ஒரு சிறு தீப்பொறி, காட்டை அழிக்கும். ஆனால், தன்னை அழித்துக்கொள்ளும் நிலையிலிருப்பவருக்கு ஒருவர் தரும் சிறு ஆறுதலும் அவரது உயிரைக் காக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் தற்கொலை செய்துகொண்டு தங்களது உயிரைவிட்டவர்கள் எண்ணிக்கை 16,839 பேர். ஆனால் அதே ஆண்டு நடந்த சாலை விபத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,059 பேர் என்கிறது காவல்துறையின் பதிவேடு. விபத்தால் இறப்போரைவிட, கிட்டத்தட்ட இரு மடங்கு நபர்கள் தங்களது முடிவைத் தாங்களே தேடிக்கொள்ளும் நிலை இங்கு இருக்கிறது. ஆனால் அது ஒரு கன நேரத்தில் எடுக்கும் முடிவல்ல. அதேசமயம், இன்றைய வாழ்க்கைச் சூழலில் தற்கொலை முடிவுக்கு ஒருவரைக் கொண்டுசெல்ல பல்வேறு காரணிகள் இருக்கின்றன என்பதையும் மருத்துவர்கள் விளக்குகின்றனர். மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள், நெருக்கடிகள் போன்வற்றை ஒருவர் ஆற்றுப்படுத்தினாலே, அந்த எண்ணங்களில் இருந்து வெளியேறிவிட முடியுமென்கின்றனர் மருத்துவர்கள். கடும் மன அழுத்தத்தில் இருப்பவர் அதைப்பற்றி பேசுவதும், அப்படி பேசுபருக்கு நாம் அளிக்கும் சிறு ஆறுதலுமே, வாழ்க்கை மீதான பற்றுதலை ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
விபத்தால் ஏற்படும் மரணத்தைவிட தற்கொலை அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தற்கொலை என்பது நொடி நேரத்தில் எடுக்கப்படும் முடிவு கிடையாது என்றும் கூறுகின்றனர். இதுகுறித்து மனநல மருத்துவர் சிவபாலன் கூறும்போது, ‘’தற்கொலை என்பது ஒரு கணநேரத்தில் எடுக்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் வந்ததற்கு பிறகிலிருந்து தற்கொலை செய்துகொள்ளும் வரை அது ஒரு நீண்ட பாதை. பெரும்பாலான நேரங்களில் தற்கொலை எண்ணம் வந்தவுடன் தற்கொலை செய்துகொள்வதில்லை. இந்த நீண்ட பாதையில் அவர்கள் பல மனிதர்களை சூழல்களை கடந்து வருகின்றனர். எப்போது சக மனிதர்கள் மீதும் சமூகத்தின்மீதும் முற்றிலுமாக நம்பிக்கை இழக்கிறார்களோ, எப்போது உதவியற்ற நிலையை உணர்கிறார்களோ அப்போதுதான் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்’’ என்கிறார்.
தற்கொலை எண்ணங்களுக்கான காரணங்களை மனநல மருத்துவர் ஜெயஸ்ரீ விளக்குகிறார். ’’தற்கொலை எண்ணத்திற்கு உயிரியல் காரணிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வம்சாவளி, மனநிலை மற்றும் சமூகம் ஆகிய மூன்று முக்கிய காரணிகள் இருப்பதாக ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது. விவசாயி தற்கொலை, தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை போன்ற செய்திகளை நாம் படிக்கிறோம். இவை சமூக காரணிகள் என்று சொல்லப்படுகிறது. எனவே சமூகத்தில் உள்ள அனைவரும் இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க தங்களாலான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் தற்கொலை தடுக்க வேண்டும்.
பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் திருநாவுக்கரசு கூறும்போது, ‘’தற்கொலை எண்ணம் எல்லோருக்கும் வருவதுதான். அதைப்பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்த எண்ணம் மேலும் மேலும் தோன்றி நம்மை சிரமப்படுத்தும்போது நிச்சயம் அது மனநலப்பாதிப்பின் அறிகுறியாகும். இதை மனநோய் என்று முடிவு செய்துகொள்ளக் கூடாது. மனநல பாதிப்பு என்பது வேறு; மனநோய் என்பது வேறு. எனவே அவர்கள் உடனடியாக ஒரு மனநல ஆலோசகரை அணுகி நல்ல மனநலத்துடன் வாழ்ந்தால் இந்த தற்கொலை எண்ணத்தை எளிதாக சமாளிக்கமுடியும்" என்கிறார்.