’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!

’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
Published on

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, காரைக்காலைச் சேர்ந்த ’எழிலரசி’ சமீபத்தில் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனை சந்தித்து பாஜகவில் இணைந்திருப்பது விமர்னங்களை கிளப்பியுள்ளது. இதனால், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்,  

குற்றப் பின்னணியுடைய எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளதே?

ஒரு கட்சியின் தலைவரை சந்திக்க எத்தனையோ பேர் வருவார்கள். அப்படி வந்து சந்திப்பவர்கள் எல்லோரும் கட்சியின் உறுப்பினர் ஆகிறார்கள் என்று நினைப்பது தவறான சிந்தனை. பாஜகவில் ஆன்லைன் மூலம் யார் வேண்டுமென்றாலும் எங்கிருந்தும் இணைந்து கொள்ளலாம். நேரில் வந்துதான் இணையவேண்டும் என்ற அவசியமில்லை. எழிலரசி மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்து ‘பாஜகவில் இணைய விருப்பம் இருக்கிறது’ என்று தெரிவித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது? அவர், இன்னும் கட்சியில் முறைப்படி இணையவுமில்லை. உறுப்பினரும் ஆகவில்லை. நாங்களும் அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவுமில்லை.

   மேலும், ஒரு கட்சியின் தலைவரை லட்சக்கணக்கானவர்கள் வந்து சந்திப்பார்கள். அத்தனைப் பேரின் பின்னணியையும் ஆராய முடியாது. இந்த நடைமுறை எல்லா கட்சித் தலைவர்களுக்குமே நேரும். ஆனால், பாஜக தலைவர்களை வந்து சந்தித்தால் மட்டும் உள்நோக்கத்தோடு பெரிதாக்குவது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. ஒரு கட்சியின் தலைவர், அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று பார்க்கவேண்டுமே தவிர கீழிருக்கும் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

இனிமேல் அவரை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா?

இன்னும் அதுகுறித்து முடிவு செய்யப்படவில்லை. இப்போதைக்கு, அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால், இணைந்துவிட்டார் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்புகிறார்கள்.  இதற்குமுன், புதுச்சேரி பாஜகவில் எத்தனை ரெளடிகள் சேர்ந்துள்ளனர் என்பதை காட்ட முடியுமா? பாஜக எது செய்தாலும் தவறை மட்டும் கண்டுபிடிக்கும் நோக்கில் அரசியல் ஆக்குகிறார்கள்.

புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரையே கொன்றார் என்பதுதான் எழிலரசி மீது அனைவருக்கும் வைக்கும் முக்கியமான விமர்சனம். மேலும், அவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதே?

அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எழிலரசி தாதா கிடையாது. அவரையும் அவரது கணவரையும் ரோட்டில் வெட்டினார்கள். அதில், அவரது கணவர் இறந்துவிட்டார். எழிலரசி படுகாயமடைந்தார். அவர் என்ன பணத்திற்காக கொலை செய்பவரா? அப்படி இருந்தால் சொல்லுங்கள். நான் எழிலரசி தாதா என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எல்லா குற்றப் பின்னணி உடையவர்களுக்கும் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ’குற்றவாளி… குற்றவாளி’ என்று சொன்னால் குற்றவாளியாகத்தான் ஆவார்கள். இந்த சமூகத்தில் பலர் நிறைய தவறு செய்திருப்பார்கள். அவர்களுக்கும் திருந்த ஒரு வாய்ப்பை இந்த சமூகம் கொடுக்கவேண்டும் என்பது எனது கருத்து. பெண் தாதா என்று சொல்லப்பட்ட பூலான் தேவி கட்சியில் இணைந்து எம்.பி ஆகவில்லையா?

     எழிலரசி குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். மற்றக் கட்சிகளில் கூடத்தான் நிறைய குற்றவாளிகள் இருக்கிறார்கள். கட்சிகளிலும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனையெல்லாம் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்தால் மட்டும் ஏன் பெரிதாக்க வேண்டும்?. பாஜகவில் சமூக சேவை செய்பவர்கள் சேரும்போதெல்லாம் ஏன் கண்டுகொள்வதில்லை?. இதற்கு, மட்டும் விமர்சனம் வைப்பது உள்நோக்கம் கொண்டது. எத்தனையோ பேருக்கு நம் பிரதமர் மோடியை பிடிக்கும். அவரது நல்ல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன.

அப்படி இருக்கும்போது, சிறை சென்றவர்களுக்கும் பிடிக்காதா என்ன? திருந்தி வாழவேண்டும் என்று நினைப்பார்கள். நேற்று கொலை செய்துவிட்டு இன்று கட்சியில் இணைந்தால்தான் விமர்சிக்க வேண்டும். எழிலரசி பிரச்சனை ஏற்கனவே, நடந்த சம்பவம். அதற்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்கப் போகிறது. அவர் நேரடியாக களத்தில் இறங்கி கொன்றாரா என்பதெல்லாம் இன்னும் உறுதியாக நிலையில் அவரை ’பெண் தாதா’ என்கிறார்கள். அரசியலுக்கு ஒரு பெண் வருவதை தவறாக சொல்லக்கூடாது.

குற்றப் பின்னணி உடையவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே பாஜகவில் இணைகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

பாஜக எந்த காலத்திலும் குற்றவாளிகளை காப்பாற்றாது. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். யார் தவறு செய்தாலும் தவறுதான். எப்போதும் குற்றவாளிகளை பாஜக காப்பாற்றியதாக சரித்திரமே கிடையாது. பாஜக எம்.எல்.ஏ தவறு செய்தார் என்று கைது பண்ணிய சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளதே? யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் கட்சி, எங்கள் கட்சி கிடையாது

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com