  ஏராளமான பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகளுக்கு வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து மாணவர்கள் வெகுவாக கவர்ந்தவர்கள்.

- ரஹ்மான் | ஒளிப்பதிவாளர்: ஸ்ரீதர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com